இயக்கு நிலையில் இருந்து இயங்கு நிலைக்கு

உலகில் இயற்கை வளம் மிக்க, நிலவளம் மிக்க நாடு களில் பலவும் வளர்ந்த நாடுகளாகத் திகழ்கின்றன. ஆனால் அத்தகைய வளங்கள் எதுவுமே இல்லாமல் குறுகிய காலத்தில் வளர்ந்த நாடுகளையே வியக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்த நாடு சிங்கப்பூர். நில வளமோ நீர்வளமோ இதர இயற்கை வளங்களோ எதுவும் இல்லை என்றாலும் தனது மனிதவளத்தை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறிய நாடாக இருக்கும் சிங்கப்பூர், உலகில் அதிக வருவாய் தரும் பொருளியலைத் தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

தொழில் நடத்துவதற்கு மிகவும் உகந்த தோழமை விதிமுறைகளைக் கொண்ட நாடு. உலகில் அதிக போட்டித்திறன்மிக்க நாடு. ஏறக்குறைய உலகின் எல்லா பகுதிகளோடும் தாராள வர்த்தக தொழில் உடன்பாடு களை எட்டியுள்ள, ஏற்றுமதியைச் சார்ந்துள்ள நாடாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையானபடி வேகமாக மாறிக்கொண்டு தொடர்ந்து வளர்ச்சி காணும் உத்தி யைக் கடைப்பிடிப்பது அதன் தாரக மந்திரம். இப்படித் தான் அந்த நாடு தனது முதல் அரை நூற்றாண்டு காலத்தில் பல பொருளியல் சாதனைகளை நிகழ்த்தி வளர்ந்த நாடுகளையே வியக்கவைத்தது. அந்த நாடு இப்போது தன்னுடைய அடுத்த அரை நூற்றாண்டுப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. இப் புதிய பயணத் தொடக்கத்தில் சிங்கப்பூர் பார்க்கும் உலகம், குறிப்பாக உலகப் பொருளியல் முன்புபோல் இல்லை. தலைகீழ் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. பொருளியல் போக்கு, பெரிய வளர்ந்த நாடுகளே தடுமாறும் அளவுக்கு முற்றிலும் மாறுகிறது.

தொழில்துறைகள் பெற்றுவருகின்ற பரிணாம உரு மாற்றம், அடையாளம் தெரியாத அளவுக்கு அந்தத் துறைகளை அடியோடு மாற்றிவிடும்போல் இருக்கிறது. இதை எல்லாம் மனதில் நிறுத்தி தன்னுடைய எதிர்கால பொருளியலுக்காக ஒரு குழுவை சிங்கப்பூர் அமைத்து இருக்கிறது. நாடு பொருளியல் துறையில் போகவேண்டிய இடம், போகவேண்டிய பாதை, போகவேண்டிய பாணி எல்லாவற்றையும் வரையறுப்பது ‘எதிர்கால பொருளியல் குழு’ என்ற 30 பேரைக் கொண்ட அந்தக் குழுவின் பணி. சிங்கப்பூர் எதிர்காலத்துக்கு ஏற்ற நிலைக்கு மாறிக்கொள்ள உதவுவது; அதன்மூலம் அதன் பொருளியலைப் போட்டிதிறன்மிக்கதாக வைத்திருப்பது; வளர்ச்சிக்கான துறைகளை, வாய்ப்புகளை அடையாளம் காண்பது எல்லாம் அந்தக் குழுவின் நோக்கம்.

சிங்கப்பூரின் பொருளியல் இனிமேலும் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையைப் போல் மட்டும் இருக்க முடியாது என்று அந்தக் குழு கருதுகிறது. விமான ஓடுபாதை போல் பொருளியல் ஆகவேண்டும் என்று குழு கருதுவதாக அக்குழுவில் இடம்பெற்றுள்ள தற்காலிக கல்வி அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார்.

அதாவது நிறுவனங்களின் தலைமையகங்கள் அமைந்துள்ள, தொழில் உத்தித் திட்டங்கள் தீட்டப் படுகின்ற இடமாக மட்டும் சிங்கப்பூர் இனி இருக்க முடியாது. சிங்கப்பூரில் புதுப்புது யோசனைகள் உதிக்க வேண்டும். தொழில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.

முடிவில் பொருட்களும் சேவைகளும் இங்கிருந்து தொடங்கி வட்டாரச் சந்தையை, உலகச் சந்தையை எட்ட வேண்டுமென்றார் அமைச்சர். இயக்கும் நிலையிலிருந்து இயங்கும் நிலைக்கு பொருளியல் மாறவேண்டும்.

இந்த நிலைக்கு சிங்கப்பூர் மாற வேண்டும் என்றால் அதற்கு வேறுபட்ட தேர்ச்சிகள் தேவை. தொழில் ஆபத்துகளை எதிர்த்து நிற்கும் துணிச்சல் வேண்டும். புதுப்புது யோசனைகள் உதிக்க வேண்டும். ஐக்கிய உணர்வுடன் மக்கள் சேர்ந்து பாடுபடவேண்டும்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் போன்ற திட்டங்களைச் செவ்வனே பயன்படுத்திக்கொள்வது, இந்த நிலைக்கு மாறிக் கொள்ளவேண்டிய அவசிய அவசரம் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து மக்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஒருவழி என்பது திண்ணம். பூ கட்டுவது முதல் அதிநவீன தகவல்தொடர்புத் தொழில்நுட்பம் வரை பலதரப்பட்ட தேர்ச்சிகளை சிங்கப்பூரர்கள் பெற உதவும் இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்து காலத்துக்கு ஏற்ற, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு தேர்ச்சியையாவது பெற்று, எதிர்கால பொருளியலுக்குப் புறப்பட சிங்கப்பூரர்களாகிய நாம் தயாராவோம். தேர்ச்சிதான் நமக்கு வளர்ச்சி, எழுச்சி.