உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடான அமெரிக்கா வின் 45வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டோனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார். 'அமெரிக்காதான் முதலில்' என்றும் அமெரிக்கர்களைக் கொண்டு பலமிக்க அமெரிக்காவை உருவாக்கப்போவ தாகவும் அமெரிக்கர்கள் நலனுக்கே முதல் முன்னுரிமை தரப்போவதாகவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கப் போவதாகவும் பதவி ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் டிரம்ப் சூளுரைத்து இருக்கிறார்.
பொதுவாக அமெரிக்காவின் அதிபராக ஒருவர் பதவி ஏற்கும் நாள், உலகின் பல பகுதிகளிலும் ராணுவம், பொருளியல், அரசியல் துறைகளில் அமைதி, வளப்பம், நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு நம்பிக்கையை ஏற்படுத் தித்தரும் ஒரு நன்னம்பிக்கை நாளாகவே இதுவரையில் இருந்து வந்து இருக்கிறது.
ஆனால் இப்போது இந்த நம்பிக்கை ஆட்டம் கண்டு, உலக அரசியலில் நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதைபோல் உணரப்படுகிறது. உலகை தன் தோளில் சுமந்து வந்த அமெரிக்கா, அந்தப் பெரும் பொறுப்பில் இருந்து விலகி விடும் என்று பயந்து உலகம் குழம்பிப்போய் நிற்கிறது. அமெரிக்காவில் தொழிலதிபராக, தொலைக்காட்சி நடிகராக, அரசியல்வாதியாக, அதிபர் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டவராக இருந்து மிக சக்திவாய்ந்த அரியா சனத்தில் அமர்ந்துவிட்ட டிரம்ப்பின் சித்தாந்தங்கள், 19வது நூற்றாண்டில் அமெரிக்கா ஒரு பக்கமும் ரஷ்யா மறுபக்கமும் இருந்து பனிப்போரில் ஈடுபட்டுவந்த ஓர் உலகத்தை மறுபடியும் உருவாக்கத் தூபம் போட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
பல தரப்பு தாராள வர்த்தகத்தை ஆதரிக்கவில்லை. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதை விரும்ப வில்லை. சீனாவைப் பிடிக்கவில்லை என்று கூறும் டிரம்ப், அமெரிக்கா தன்னைப்பேணித்தனத்தைக் கைக்கொண்டு தன்னை மட்டும் கவனித்துக்கொள்வதில் தவறில்லை என்றெல்லாம் தேர்தல் பிரசாரம் முதலே தெரிவித்தவர். இருந்தாலும் இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை தனக்கும் அமெரிக்கவுக்கும் ஒத்துவராது என்பதை டிரம்ப் நிச்சயம் புரிந்துகொண்டு தன் சித்தாந்தங்களைப் போகப்போக மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரோ வேறு ஒரு குண்டை போட்டு உலகைத் கதிகலங்க வைத்துவிட்டார்.
உலகில் சட்டமும் ஒழுங்கும் ஆட்சி புரிய வேண்டும், பேரழிவுப் போர் உலகில் மறுபடியும் ஏற்படவே கூடாது என்ற நோக்கத்துடன் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சேர்ந்து புதிய ஓர் உலக ஒழுங்கை ஏற்படுத்தின. சோவியத் யூனியன் விரிவடைவதைத் தடுக்க மேற்கத்திய கூட்டணி யான நேட்டோ அமைப்பு உதயமானது. வேறுபாடுகளுக்கு அமைதியான முறையில் நாடுகள் தீர்வு காண ஐநா போன்ற அமைப்புகள் தோன்றின.
உலக வர்த்தக நிறுவனமாக பின்னர் பரிணமித்த 'பொது வர்த்தக, தீர்வை உடன்பாடு' போன்ற ஏற்பாடு களும் இடம்பெற்றன. கடந்த 70 ஆண்டுகளாக இவை அருமையாகவே செயல்பட்டு வந்து இருக்கின்றன. ஆனால் அதிபர் டிரம்ப், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குச் சில நாட்கள் முன்னதாக அளித்த பேட்டியில், நேட்டோ அமைப்பு காலத்துக்குப் பொருத்த மில்லாமல் போய்விட்டது, அந்த அமைப்பால் இனி பல னில்லை, நேட்டோ உடைந்தால் தனக்குக் கவலையும் இல்லை என்றார்.
குடியேறிகளை அதிக அளவில் அனுமதித்து ஜெர்மனி பிரதமர் தவறுசெய்துவிட்டார் என்றெல்லாம் தெரிவித்தார். இப்படி எல்லாம் பேசி ராணுவம், பொருளியல், அரசியல் ஆகியவற்றில் இதுநாள் வரை இருந்து வந்த உலக ஒழுங்கை உலுக்கிவிட்டு இருக்கிறார் டிரம்ப். அதே வேளையில் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு கதவை அகல திறந்துவிட்டு ரஷ்யாவுக்கு டிரம்ப் கொடி பிடிக்கிறார் என்றே தெரிகிறது.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில், உலகின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக டிரம்ப் இருப்பார் என்று திட்டவட்டமாக நம்ப முடியவில்லை. எந்த வகை உலக ஒழுங்கை டிரம்ப் ஏற்படுத்தப் போகிறார் என்பதும் புரியவில்லை. என்றாலும் அவர் ஏற்படுத்தக்கூடிய புதிய ஒழுங்கு, ராணுவம், அரசியல், பொருளியல் துறைகளில் மறுபடியும் 19வது நூற்றாண்டு பனிப்போர் காலத்துக்கு உலகக் கதவை மீண்டும் திறந்துவிடாது என்றும் ராணுவப் போட்டாபோட்டிக்கு வழி வகுத்து, உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்காது என்றும் நம்புவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை