சிங்கப்பூரின் இன நல்லிணக்கம்

உலகில், இனம், மொழி, சமயம் தொடர்பில் பல நாடு கள் ஒற்றுமையின்றி, பிரிந்து போயிருக்கின்றன. ஆனால் நம் நாட்டின், இன நல்லிணக்கத்தன்மை கிடைத்ததற்கரிய ஒன்று, மதிப்புமிக்க ஒன்று. உலக நாடுகளில் இன நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பது சிங்கப்பூர். அண்மையில் பிரதமர் லீ சியன் லூங், தெலுக் ஆயர் ஸ்திரீட் பகுதியிலுள்ள ஐந்து வழிபாட்டு இடங்களுக்கு நடைப்பயணம் மேற் கொண்டிருந்தார். ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த அந்த இடங்களில் பல சமூகத்தவர் களை அவர் சந்தித்து உரையாடினார்.

தெலுக் ஆயர் ஸ்திரீட்டிலுள்ள மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குப் பிரதமர் முதலில் சென்றார். அங்கு திருச்சபை ஆராதனைக் கூட்டங்கள் இன்னமும் ஹோக்கியன் மொழியிலேயே உள்ளன.

சீனாவின் பூஜியன் மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களுக்காக அச்சேவைகள் தொடங்கப்பட்டன. ஜப்பானிய ஆட்சியின்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலமும் கிடைத்தது. திரு லீ அடுத்து அல் அப்ரார் பள்ளிவாசலுக்குச் சென்றார். அது குடியரசுக்கு வந்த பழைய குடியேறிகளான சோழ நாட்டின் சூலியாக்களுக்கு (பெரும்பாலும் தமிழ் முஸ் லிம்களுக்கு) தொழுகைக்கு உள்ள முக்கிய இடமாக உள்ளது.

பிரதமர் அடுத்து தியான் ஹோக் கெங் ஆல யத்துக்குச் சென்றார். அது குடியரசிலுள்ள மிகப் பழைய ஹொக்கியன் கோவிலாகும். அதன் பக்கத்தில் உள்ள தாவோ கோவிலுக்கும் அவர் வருகை தந் தார். யூ ஹூவாங் கோங் என அழைக்கப்பட்ட அந்த ஆலயம், முன்னர், கெங் டெக் வேய் சங்கம் இருந்த இடத்தில் அமைந்துள்ளது. வரலாற்றின்படி அச்சங்கம், 1831ல் மலாக்காவிலிருந்து வந்த 36 ஹொக்கியன் வணிகர்களால் தொடங்கப்பட்டது. இப்போது அங்கு ஹொக்கியன் பெரானாக்கான் முன்னோர் மண்டபமும் குலமரபு பல்லரங்கும் உள்ளன. பிரதமர் திரு லீ, தாம் மேற்கொண்ட தெலுக் ஆயர் நடைப்பயணச் சுற்றுலாவை நாகூர் தர்க்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் நிறைவு செய்தார். அங்கு தமிழ்நாட்டின் நாகூரில் அடக்கம் கொண்டிருக்கும் ஷாகூல் ஹமீத் ஆண்டகையின் நினைவகம்தான் முன்னர் இருந்தது. தற்போது அங்கு இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் பங்களிப்பை நினைவுகூரும் காட்சியகமும் உள்ளது.

இவற்றைப் பார்வையிட்டபின், பிரதமர் திரு லீ இன நல்லிணக்க நாளின் முதல்நாள், தம்முடைய ஃபேஸ்புக் பதிவில், இது குறித்தும் நம் குடியரசின் மதிப்புகள் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். இன்று நாம் சாதித்துள்ளவை யாவும் தாமாகவே வந்தவை அல்ல என்பதையும் அவர் நினைவூட்டினார். இன்றைய இன நல்லிணக்கம் சாத்தியமானதற்கு அரசாங்கமும் அந்தந்த சமூகமும் கடினமாக உழைத்து அதைச் சாதித்திருக்கின்றனர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

அவரின் பயணத்தில் தாம் கண்ட வேற்றுமை யில் ஒற்றுமை கூடத்தில் வெவ்வேறு சமயங்களுக் கிடையிலான பொதுவான ஒருமைப்பாட்டுக் கயிற் றைக் காட்சிப்படுத்தியிருப்பது, இங்குள்ளோரின் ஒருமைப்பாட்டு ஒத்துழைப்புக்கு நல்ல எடுத்துக் காட்டு என்று திரு லீ கூறியுள்ளார். கோப்பிதியாம் கடையொன்றின் படத்தையும் அவர் தம் பதிவில் இணைத்துள்ளார். பல இன, பல சமயங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் சந்திக்கும் பொது இடமாக அது இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிக்க அமைதியான சிங்கப்பூரை உருவாக்க பாடுபட்டுள்ள உள்துறை அமைச்சு, சமயங்களுக்கு இடையிலான அமைப்பு, சிங்கப்பூரின் பல சமயங்களைச் சேர்ந்த சமூகங்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்கும் பிரதமர் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பல இன, பல சமய, பல மொழி பேசினாலும் ஒன்றுபட்டு நல்லிணக்கத்துடன் வாழும் நம் மக்களை தம் ஃபேஸ்புக் பதிவில் பிரதமர், “பல இன, பல சமய சிங்கப்பூரில் நாம் நீண்ட நெடுங்காலம் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ் வோமாக” என்று குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமையே நம் பலம், இன சமய நல்லிணக்கம் நம் வாழ்க்கைப் பாதை. அதுவே நம் முன்னோர்கள் நமக்கு ஆக்கித் தந்துள்ள வெற்றிப்பாதை.