இலங்கை: அரசமைப்புச் சட்டத்தைப் பந்தாடும் அரசியல்வாதிகள்

தெற்கு ஆசிய நாடான இலங்கையில் சென்ற மாதம் 26ஆம் தேதி முதல் அரசமைப்புச் சட்டம் ஆட்டம் காணும் வகையில் பல செயல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதமர் ஒருவரை, அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டார். அதோடு நின்றுவிடா மல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக அதிபர் நியமித்துவிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து விலக மறுத்துவிட்ட ஒரு நிலையையும் அந்த நாடு சந்தித்தது. பிரதமராகப் பதவியில் இருக்கும் ஒருவர் அந்தப் பதவியிலிருந்து அகலாமல் அதே பதவிக்கு இன்னொரு பிரதமர் இலங் கையில் நியமிக்கப்பட்டதைப் போல் வேறு நாடுகளில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டதால், நாடாளுமன்றத் தையே கலைத்துவிட்டார் அதிபர் சிறிசேன. அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் என் றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிபர் அப்படி என்றால், இலங்கை உச்ச நீதிமன்றமோ, நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது செல்லாது என்று அறிவித்துவிட்டது. அதையடுத்து நாடாளுமன்றம் இரு தடவை கூடியபோது, அடிதடி, ரகளை, மிளகாய்ப் பொடி தாக்குதல் நடந்து மன்றம் நாளை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசமைப்புச் சட்டப்படி நாடாளு மன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே பிரதமராகப் பதவி வகிக்கமுடியும். அந்த நாடாளுமன்றத் தின் முடிவை அதிபரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு நிலை நிகழ்ந்தால் தான் இப்போதைய இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஒரு முடிவு ஏற்படும். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே வுக்கு ஆதரவு இல்லை என்று முடிவாகி இருப்பதை ஏற்க முடியாது என்கிறார் அதிபர். தேர்தல்தான் வழி என்று அவரும் ராஜபக்சே வும் சேர்ந்துகொண்டு சொல்கிறார்கள்.

இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேயின் கட்சி பெரும் இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் ரணில் வென்றார். அதற்குப் பிறகு இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் வெளி நாட்டுக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத் துவம் அளித்து அதன் மூலம் அளவுக்கு அதிக தாராள கொள்கைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த ரணில் முயன்றதன் காரணமாக அவரை தான் நீக்கிவிட்டதாக அதிபர் இப்போது சொல்கிறார். இலங்கையில் சிறிசேன, ராஜபக்சே ஒரு பக்கமும் ரணில் ஒரு பக்கமும் அரசமைப்புச் சட்ட சதுரங்கத்தில் ஒருவரை ஒருவர் வேட்டையாட முயன்றுவரும் சூழலில், நாடு பெரும் அரசியல் குழப்பத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருப்பதாக பல வல்லுநர் களும் எச்சரிக்கிறார்கள்.

அந்த நாட்டில் 2009ல் ரத்தக்களரி பிரி வினைவாதப் போராட்டம் முடிவுக்கு வந்து அமைதி, செழிப்பை நோக்கி நாடு முன்னேறத் தொடங்கிய நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு, அந்தப் போராட்டத்தைவிட மோசமான அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் இப்போது தலைதூக்கி இருக்கும் அடிதடி, ரகளை, வீதிகளுக்கும் விரிவடைந்துவிடக்கூடும் என்று அந்த நாட்டு மக்களிடையே மட்டு மின்றி, உலகின் பல நாடுகளிலும் கவலை நிலவுகிறது. இலங்கையில் ஜனநாயகம் காக் கப்படவேண்டும் என்று மேற்கு நாடுகள் உட் பட உலகம் உரக்கக் குரல் கொடுக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க வேண்டுமானால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதையும் ஏற்கெனவே மன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை இருப்பதை ரணில் மெய்ப்பித்து இருக்கிறார் என்பதையும் கருத் தில் கொண்டு அவரைப் பிரதமராக ஏற்று அரசியல் நடத்துவதே அதிபருக்கு இப் போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக் கும் என்றே தெரிகிறது.

அரசமைப்புச் சட்டத்துக்கே மிரட்டல் ஏற்பட்டு இருக்கும் ஒரு நிலை தொடர்ந்தால் அதை இலங்கை தாங்காது.