சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்

அனைத்துலக அளவில் நற்பெயருடன் திகழும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு உலகுக்குச் சேவை வழங்கி வருகிறது. அந்த நிறுவனம் இரண்டாவது மையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு இன்னும் சிறந்த சேவையாற்றக்கூடிய தகுதியுடன் எப்போதுமே அனைத்துலக அளவில் திகழ்ந்து வருகிறது. 

இந்த இரண்டாவது மையம் என்ற இலக்கை எஸ்ஐஏ நிறைவேற்ற இப்போது காலம் கனிந்து வருவதாகத் தெரிகிறது. எஸ்ஐஏ, இந்தியாவின் விஸ்தாரா நிறுவனத்துடன் பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. விஸ்தாரா, இந்தியாவின் டாடா குழுமத்திற்குச் சொந்தமானது. 

விஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளைக் கொண்டுள்ளது.

இந்திய உள்நாட்டு சந்தையில் கண்வைத்து வந்திருக்கும் விஸ்தாரா, இந்தியாவின் புதுடெல்லி, மும்பை நகர்களில் இருந்து சிங்கப்பூருக்கு அனைத்துலகச் சேவையைத் தொடங்கவிருக்கிறது. 

சிங்கப்பூருக்கு இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் சேவையாற்றுவது இப்போது புதுமையானது அல்ல. இருந்தாலும் விஸ்தாரா என்பது பத்தோடு பதினொன்றாக இருக்காது என்பது உண்மை. 

இந்திய விமான நிறுவனத்துடன் எஸ்ஐஏ நிறுவனம் சேர்ந்து சேவை வழங்கும் விருப்பம் கால்நூற்றாண்டு காலமாக இருந்து வந்தாலும் இப்போதுதான் அது கைகூடுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து விஸ்தாரா செயல் உருவம் பெறுகிறது. 

எஸ்ஐஏ நிறுவனத்துக்கான இரண்டாவது மையமாக இந்தியா உருவெடுக்குமானால் அது உலக கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும், தொழில்துறை, சுற்றுலா மையமாக இந்தியா உலகளவில் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

இது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் ஏற்படும்.

விஸ்தாராவில் எஸ்ஐஏ, டாடா இரண்டு நிறுவனங்களுமே பெரும் பணத்தை முதலீடு செய்து இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஏப்ரலில் முடிவடைந்த 12 மாத காலத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் 40 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை (S$789 மில்லியன்) முதலீடு செய்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ. 56.4 பில்லியன்.  ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா நிறுவனங்களின் சேவைகள் சரியில்லாத நேரத்தில் சரியான வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் டாடா-எஸ்ஐஏ உறவு மலர்ந்து இருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க சந்தைகளில் பல வாய்ப்புகளை விஸ்தாரா செம்மையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். விஸ்தாரா, 50 ஏர்பஸ் ரக விமானங்களுக்கு தருவிப்பு ஆணை பிறப்பித்து இருப்பதாக சென்ற ஆண்டு தெரிவிக்கப்பட்டது. ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 16 விமானங்களை வாங்கவும் விஸ்தாரா ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. 

இவற்றைக் கொண்டு விஸ்தாரா நெடுந்தூரச் சேவைகளை வழங்க முடியும். 

எஸ்ஐஏ நிறுவனம் அதனுடைய வட்டார நிறுவனமான சில்க்ஏர் நிறுவனம், விஸ்தாரா, யுனைட்டெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் விமானங்கள் மாறி எளிதாக பயணத்தைத் தொடரக்கூடிய வசதிகளும் இருக்கின்றன. 

இந்தியாவில் விமான முன்பதிவு இந்த ஆண்டில்  US$34 பில்லியன் (S$46 பில்லியன்) அளவைத் தாண்டும் என்று ஃபோகஸ்ரைட் (Phocuswright) பயண ஆலோசனை நிறுவனம் கணித்து இருக்கிறது.

இந்த அளவு 2022 முடிவில் US$44 பில்லியனைத் தாண்டும் என்று தெரிகிறது. விஸ்தாராவின் மையம் டெல்லியாக இருக்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி தக் சென்ற ஆண்டு தெரிவித்தார். மையத்தை மும்பைக்கு மாற்றுவது குறித்து பரிசீலிப்பது பலனுள்ளதாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. 

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி அரசாங்கம், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் பெரும்பான்மை பாத்தியதையுடன் சேவை வழங்க அனுமதிக்கும் வகையில் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி பேசி வருகிறது. 

இந்தச் சூழல், தனியாக சேவை வழங்கலாம் என்ற எண்ணத்தை வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்றாலும் டாடா போன்ற மிகவும் செல்வாக்கு வாய்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து சேவையாற்றுவதே அநேகமாக விவேகமானதாக இருக்கும். 

விஸ்தாரா விமானிகள் எஸ்ஐஏ விமானங்களில் சேவையாற்றுவார்கள் என்பதால் இந்த ஏற்பாட்டின் மூலம் எஸ்ஐஏ நிறுவனத்தின் விமானிகள் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு குறுகிய காலப்போக்கில் தீர்வுகாண முடியும். 

அதேவேளையில், விஸ்தாரா விமானிகளுக்கு நெடுந்தூரத்திற்குப் பறந்து செல்லும் அனுபவமும் கிடைக்கும். இந்தியா, எஸ்ஐஏ நிறுவனத்துக்கான இரண்டாவது மையமாக உருவெடுக்குமானால் இந்தியாவில் மூன்று சிங்கப்பூர் நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்படும் ஒரு நிலை ஏற்படும். 

அசெண்டாஸ், டிபிஎஸ் வங்கி ஆகியவை இந்தியாவில் முறையே, தரமான அலுவலக இடங்கள் மற்றும் மின்னிலக்க வங்கிச் சேவை ஆகிய துறைகளில் முத்திரை பதித்து வருகின்றன. டாடா-எஸ்ஐஏ கூட்டுக்கும் அதோடு ஆசிய விமானப் போக்குவரத்துத் துறைக்கும் அடுத்த சில ஆண்டுகள் மிக முக்கியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விஸ்தாராவில் பெரும்பான்மை பாத்தியதைக் கொண்டிருப்பதைப்போலவே வலுவான பங்காளித்துவமும் அந்த அளவுக்கு ஈடானதுதான். ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோவும் கால்நூற்றாண்டு காலத்துக்கு முன்பு நிர்ணயித்த இலக்கு இப்போது நிறைவேறத் தொடங்குகிறது, பயணத்துக்கு தயாராகுங்கள்.