அபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் கடந்த சில மாதங்களாகவே தீ விபத்துகள் அதிக அக்கறை காட்டும் அளவுக்கு அதிகரித்து இருக்கின்றன. 

தனிநபர் நடமாட்ட சாதனங்களின் பேட்டரிகளில் மின்சாரம் ஏற்றுவதற்காக வீடுகளில் அவை மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டு இருந்தபோது அவற்றால் ஏற்பட்ட தீ சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கின்றன. 

இவை, நம் வீட்டில் தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்று நம்பி மெத்தனமாக இருந்து வரும் ஏராளமான குடும்பங்களுக்கு எச்சரிக்கை யாகவே தெரிகின்றன. 

சிங்கப்பூரில் 1961ஆம் ஆண்டில்  நிகழ்ந்த புக்கிட் ஹோ சுவீ தீ விபத்துக்கு வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. அந்தச் சம்பவத்தில் ஒரு குடியிருப்பே அழிந்து 2,800 வீடுகள் தீக்கு இரையாகி, நால்வர் மாண்டு, 16,000 மக்கள் வேறு இடங்களுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் உயர உயரமான வீவக அடுக்குமாடி வீடுகள் சரசரவென கட்டப்பட்டு  குடியிருப்புப் பேட்டைகள் உருவாக்கப்பட்டபோது, அந்த வீடுகளில் தீ விபத்தைத்  தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. 

என்றாலும் இப்போதைய சம்பவங்களைப் பார்க்கையில், வீவக குடியிருப்பாளர்கள் தீ விபத்துகளைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இருப்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தவேண்டும் என்பது மிக முக்கியமானதாக ஆகி இருக்கிறது என்று தெரிகிறது. 

சிங்கப்பூரில் அடுக்குமாடி வாழ்க்கை தவிர்க்க முடியாதது. தரை வீடுகளில் வாழ்வதற்கும் அடுக்குமாடி வீடுகளில் வாழ்வதற்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. அடுக்குமாடி வீட்டுவாசிகளுக்கு அதிக பொறுப்புகள் இருக்கின்றன. 

ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எல்லா குடும்பங்களும் விழிப்புடன் இருந்தால்தான் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் உறுதிப்படும்.

அடுத்த வீட்டில்தானே என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட முடியாத சூழலில் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையை யாரும் தவிர்க்க இயலாது. 

மாடி வீடுகளில் குழாய் குப்பைத்தொட்டிகள், குப்பைக்கூடைகள், சமைக்கும்போது அடுப்பை எரியும்படி விட்டுவிட்டு செல்வது போன்றவை தீ மூளுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்து வந்துள்ளன.

என்றாலும் இப்போது மின்சாரத்தில் ஓடும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் அதிக கவலை தரும் அம்சமாக உருவெடுத்து வருகின்றன. இத்தகைய சாதனங்கள் தொடர்பான 74 தீ விபத்துகள் சென்ற ஆண்டில் நிகழ்ந்தன. 2017ல் 51 சம்பவங்கள் நிகழ்ந்து இருந்தன.

அடுக்குமாடி வீடுகளில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க குடியிருப்பாளர்கள் தீ மூளுவதற்கான வாய்ப்புகளை, வழிகளைக்  குறைத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம்.

தீயை முன்னதாகவே உணர்ந்துகொண்டு அதை உடனேயே அணைத்துவிடும் வகையில் வீடுகளில் தானியங்கி புகை மற்றும் வெப்ப  எச்சரிக்கைச் சாதனங்கள் இருக்கவேண்டும். இந்தச் சாதனங்கள் தீ மூண்டால் குடியிருப்பாளர்களை முன்னதாகவே எச்சரித்துவிடும். 

இப்படி எச்சரிப்பதில் வெப்ப எச்சரிக்கை சாதனத்தைவிட புகை சாதனம் அதிக பலன் தருவதாக இருக்கும் என்று கூறும் சிங்கப்பூர் குடிைமத் தற்காப்புப் படை, வீடுகளுக்கு அந்த சாதனத்தைப் பரிந்துரைத்துள்ளது. 

புதிய வீடுகளில் அத்தகைய சாதனம் சென்ற ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. 

இதை இன்னும் விரிவுபடுத்தினால் விரும்பும் பலன் ஏற்படும் என்று நம்பலாம். வீடுகளில் தீயணைப்புச் சாதனம் இருந்தால் அது மிக உதவியாக இருக்கும்.

வீடுகளில் மட்டுமின்றி புளோக்கின் மின் தூக்கிக்கூடம் போன்ற பொது இடங்களில் இத்தகைய சாதனங்கள் இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களும் உதவ ஏதுவாக இருக்கும்.

இவற்றோடு, கட்டாய தீ காப்புறுதிப் பாதுகாப்புக்கு மேலாக, வீட்டில்  எவற்றை எல்லாம் மிக முக்கியமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு அத்தகைய முக்கிய மான பொருட்களுக்குக் கூடுதல் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறுவதும் உகந்ததாக இருக்கும்.

இவை எல்லாம் இருந்தாலும், விழிப்பு நிலையில் இருந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற மனப்பான்மையுடன் குடியிருப்பாளர்கள் அனைவரும் இருந்துவர வேண்டியது மிக முக்கியமானது என்பதை எல்லாரும் உணரவேண்டும். 

இந்தக் காலத்தில் தவிர்க்க இயலாத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் போன்றவை  அடுக்குமாடி வீடுகளில் தீ மூளுவதற்கான மேலும் ஒரு வழி அல்ல என்பதை எல்லாரும் உறுதிப்படுத்தவேண்டும்.