சுடச் சுடச் செய்திகள்

ஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்

சிங்கப்பூரில் 65க்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2030வது ஆண்டு வாக்கில் ஏறக்குறைய 900,000 ஆகிவிடும். அதேவேளையில், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறையப்போகிறது. இவற்றின் விளைவாக ஊழியர் அணியில் முதிய ஊழியர்களின் விகிதாச்சாரம் நிச்சயம் அதிகரிக்கும். வேறு வழியில்லை. 

இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் சென்ற ஆண்டு மே மாதம் முதிய ஊழியர்கள் பற்றிய முத்தரப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, ஊழியர்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட எல்லா தரப்புகளையும் கலந்து ஆலோசித்து அறிக்கையைத் தயாரித்து அதை அண்மையில் வெளியிட்டது.

வேலை ஓய்வு வயதை 62லிருந்து 65 ஆக உயர்த்தவேண்டும். மறு வேலைவாய்ப்பு வயதை 67லிருந்து 70ஆக்கவேண்டும். முதிய ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிச் சந்தாவை அதிகரிக்க வேண்டும். இவற்றை எல்லாம் 2030ஆம் ஆண்டு வாக்கில் படிப்படியாகச் செய்து முடிக்கவேண்டும் என்று அந்தப் பணிக்குழு பரிந்துரைத்து இருந்தது. 

இதனை ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம், வேலை ஓய்வு வயதையும் மறு வேலைவாய்ப்பு வயதையும் முதிய ஊழியர்களுக்கான மசே நிதிச் சந்தாவையும் உயர்த்தப்போவதாக பிரதமர் லீ சியன் லூங் தன்னுடைய தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.

சிங்கப்பூரில் இதற்கு முன்னதாக 1999ல் வேலை ஓய்வு வயது உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே சிங்கப்பூரர்கள்தான் ஆக அதிக ஆயுளுடன் அதாவது 84.8 ஆண்டுகள் வாழ்கிறார்கள். இந்த நிலவரங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் வேலை ஓய்வு வயது, மறுவேலை வாய்ப்பு வயது, முதியோருக்கான சேம நிதிச் சந்தா ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என்ற முடிவு கட்டாயம் என்பது உண்மை நிலவரமாகத் தெரிகிறது. 

இருந்தாலும் இந்தப் புதிய ஏற்பாடுகள் பல சவால்களை எல்லாருக்கும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஊழியர்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலம் வரை தொடர்ந்து கற்றுக்கொண்டே வரவேண்டும். தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் அவர்களுடைய அணுகுமுறை ஆக வேண்டும். இத்தகைய ஓர் அணுகுமுறை அவர்களிடம் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது மட்டும் இருந்தால் போதாது. 

தொழில்நுட்ப மாற்றங்கள் மிக விரைவாக இடம்பெற்று வருவதால் எந்தவொரு சூழ்நிலையிலும் எப்போதும் அவர்கள் இந்த அணுகுமுறையுடன் இருந்துவர வேண்டும்.அதேபோல நிறுவனங்களும் ஊழியர்களின் வயதுக்கேற்ற வேலையிடங்களையும் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நடப்புக்குக் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கும். 

பகுதிநேர வேலை வாய்ப்புகள், வேலை முறைகளைத் திருத்தி அமைப்பது, முதிய ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது, மருத்துவ நன்மைகளுக்குப் புதிய பாணி ஏற்பாடுகள், தாங்களாகவே முன்வந்து வேலை ஓய்வு வயதை உயர்த்துவது போன்ற காரியங்கள் மூலம் ஒரு சில நிறுவனங்கள் சூழ்நிலைக்கேற்ப மாறி இருக்கின்றன. 

இருந்தாலும் மாறவேண்டிய நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அரசாங்கத்தின் புதிய ஏற்பாடுகளை நிறுவனங்கள் வரவேற்று இருந்தாலும் செலவு அதிகரிக்குமே என்று அவை கவலைப்படக்கூடும். ஆனால் கூடுதலாக நிறுவனங்களுக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை ஈடுசெய்ய அரசாங்கம் ஆதரவு திட்டம் ஒன்றை அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்க இருக்கிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, உத்தேசிக்கப்பட்டு உள்ள மாற்றங்கள் எல்லாம் படிப்படியாக நீக்குப்போக்குடன் பல ஆண்டு காலத்தில் நடப்புக்கு வரும் என்பதால் உண்மை நிலவரத்தை உணர்ந்துகொண்டு நிறுவனங்கள் மாறிக்கொள்வதில் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். 

சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. தொழிலாளர் சந்தையும் இறுக்கமாகி வருகிறது. இதுதான் உண்மை நிலவரம். உத்தேசிக்கப்பட்டு உள்ள மாற்றங்கள் இடம்பெறவில்லை என்றாலும்கூட நிறுவனங்களும் ஊழியர்களும் உண்மை நிலவரத்துக்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும். 

இத்தகைய ஒரு சூழலில் அர–சாங்–கத்–தின் புதிய எற்–பா–டு–கள் நிறு–வ–னங்–க–ளுக்–கும் ஊழி–யர்–க–ளுக்–கும் கைகொ–டுத்து இந்–தப் பய–ணத்–தில் அவர்–க–ளின் சுமை–யைக் குறைத்து உறு–துணை–யாக இருக்–கும் என்பதில் ஐயமில்லை.