அடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்

டாக்டர் சித்ரா ராஜாராம்

சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகத்துடன் கூடிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை தலைமைதாங்கி நடத்தும் ஓர் அரிய வாய்ப்பு சென்ற வாரம் எனக்குக் கிடைத்தது. சிங்கப்பூரில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இனம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி மிகவும் ஒளிவுமறைவு இல்லாமல் நடந்த விவாதிப்புகளில் ஒன்றாக அது இருந்தது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொடர்பு, புதிய ஊடகத் துறை ஏற்பாடு செய்த அந்தக் கலந்துரை யாடலின்போது அமைச்சர் தெரிவித்த கருத்துகள், காளையை அதன் கொம்பைப் பிடித்துதான் அடக்கவேண்டும் என்று எல்லாரும் சொல்வதைப் போலவே இருந்தது.

யூடியூப் கலைஞர் பிரித்தி நாயரும் அவருடைய சகோதரரும் பதிவேற்றிய சர்ச்சைக்கிடமான ஒரு காணொளிக் கண்ணோட்டத்துடன் அந்தக் கலந்துரையாடல் தொடங்கியது. சிங்கப்பூரில் அண்மையில் வெளியான ‘‘பிரவுண் ஃபேஸ்’’ விளம்பரத்திற்கு விளக்கம் அளித்து பதிலளிக்கும் வகையில் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அந்த விளம்பரத்தில் சீன நடிகர் ஒருவர் இந்தியராகவும் மலாய் முக உடை அணிந்த ஒரு பெண்ணாகவும் தோன்றியிருந்தார். சீன சிங்கப்பூரர்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளையும் அநாகரிக சைகைகளையும் பயன்படுத்தியதற்காக அந்த உடன்பிறப்புகளை போலிசார் நிபந்தனையுடன் எச்சரித்தனர். அதேவேளையில், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அந்த விளம்பரத்தில் சம்பந்தப்பட்டு இருந்தவர்களுக்கு ஒரு கருத்தை கடுமையான முறையில் நினைவுபடுத்தியது.

இன, சமய உணர்வுபூர்வ அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக முக்கியம் என்று அந்த ஆணையம் நினைவுபடுத்தியது. அமைச்சர் சண்முகம் தன்னுடைய அமைச்சின் செயல்களை கூட்டத்தில் அரும்பாடுபட்டு விளக்கினார்.

வரம்பு மீற நாம் அனுமதித்துவிட்டால் எல்லாரும் அப்படி செய்ய தொடங்கிவிடுவார்கள். சீனர்களும் அதே அளவுக்கு கோபம் அடைவார்கள். அத்தகைய ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் சிறுபான்மையினரே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இனப் பிரச்சினைகளைப் பகிரங்கமாக விவாதிப்பது என்பது ஒருபோதும் எளிதானது அல்ல. அத்தகைய பிரச்சினைகளைக் கண்டும் காணாமல், வேறு அம்சத்துக்கு மாறி அல்லது மௌனமாக இருந்து எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடுவதுதான் போக்காக இருக்கிறது.

ஏன் இப்படி இருக்க வேண்டும்?

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘உயர்கல்வியில் போக்குகளும் பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒரு கட்டுரையை எழுதியவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“நம்மில் ஒவ்வொருவரும் பல சமூகங்களோடும் வெவ்வேறான அடையாளங்களோடும்- இனம் மற்றும் வேறு ஏதாவதோடு- நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவது சங்கடமானதாக இருக்கக்கூடும்.

‘‘உணர்வுபூர்வமான தலைப்புகளைத் தவிர்த்துக்கொள்ளவே நாம் விரும்பக்கூடும். அல்லது நம்முடைய பின்னணிகளையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்வதாக நாம் அனுமானிக்கின்ற நபர்களுடன் பேசி, உரையாடுவதை நோக்கி நமது கவனம் சாயக்கூடும்’’.

அந்தக் கட்டுரை சில எச்சரிக்கைகளை விடுக்கிறது. ‘‘வேறுபாடுகளைப் பற்றி பேசாமல் இருப்பதால் வளர்வதற்கான வாய்ப்புகளை நாமே இழந்துவிடுகிறோம். அதோடு மட்டுமின்றி சவால்களை எதிர்நோக்குவதையும் மற்றவர்களின் அனுபவத்தை முற்றிலும் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளையும் நாம் இழந்துவிடுகிறோம்’’.

கலந்துரையாடல் மட்டுமே அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது. என்றாலும் அது ஒரு நல்ல தொடக்கம்.

அமைச்சர் சண்முகம், மாணவர்கள், கல்வித் துறையினர் ஆகியோர் கலந்துகொண்ட ஒளிவுமறைவு இல்லாத, வெளிப்படையான அந்த 3 மணி நேர கலந்துரையாடல் அதி முக்கியமான ஒரு தொடக்கம்.

அந்த விவாதிப்புக்கு ‘‘பிரவுண் ஃபேஸ்’’ விளம்பரச் சம்பவம் உந்துசக்தியாக இருக்கும் அதேவேளையில், இதர பல ‘‘விலைமதிப்பில்லா அம்சங்கள்’’, இனம் பற்றிய என்னுடைய சொந்தக் கருத்துகளில் சிலவற்றையும் பாகுபாடுகளையும் மறுபடியும் நான் பரிசோதிக்கச் செய்துவிட்டன.

சிங்கப்பூரில் மக்கள் இப்போது முன்பைவிட அதிக இனப் புரிந்துணர்வுடன் இருக்கிறார்கள் என்றால் ‘‘பிரவுண் ஃபேஸ்’’ விளம்பரம் அப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டது ஏன் என்று நான் அமைச்சர் சண்முகத்திடம் கேட்டேன்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “பெரும்பாலான மக்கள் அந்த விளரம்பரத்தைப் பாதகமான ஒன்றாகப் பார்க்கவில்லை. இணையத்தில் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு” என்று தெரிவித்தார்.

இனவாதம் குறைந்திருப்பதைக் காட்டும் புள்ளிவிவரங்களுடன் கூடிய வில்லைப்படம் ஒன்றையும் அமைச்சர் காட்டினார். இனத்தை மட்டுமின்றி பால் (ஆண், பெண்) தொடர்பானவையாக இருந்த இதர விளம்பரங்களையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார். அவை யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியவை அல்ல.

பதிலுக்குத் தன் கருத்தைக் கூற அந்த உடன்பிறப்புகளுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்றாலும் ஆட்சேபிக்கத்தக்க குரலில் பதிலளிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களிடம் அமைச்சர் விளக்கினார்.

அமைச்சர் தெரிவித்த ஒவ்வொன்றும் எனக்கு இணக்கமில்லை என்றாலும் இனப் பிரச்சினைகளை மரியாதைக்குரிய முறையில், ஒளிவுமறைவு இல்லாமல் விவாதிக்கும்போது நாம் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பதுதான் இதில் உள்ள முக்கிய அம்சம்.

நாம் அனைவருமே மனிதர்கள். இதர இனங்களைப் பற்றி ஒரே மாதிரியான கண்ணோட்டம் நம்மிடையே குடிகொண்டுள்ளன.

அத்தகைய முதிர்ச்சி இல்லாத போக்குகளைப் புறந்தள்ளிவிட்டு ஒளிவுமறைவு இல்லாமல் கலந்து பேசினால் அது நம்முடைய இளம் நாட்டிற்குச் சரியான திசையில் நாம் எடுத்து வைக்கும் ஒரு பெரிய முன்னேற்றப் படிக்கல்லாக இருக்கும்.

அமைச்சர் சண்முகம் சுட்டிக்காட்டியதைப் போல, அத்தகைய கலந்துரையாடல்களுக்குப் பிறகு மட்டுமே அரசாங்கம் தன் சொந்த கொள்கைகளை மறுபரிசீலனை செய்து தேவையெனில் அவற்றைத் திருத்த முடியும்.

கலந்துரையாடல் கூட்டம் முடிந்து மாணவர்களும் விரிவுரையாளர்களும் அரங்கத்தைவிட்டு வெளியேறிய நிலையில், அங்கு ‘‘வாவ்’’ என்ற உற்சாக உணர்வு நிலவியதைக் காணமுடிந்தது.

அமைச்சர் தன் நேர்மை, தெள்ளத்தெளிவான கருத்துப் பரிமாற்றம் ஆகியவை மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அமைச்சர் பல வில்லைப்பட வளங்களுடன் நன்கு ஆயத்தமான நிலையில் அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இடைவாரோ கால் உறைகளோ அணியாமல் தனது வழக்கமான சாதாரண உடையில் சாந்தமாக அமைச்சர் இருந்ததை சமூக மனோவியல் விரிவுரையாளர் ஒருவர் கண்டார்.

இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு எல்லாம் நிலைகுத்திப் போயிருந்தால் அது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கும்.

அப்படி நிகழ்ந்திருந்தால் சர்ச்சைக்கிடமான வேறு ஒரு காணொளி அல்லது அதைவிட மோசமான சம்பவம் ஏதாவது நிகழவே வழி ஏற்பட்டு இருக்கும்.

இனப் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்கள் காப்பிக் கடைகளிலும் இதர சாதாரண சந்திப்புகளிலும்கூட தொடரவேண்டிய தேவை இருக்கிறது. அத்தகைய கலந்துரையாடல்களை ஒளிவுமறைவு இல்லாமல், வசதியாக, மரியாதைக்குரிய வகையில் ஒவ்வொரு நிலையிலும் நாம் நடத்த முடியும் என்றால் மட்டுமே நாம் முதிர்ச்சி அடைந்த, சகிப்புத்தன்மைமிக்க மக்களாக பரிணமிக்க முடியும்.

உண்மையிலேயே பல இன சமூகமாக அப்போதுதான் நாம் சகோதரத்துவ சகவாழ்வை அனுபவிக்க முடியும்.

டாக்டர் சித்ரா ராஜாராம்,
மூத்த ஆய்வாளர்,
கொள்கை ஆய்வுக் கழகம்,
லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!