எந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்

பிரதமர் தனது தேசிய தினப் பேரணி உரையில் பல முக்கிய தலைப்புகள் பற்றிப் பேசினார். பின்னணி எப்படி இருந்தாலும் ஒவ்வொருவரும் வெற்றிபெற உதவ அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாடு அவற்றில் ஒன்று. சிங்கப்பூரர்களான பிள்ளைகள் அனைவரும்  நம் தேசிய பள்ளிக்கூடங்களில் நல்ல கல்வியைப் பெற முடியும்.

கால ஓட்டத்தில் நாம் கல்வி முறையை மேம்படுத்தி வந்துள்ளோம். தரம் பிரிப்புக்குப் பதிலாக பாட அடிப்படையிலான தேர்ச்சி முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். திறன்களில் அதிக முக்கியத்துவம் செலுத்தி இருக்கிறோம். அந்தத் திறன்களை முதலாளிகள் அதிகம்  மதிக்கிறார்கள். மதிப்பெண்களில் மட்டும் கவனம் செலுத்தும் அணுகுமுறையைத் திருத்தி சமநிலைப் படுத்தி இருக்கிறோம். 

நம் சிறார்கள் வெற்றி அடைய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பலதுறை தொழில்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழியாக பல வழிகளை உருவாக்கி வருகிறோம்.

பாலர் பள்ளி துறையில் இப்போது பலவற்றையும் செய்து வருகிறோம். பிள்ளைகளின் சமூக மற்றும் உணர்வுபூர்வ மேம்பாடு என்பது பாலர் பள்ளி ஆண்டுகளில் முக்கியமானது.  

உணர்வு ரீதியில் பாதுகாப்புடன் இருக்கின்ற, சக பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி கலந்துறவாட கற்றுக்கொள்கின்ற, பலவற்றையும் தெரிந்துகொள்ள ஊக்கமூட்டப்படுகின்ற, கற்றுக்கொள்ளும் மனப் போக்குடன் இருக்கின்ற ஒரு பாலர் பள்ளிக் குழந்தை, இவற்றுக்கெல்லாம் ஆளாகாத பிள்ளையுடன் ஒப்பிடுகையில் வாழ்வில் சிறந்த நிலையில் திகழ்கிறது. 

பாலர் பருவத்தில்  மொழிகளைக் கற்பதும் அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதும் எளிதாகின்றன. ஆகையால் பிள்ளையின் சமூக மற்றும் உணர்வுபூர்வ மேம்பாட்டில் ஒருமித்த கவனம் செலுத்தும் பாலர் பள்ளி கல்வி முக்கியமாகிறது.

இதை உணர்ந்துகொண்டுள்ள அரசு அண்மைய ஆண்டுகளில் பாலர் பள்ளிக் கல்வியை யாவர்க்கும் எட்டக்கூடியதாக, தரமிக்கதாக, கட்டுப்படியாகக் கூடியதாக மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

முழுநேர பாலர் பள்ளி இடங்களை இரண்டு மடங்காக அதிகரித்து பாலர் பள்ளிகளை மேம்படுத்தி இருக்கிறோம். இதர 3 தாய்மொழிகளை பாடங்களைக் கற்பிக்கும் கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளையும் உருவாக்கி இருக்கிறோம். 

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியையும் போதனைத் திறனையும் மேம்படுத்த தேசிய பாலர் ேமம்பாட்டுக் கழகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

தங்கள் பிள்ளைகளின் பாலர்பள்ளி கல்விக்கான செலவு பெற்றோருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் என்பதை உணர்ந்து, பாலர் பள்ளி பிரதான நடத்துனர்கள், பங்காளி அமைப்புகள், கல்வி அமைச்சின் பாலர் பள்ளியில் படிக்க ஆகும் செலவைக் குறைக்க தொடக்க நடவடிக்கைகளை நாம் எடுத்து இருக்கிறோம். இவற்றால் செலவு குறைந்துள்ளது. 

இருந்தாலும் பாலர்கள் உள்ள நடுத்தர குடும்பங்களைப் பொறுத்தவரையில் பாலர் பள்ளிக் கல்விச் ெசலவு அவற்றுக்கு இன்னமும் கணிசமாக இருக்கிறது என்பது  நமக்குத் தெரியும். ஆகையால்தான் தேசிய தினப் பேரணியில் அறிவிக்கப்பட்டதைப்போல், இளம் குடும்பங்களுக்கான தாக்குப்பிடிக்கும் வகையிலான பாலர்பள்ளி மானியத்தை அரசாங்கம் அதிகப்படுத்துகிறது.

இதற்குத் தகுதிபெறுவதற்கான மாத குடும்ப வருமான உச்ச வரம்பை $7,500லிருந்து $12,000 ஆக அதிகப்படுத்தி இருக்கிறோம். இதனால் உடனே மேலும் 30,000 குடும்பங்களுக்கு மானியம் கிடைக்க வழி ஏற்படும். இவற்றோடு, பாலர் பள்ளி மானியத்தை எல்லா நிலையிலும் அரசாங்கம் அதிகரிக்கும்.

பிரதமர் அறிவித்ததைப் போல், முழுநேர பாலர் பள்ளிக் கல்விச் செலவை, நீங்கள் பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பை  உள்ளடக்கி பார்க்கும் பட்சத்தில், தொடக்கப்பள்ளிக்கு ஆகும் செலவுடன் ஏறக்குறைய ஒத்த நிலைக்கு குறைப்பதே நமது இலக்கு.

அரசாங்கம் தலைமையிலான பாலர் பள்ளி நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், இந்திய பாலர் பள்ளிப் பிள்ளை களுக்காக பாட மற்றும் கணித செயல்திட்டம் ஒன்றைக் கொண்டுஉள்ளது. 

அதோடு, பாலர் பள்ளி தமிழ் செரிவாக்கச் செயல்திட்டத்தையும் அது அமலாக்கி வருகிறது. இந்தத் திட்டங்கள் அதிக மானியம் பெற்ற திட்டங்கள். இந்த செயல்திட்டங்களின்அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ளும்படி இந்திய குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உயர் நிலையிலான கல்வி முறையைப் பார்க்கையில், உயர் கல்வி கட்டணங்களையும் கல்வி உதவித் தொகையையும் மறுபரிசீலனை செய்து இருக்கிறோம். 

அவ்வளவாக வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேல் கல்வியைத் தொடர்வதற்குத்  தடைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு  கணிசமான அளவுக்குப் படிப்பு உதவித்தொகையை உயர்த்துகிறது. 

1) பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் உதவித்தொகை பொதுக் கட்டணத்தில் 50 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாகும்.

2) இதோடு, குறைந்த வருவாய் உடைய குடும்பங்களைச் சேர்ந்தமாணவர்கள் அதிகபட்சமாக $5,000 மட்டும் செலுத்தினால் போதும் என்ற அளவுக்கு மருத்துவ மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகையை நாம் அதிகரிப்போம்.

3) பலதுறை தொழில்கல்லூரி பட்டயப் படிப்புகளுக்கு இப்போது 80% ஆக இருக்கும் உதவித்தொகை அளவு 95%க்கு உயரும்.

அரசாங்க கல்வி உதவித் தொகை ஒருபுறம் இருக்க, உயர் கல்விக்குப் பண உதவி தேவைப்படும் இந்திய மாணவர்கள், படிப்பு உதவித்தொகை, படிப்பு உபகாரச் சம்பளம் மற்றும் கடன் கேட்டு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை அமைப்புக்கு (SIET) விண்ணப்பிக்கலாம். 

கல்வி அமைச்சின் இந்த நடவடிக்கைகளும் சிண்டா மற்றும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை அமைப்பின் உறுதுணைச் செயல்திட்டங்களும் குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைத்து அந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் வெற்றிப் பாதையில் முன்னேற  உதவும் என்று நாம் நம்புகிறோம்.