சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்

பேராசிரியர் டாமி கோ

வெளிநாடுகளில் வாழ்வதால் பல அனுகூலங்கள் உண்டு. நீங்கள் சிங்கப்பூரர் களின் நடத்தையையும் இதர நகர்களில், நாடுகளில் வசிக்கும் மக்களின் நடத்தையையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்பது அந்த அனுகூலங்களில் ஒன்று.

வாழ்வின் பல துறைகளிலும் சிங்கப்பூரர்கள் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறார்கள். ஆனால் சாலையில் வாகனம் ஓட்டும்போது நம்முடைய நடத்தைகள் படுமோசமாக இருக்கின்றன.

சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

வேகம்: சிங்கப்பூரில் லுவிஸ் ஹெமில்டன் என்று தங்களை நினைத் துக்கொள்ளும் நிறைய பேர் இருக்கிறார்கள். சிங்கப்பூர் வாகன ஓட்டுநர் வேக விரும்பி. வேக வரம்பை அவர் மதிப்பதில்லை. ஒரு சாலைச் சந்திப்பில் இருந்து அடுத்த சாலைச் சந்திப்புக்கு அவர் பந்தயத்தில் போவது போன்றுதான் போவார். போக்குவரத்து விளக்கு சிவப்பாக தெரிந்தாலும் கூட அவர் தன்னுடைய காரின் வேகத்தைக் கூட்டுவார்.

சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் வேகப்பித்து, ஃபார்முலா ஒன் இங்கே வந்தது முதல் இன்னும் மோசமாகிவிட்டது.

முந்துதல்: சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் இரண்டாவது கெட்ட பழக்கம் முந்துதல். தனக்கு முன்னே செல்லும் காரை முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. நம்முடைய ‘கியாசு’ மனப்போக்குதான் இதற்குக் காரணம். போட்டியில் எப்போதுமே முன்னணியில் இருந்துவர வேண்டும்.

சிங்கப்பூர் ஓட்டுநர் ஒன்றும் இல்லாததற்கு எல்லாம் உங்களை முந்திச் செல்வார். காரில் சாலை சந்திப்பு ஒன்றைக் கடந்து நேராக போகும்போது எனக்குப் பின்னால் வாகனத்தை ஓட்டி வரும் ஒருவர், இடது பக்கம் திரும்பிச்செல்ல விரும்புவார்.

இந்த நிலையில் அவர், என்னுடைய வாகனத்தை முந்தி, நான் வேகத்தைக் குறைக்கும்படி செய்து இடதுபுறமாகத் திரும்பிச் செல்ல முயல்வார். அவர் இப்படிச் செய்வது அறிவுள்ள ஒருவர் செய்யும் வேலையே கிடையாது. இத்தகைய அனுபவம் அடிக்கடி எனக்கு ஏற்பட்டு உள்ளது.

சிவப்பு விளக்கைக் கடப்பது: சாலைச் சந்திப்பு ஒன்றை நெருங்கும்போது வேகத்தைக் குறைத்து விளக்கு பச்சையில் இருந்து மஞ்சளுக்குப் பின் சிவப்புக்கு மாறுகையில் வாகனத்தை நிறுத்திவிட வேண்டும். ஆனால் போக்குவரத்து விளக்கை நெருங்கும்போது பெரும்பாலான சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் வேகத்தைக் கூட்டி சிவப்பு விளக்கைக் கடந்து செல்லவே முயல்கிறார்கள்.

பச்சை விளக்கு மாறிய உடனேயே வாகன ஓட்டுநர் ஒருவர் தன் வாகனத்தைக் கிளப்பிவிட்டால் சிவப்பு விளக்கைக் கடந்து வேகமாக வரும் ஒரு வாகனம் அந்த வாகனத்துடன் மோதிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இத்தகைய ஒரு சம்பவம் பற்றி எனக்குத் தெரியும். அதில் ஓர் அப்பாவிக் குழந்தை இறந்தே விட்டது.

ஒருபோதும் வழிவிடாதே: சில நேரங்களில் உங்கள் மேல் தவறு இல்லை என்றாலும் நீங்கள் தடைப்பட்டு உள்ள ஒரு வழித்தடத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும். அடுத்த தடத்திற்கு மாற விரும்பி வலது புறம் திரும்புவதற்கான விளக்கை எரியவிடுவீர்கள். பல நகர்களில் வாகன ஓட்டுநர்கள் இப்படி செய்யும்போது அடுத்த தடத்தில் வாகனம் ஓட்டி வருபவர் வேகத்தைக் குறைத்து நீங்கள் அந்தத் தடத்துக்கு மாற இடம்கொடுப்பார்.

சிங்கப்பூரில் இப்படி இடம் கொடுப்பதற்குப் பதிலாக அடுத்த தடத்தில் வருபவர் வேகத்தைக் கூட்டுவார். இதன்மூலம் நீங்கள் அடுத்த தடத்திற்கு மாற முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இதுவும் ‘கியாசு’ மனப்போக்கின் ஓர் அங்கமா? நாம் மிகவும் போட்டிமிக்க ஓர் உலகில் வாழ்கிறோம். அதில் ஈவு இரக்கம், பணிவன்புக்கு வேலை இல்லை என்ற மனப்போக்கையே இது காட்டுகிறது.

‘பொத்தோங் ஜாலான்’: பொத்தோங் ஜாலான் என்ற மலாய் வார்த்தைக்கு ‘வரிசையை மீறு’ என்று பொருள். காலனித்துவ சிங்கப்பூரில் வரிசையை மதிக்காத ஒரு நடைமுறை பொதுவான ஒன்று. அப்போது குண்டர்களும் ரகசிய சங்க உறுப்பினர்களும் கைவரிசை காட்டினார்கள். போலிஸ் பலவீனமாக இருந்தது.

1959க்குப் பிறகு யாராக இருந்தாலும் வரிசையில்தான் வரவேண்டும். யாரும் வரிசையை மீறக்கூடாது என்பது விதியாகியது. இருந்தாலும் இதற்கு நம்முடைய சாலைகள் விதிவிலக்காக இருக்கின்றன.

சாலையில் ஒரு பக்கமாக திரும்பிச் செல்ல விரும்பி நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கும்போது தடங்களைக் கடந்து குறுக்கும் நெடுக்குமாக வந்து உங்கள் தடத்தில் புகுந்து முந்திச் செல்ல ஓட்டுநர்கள் முயல்கிறார்கள்.

இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இந்தக் கெட்ட பழக்கத்தை போலிசார் துடைத்தொழிக்க வேண்டும். இத்தகைய செயல்கள் விதிகளை மீறுவதாக, நியாயமற்றவையாக இருக்கின்றன.

வாகனத்தை முறையில்லாமல் நிறுத்திவைப்பது: சில வாகன ஓட்டுநர்கள், தங்கள் கார்களை நிறுத்திவைக்கும்போது சரியில்லாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இரண்டு இடங்களுக்கு நடுவே ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.

ஒரு சந்தை அருகே உள்ள ஒரு கார் பேட்டையில் ஒருநாள் எடுப்பாக உடை அணிந்திருந்த ஒரு மாது, விலை உயர்ந்த காரை ஓட்டி வந்தார். உடற்குறை உள்ளவர்களுக்கான இடத்தில் வாகனத்தை நிறுத்தினார். அவரிடம் சென்று அமைதியான முறையில் பேசி காலியாக இருக்கும் இடத்தில் காரை நிறுத்திவைக்கும்படி கூறினேன். அவரோ உங்கள் வேலையைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டார். அந்த மாது கார் நிறுத்தி வைத்திருந்ததை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருக்கவேண்டும்.

மற்றோரு சம்பவம், எனது காரை பொது கார் பேட்டையில் நடுவில் ஓர் இடத்தில் முறையாக நிறுத்தி வைத்திருந்தேன். திரும்பி வந்தபோது என்னுடைய காரின் கதவைத் திறக்க முடியாதபடி வேறு ஒரு கார் எனது காரை ஒட்டியபடி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. சுயநலத்திற்கு இது சரியான எடுத்துக்காட்டு. எனது காரை ஒட்டி காரை நிறுத்தியவர் தனது வசதியை மட்டும் பார்த்துக்கொண்டார்.

பொறுத்திருந்து பார்த்து அந்த நபர் வராததால் சிரமப்பட்டு எனது வாகனத்தின் கதவைத் திறந்து நுழைந்து பிறகு ஓட்டிச்சென்றேன்.

கார் நிறுத்தி வைப்பதற்கான இடத்தின் நடுவில்தான் நாம் எப்போதும் காரை நிறுத்திவைக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சம்பவம் கற்றுத்தரும் பாடம்.

திசைகாட்டியைப் பயன்படுத்துவது: சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழாவது கெட்ட பழக்கம் தன் வாகனத்தின் திசைகாட்டி விளக்கை எரியவிடத் தயங்குவது.

வலது பக்கம் திரும்பிச் செல்லும் கார்களும் நேரே செல்லும் கார்களும் நிற்கவேண்டிய ஒரு தடத்தில் செல்ல அல்லது நேரே செல்லும் கார்களுக்கு மட்டும் உரிய ஒரு தடத்தில் செல்ல வேண்டிய நிலை ஒரு நேரத்தில் எனக்கு ஏற்பட்டது.

இரண்டு வழிகளிலும் செல்லும் வாகனங்களுக்கான தடத்தில் முதலில் ஒரு கார் நின்றிருந்தது. அந்த கார் ஓட்டுநர் திசைகாட்டி விளக்கு எதையும் எரியவிடவில்லை. ஆகையால் அவர் நேரே செல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் பச்சை விளக்கு மாறி யதும் திடீரென்று திசைகாட்டி விளக்கைப்போட்டு அவர் வலதுபக்கம் திரும் பினார்.

முன்பே அவர் அந்த விளக்கை எரியவிட்டு இருந்தால் நான் அடுத்த தடத்திற்கு மாறியிருப்பேன். முன்னதாக திசைகாட்டி விளக்குகளை எரியவிட்டு எந்தப் பக்கம் திரும்ப விரும்புகிறீர்களோ அதை மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு நன்கு தெரியப்படுத்தி பணிவன்புடன் நடந்துகொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

முடிவு: சாலைகளில் மற்றவர்களை எண்ணிப் பார்க்கின்ற, நல்ல வாகன ஓட்டுநர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை. இருந்தாலும் மேலே கூறிய கெட்ட பழக்கங்களை அன்றாடம் நம்முடைய சாலைகளில் சாதாரணமாகக் காணலாம். வாகன ஓட்டுநர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இதை நான் எழுதுகிறேன்.

நாம் வாகனம் ஓட்டிச் செல்லும் முறை, மக்கள் என்ற முறையில் நாம் யார் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கெட்ட பழக்கங்களைக் கைவிட்டுவிட்டு நிச்சயம் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். அப்படி மேம்பட்டு அனைவருக்கும் ரம்மியமான பயணச் சூழலை ஏற்படுத்த நாம் உதவ முடியும்.

பேராசிரியர் டாமி கோ,

தலைவர், தெம்பூசு கல்லூரி,

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!