தொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்

பாக்டீரியா, கிருமிகள் கிளப்பிவிடும் தொற்றுநோயைப்போல தென்கிழக்கு ஆசியாவில் புகைமூட்டம் பொருளியலைப் பீடிக்கும் தொற்றுநோயாக அப்போதைக்கு அப்போது தலைதூக்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

சிங்கப்பூரில் 2016க்குப் பிறகு காற்றுத்தரம் மறுபடியும் ஆரோக்கியமற்ற நிலையை முதல் தடவையாக இப்போது எட்டி இருக்கிறது. இதனால் மக்கள் முகக்கவசங்களைத் தேடி ஓடுகிறார்கள். வெளிப்புறத் திட்டங்களை ரத்து செய்கிறார்கள். காற்றில் புகை மண்டுகிறதே என சுற்றுப்பயணிகளும் சங்கடப்படுகிறார்கள். 

இந்தோனீசியாவில் செம்பனைத் தோட்டங்களுக்காகவும் காகித ஆலைகளுக்காகவும் காடுகள் எரிக்கப்பட்டு இடம் சுத்தப்படுத்தப்படுவதால்தான் இந்தப் புகைமூட்டம் ஏற்படுகிறது. 

காற்றோட்டம் காரணமாக புகை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் பரவி அவற்றின் காற்று மண்டலத்தை கெடுக்கிறது. 

தென்கிழக்காசியா 2015ல் படுமோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டில் இந்தோனீசியாவில் 2.6 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதிகள் தீயில் கருகின. அந்த நாட்டிற்கு $21.6 பில்லியன் அளவுக்கு பொருளியல் இழப்பு ஏற்பட்டது. 

புகைமூட்டம் காரணமாக 2015ல் சிங்கப்பூருக்கு $1.83 பில்லியன் பாதிப்பு இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.45 விழுக்காட்டுக்குச் சமம். 

பொருளியல் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, புகைமூட்டம் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகம்.

முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறார்கள், இதய, நுரையீரல் நோயுள்ள மக்கள் எல்லாரும் புகைமூட்டம் காரணமாக அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

சிங்கப்பூரில் இப்போது இரண்டாவது வாரமாக புகைமூட்டம் தொடர்கிறது என்றாலும் 2015ல் ஏற்பட்ட அளவுக்கு நிலைமை மோசமான நிலையை எட்டாது என்றே தெரிகிறது. 

இருந்தாலும்கூட பொதுமக்களின் குறிப்பாக எளிதில் பாதிக்கக்கூடிய பிரிவினரின் உடல்நலனை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளையும் எடுத்து நெருக்கடியைச் சமாளிக்க எப்போதுமே அரசு ஆயத்தமாக இருந்து வரவேண்டும். 

புகைமூட்ட பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் பள்ளிக்கூடங்களும் நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இங்கு மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு போன்ற தேர்வுகளை முழுதும் மூடப்பட்ட இடங்களில் எழுதுவார்கள். புகைமூட்டம் மோசமானால் காற்றைத் தூய் மைப்படுத்தும் சாதனங்கள் பொருத்தப்படு மென கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது. 

புகை தொடர்பான நோய்களுக்கு ஆளாகக்கூடிய மாணவர்களுக்குத் தேர்வு நேரத் தின்போது பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் ஆயத்தமாக உள்ளன. 

கட்டுமான நிறுவனங்கள், கடற்கரை முகப்புப் பகுதிகள் போன்ற வெளிப்புறங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு N95 முகமூடிகளைக் கொடுத்து அவர்களைக் கண்காணித்தும் வருகின்றன. 

தென்கிழக்கு ஆசியாவின் புகைமூட்டப் பிரச்சினைக்கு இந்தோனீசியாவே காரணமாக தொடர்ந்து இருந்து வருகிறது. அங்கு தீ மூண்டுள்ள காட்டு இடங்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து இருக்கிறது. 

அங்கு காடுகளைக் ெகாளுத்திவிட்டு புகையைக் கிளப்பிவிடும் சுற்றுச்சூழல் குற்ற வாளிகள் திருந்தியதாகத் தெரியவில்லை.

காட்டுத் தீயை அணைத்து புகை கிளம்புவதைத் தடுப்பதற்காக செயற்கை மழை, தீயணைப்பு போன்ற பணிகளை விரிவுபடுத்தும்படி இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து இருக்கிறார். 

அதேவேளையில், காட்டுத்தீக்குக் காரணமான தனிநபர்களையும் நிறுவனங்களையும் ஒடுக்கும்படியும் அவர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். 

சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீயை மூட்டிய சந்தேகத்தின்பேரில் 230 பேரை அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள். இந்தோனீசியாவில் இத்தகைய குற்றவாளிகளுக்கு தற்போதைய தண்டனைகள் கணிசமாக இருக்கின்றன. 

இருந்தாலும் இந்தோனீசியா இன்னும் திட்டவட்டமாகச் செயல்பட்டு இத்தகைய சுற்றுப்புற எதிரிகளை ஒடுக்கவேண்டும் என்பது அவசரஅவசியமானதாக ஆகி இருக்கிறது. 

உலகிலேயே ஆக அதிக ஆயுளுடன் வாழும் மக்களைக் கொண்ட சிங்கப்பூருக்குக் காற்றுத் தூய்மைக் கேடு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்ட நிலையில் அவற்றின் பாதிப்புகளைக் கூடுமானவரை குறைத்துக் கொள்ள ஆயத்தமாக இருந்துவர வேண்டியது கட்டாயமானது.

Loading...
Load next