சுடச் சுடச் செய்திகள்

வாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்

உலகின் முக்கியமான, வெவ்வேறான சமயங்களைப் பின்பற்றும் மக்கள் ஒற்றுமையாக, நல்லிணக்கத்தோடு வாழும் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. 

இங்கு வசிக்கும் மக்கள், உலகின் வேறு பகுதிகளில் வசிக்கின்ற தங்கள் சமயத்தைச் சேர்ந்தவர்களோடு ஒப்பிடுகையில் சகிப்புத்தன்மை, ஐக்கிய உணர்வு, சமயப் புரிந்துணர்வு நல்லிணக்கக் கண்ணோட்டம் முதலான நற்பண்புகளுடன் தங்களுக்கே உரிய தனி அடையாளத்துடன்  வேறுபட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.

சிங்கப்பூர், எந்த ஒரு சமயத்தையும் சாராத அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட சுதந்திர நாடாக பரிணமித்தது முதலே அனைத்து சமயத்தினரும் எந்த விதமான பாரபட்சமும் இன்றி சமமாக நடத்தப்பட்டு வருவதும் சிறுபான்மையினர் சரிசமமாக நடத்தப்படுவதும் தகுதிக்கு முன்னுரிமை என்ற கோட்பாடும், சிங்கப்பூருக்கே உரிய தனித்தன்மையும் இந்த வேறுபாட்டுக்கான காரணங்களாக இருக்கின்றன. 

இங்கு ‘சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்’ என்ற ஒரு சட்டம் 1990ல் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. 

சமய நல்லிணக்கத்திற்கு யாரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், அந்த நல்லிணக்கத்தைக் காக்கும் ஒரு கேடயமாக இருந்து வந்துள்ள அந்தச் சட்டம், இது நாள் வரை பயன்படுத்தப்படவே இல்லை. அந்த அளவுக்கு அந்தச் சட்டம் ஓர் அரணாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு காலவோட்

டத்தில் உலகில் சம,ய சகோதரத்துவ சகவாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 

உலகின் முக்கியமான சமயங்களுக்கு இடையே நிலவி வந்த நல்லுறவில் கசப்பான போக்குகளும் தலைதூக்கி வந்துள்ளன. 2001ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், ஈராக், சிரியா நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஐஎஸ் அமைப்பு அரங்கேற்றிய சம்பவங்கள் எல்லாம் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. 

இப்படி ஒரு சிலர் பயங்கரவாதத்தை அரங்கேற்றப்போய் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக உலகின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டதும் உண்டு. 

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இணையமும் சமூக ஊடகங்களும் விரும்பத்தகாத பல காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் போக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. 

இவை காரணமாக, உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அதிகரித்துள்ளது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக வலதுசாரி இயக்கங்கள் வன்செய

லைக் கட்டவிழ்த்துவிடும் நிலவரங்களையும் உலகம் கண்டது.

இருந்தாலும் சிங்கப்பூரில் சட்ட கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருந்து வருவதால் அந்நிய சக்திகளின் பாதிப்புகள் இதுநாள் வரை குறிப்பிடத்தக்க அளவுக்கு இங்கு தலைகாட்டவில்லை. 

என்றாலும் சிங்கப்பூரும் உலக சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதை உணர்ந்துதான் அரசாங்கம் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தை இப்போது மேம்படுத்தி இருக்கிறது. அந்தச் சட்டத்திற்கான மாற்றங்களை அண்மையில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 

சிங்கப்பூரில் சமய உறவுகளுக்கு மிரட்டல் விடுப்போருக்கு எதிராக முன்பைவிட அதிவேகத்தில் உடனடியாக அதிகாரிகள் இப்போது செயல்பட முடியும். இதற்குப் புதிய சட்டத்திருத்தங்கள் வகைசெய்கின்றன.

வெளிநாட்டுச் சக்திகள் இங்கு பிரிவினைவாத எண்ணத்தை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும் சிங்கப்பூரின் சமூகத்தைப் பாதித்துவிடக்கூடிய நச்சு கிருமிகள் இங்கே நுழைவதைத் தடுக்கவும் அந்தத் திருத்தங்கள் வகைசெய்கின்றன. 

புதிய மாற்றங்கள் இருந்தாலும் கடந்த 30 ஆண்டு காலத்தைப் போலவே அடுத்த 30 ஆண்டு காலமும் அந்தப் புதிய சட்டங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்பதே சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

ஒரு நாட்டில் எவ்வளவுதான் சட்டங்கள் இருந்தாலும் அந்தச் சட்டங்களின் நோக்கங்களுக்கு அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ அதைப் பொறுத்தே அந்தச் சட்டங்கள் வெற்றிகரமாகத் திகழும். இந்த ஆதரவைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் மக்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறார்கள். இதைப் பலமுறை அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். 

சமய நல்லிணக்கத்தை மேலும் இடைவிடாமல் பலப்படுத்தும் நோக்கத்தில் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில், முயற்சிகளில், செயல்திட்டங்களில் எல்லாரும் கலந்துகொள்ளும் போக்கு இங்கு இருந்து வருகிறது. 

சிங்கப்பூரில் உள்ள சமயத் தலைவர்கள் நல்லிணக்கத்தைப் புலப்படுத்தி தேசிய முயற்சிக்கு வலு சேர்த்து வருகிறார்கள். 

சிங்கப்பூர் மக்கள் ஒருவர் மற்றொருவரின் சமயத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு உரிய மரியாதையைச் செலுத்தி வருவது நிலையான வழக்கமாக ஆகி இருக்கிறது. 

நம் மக்களின் ‘வாழவிட்டு வாழ்வோம்’ என்ற இந்த அணுகுமுறை தொடரட்டும். தொடர வேண்டும்.

உலகம் சமய ரீதியில் பல பிரச்சினைகளைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் இந்த அணுகுமுறை இன்னும் முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டு சமய நல்லிணக்கத்தை இடைவிடாது கட்டிக்காப்போம். 

இதில் நாடாளுமன்றம் இப்போது நிறைவேற்றி இருக்கும் புதிய சட்ட திருத்தங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.