ஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்

மனநலம் என்பது நாம் அடிக்கடி பேசும் ஒரு விவகாரம் அல்ல. ஆனால் கலந்துஉரையாடவேண்டிய தேவை அதிகரித்து வருகின்ற ஒரு பிரச்சினை அது. 

மனநலம் உலகப் பிரச்சினையாக ஆகி இருக்கிறது. சிங்கப்பூரிலும்கூட இந்த விவகாரம் பெரிதாகி இருப்பதை நாம் கண்டு இருக்கிறோம்.

உலகம் முழுவதுமே மனநலப் பிரச்சினை பெரிய அளவில் தலைதூக்கி இருப்பதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது இதுவரையில் திட்டவட்டமாக அடையாளம் காணப்படவில்லை. 

இருந்தாலும் இந்தப் பிரச்சினை உலக அளவில் பரவி இருப்பதை வைத்துப் பார்க்கையில், எந்த ஒரு நாட்டுக்கும் உரிய தனிப்பட்ட நிலவரம் அல்லது சூழலைவிட அதற்கு வேறு சில பரந்த காரணங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகிறது. 

நவீன வாழ்க்கை காரணமாக ஏற்படக்கூடிய மன உளைச்சல், மன இறுக்கம், வேலை வேகம் ஆகியவை அதற்குக் காரணமாக இருக்கலாம். இணையமும் சமூக ஊடகத் தலையெடுப்பும் கூட காரணமாக இருக்கலாம். 

முன்பு போல் இல்லாமல், நாம் சொல்கின்ற, நமக்கு எதிராக சொல்லப்படுகின்ற தகவல் எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் இப்போது பர

பரப்பாகிவிட முடியும் நிலை இருக்கிறது. 

அத்தகைய தகவலைத் தொடர்ந்து வெள்ளம் போல் இடம்பெறக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் நச்சாக அல்லது அவதூறானவையாக இருக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அவை, இணைய மிரட்டல்கள், அலைக்கழிப்புகள், அந்தரங்க விவகாரங்களை வெளியிட்டு மிரட்டுவது அல்லது இணையத்தில் பாரபட்சமான ஒப்பீடுகளாக இருக்க முடியும். 

இது இளையவர், முதியவர் என எல்லாரையும் பாதிக்கும். ஆனால் போதிய அனுபவம் இல்லாததாலும் வயது காரணமாகவும் இளையர்களே இதற்கு அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.  

நாம் வலுவான சமூகமாகத் திகழவேண்டுமானால் உடல் நலனைமட்டு

மின்றி மனநலனையும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது. மன நலப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்கு எப்போது, எங்கு உதவிநாடுவது என்பதைத் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். மனநலனை நல்லபடி வைத்து இருக்க உதவும் உத்திகளில் இதுவும் ஒன்று. 

இந்தப் பிரச்சினை உள்ளவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வலுவான பாதுகாப்புச் சூழலைக் கொண்டிருக்கவேண்டியதும் அவசியமானது.

மன நோய் என்பது பலதரப்பட்ட உடற்கோளாறுகளை உள்ளடக்குகிறது. சிலரைப் பொறுத்தவரையில் நிலைமை அவ்வளவு கடுமையானதாக இருக்காது.அவர்களுக்கு சிகிச்சைஅளிப்பதும் எளிது. மற்றவர்களின் நிலை மோசமானது. அவர்களைச் குணப்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருக்கவேண்டும்.

மனம் நலமாக இல்லாதவர்களிடம் மனச் சோர்வு, கவலை, நிலையற்ற போக்கு, மதுபுழக்கம், ஒரு பழக்கத்துக்குப் பித்தாகி அடிமையாகிவிடும்  போக்கு, சார்ந்திருக்கும் நிலை, இதர குறைபாடுகள் காணப் படலாம். அல்லது இவை சேர்ந்தும் காணப்படலாம். 

மனநலப் பாதிப்புக்கு உட்படுவோர், தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படலாம், கேலி கிண்டலுக்கு ஆளாகக்கூடும் என்று பயந்து உதவி நாடாமல் இருந்து விடுவதுண்டு. அல்லது தங்கள் குறையை வெளியே சொல்லாமலேயே இருந்து விடுவதும் உண்டு. அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரியாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

இளையர்களுடன் நான் கலந்துரையாடும்போது மனநலப் பிரச்சினை அடிக்கடி தலைக்காட்டுவதுண்டு. இப்பிரச்சினையில் சிக்கி இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இளையர்கள் விரும்புகிறார்கள் என்ற செய்தி அடிக்கடி காதில் விழுகிறது. மன நலப் பிரச்சினையுடன் களங்கம் தொடர்புடையது என்பதால் அதைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவதும் சிரமம் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

ஆகையால் மன நலப் பிரச்சினைக்குச் செம்மையான முறையில் தீர்வுகாண விரும்பினால் அதுபற்றி வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்த நாம் கற்றுக்கொள்ளவேண்டும். 

இப்பிரச்சினையுடன் தொடர்புடைய களங்கத்தைக் களைய வேண்டும். மனநலக் குறைபாடு வேறு, உடல் நலக் குறை பாடு வேறு என்று நாம் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. இவை இரண்டுமே சிகிச்சை அளித்து குணப்படுத்தக்கூடிய நிலைகள்தான். முறையாக சிகிச்சை அளித்தால் மக்கள் குணமடைந்து மகிழ்ச்சிகரமாக, மனநிறைவாக வாழலாம்.

ஆகையால் மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் உதவி நாட அச்சப்படாதீர்கள் என்று ஊக்கப்படுத்துகிறேன். பள்ளி

களில், பள்ளி ஆலோசனையாளர்களை அல்லது தங்கள் ஆசிரியர்களை மாணவர்கள் நாடலாம். 

பெரியவர்கள் மனநலக் கழகத்தை அல்லது இதர மனநல மருத்துவர்களை நாடலாம். இந்தப் போராட்டத்தில் நீங்கள் தனித்து நிற்கவில்லை என்பதை புரிந்துகொள்வதுதான் இதில் மிகவும் முக்கியமானது. 

நீங்கள் முயன்றால் உதவி கிடைக்கும். பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளக்கூடிய துணிச்சல், ஆற்றல் இதற்குத் தேவை. அப்படி ஒப்புக்கொள்

வது இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டுவந்து சிறந்த வாழ்க்கையைத் தொடர்வதற்கான முதல்படி என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதே வேளையில், பாதுகாப்பான சூழலை நாம் பலப்படுத்தவேண்டும். மன உளைச்சலுக்குக் கொண்டு செல்லக்கூடிய மிரட்டல் போன்ற சூழ்நிலைகளைத் திறம்பட சமாளித்து மீண்டு வரக்கூடிய மீட்சித் திறனை, துடிதுடிப்பை இளம் வயதிலேயே இளையர்களிடம் உருவாக்குவதும் இதில் அடங்கும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தனிமைப்படுத்தப்படுவதாகவும் உணரக்கூடாது. இதற்கான ஆதரவானச் சூழலை நண்பர்களும் குடும்பங்களும் ஏற்படுத்தி உதவ வேண்டும். 

முதலாளிகளும் உதவலாம். ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது வெளியே தெரிந்த நிலையில், அவர் வேலை பார்ப்பதற்கான ஆற்றலுடன் இருக்கும் பட்சத்தில், முதலாளிகள் அவருக்கு வேலை கொடுக்கலாம். தேவைப்படும்போது  அவர் சிகிக்சை பெற நேரத்தையும் வசதியையும் ஆதரவையும் முதலாளிகள் அளிக்கலாம்.  

மனநலம் பற்றிய தனது மனப்போக்குகளை மாற்றிக்கொள்வதன் மூலம் சமூகமும் இதில் பங்காற்ற முடியும். 

வெவ்வேறான மனநிலைகளைப் பற்றியும் அத்தகைய பாதிப்பு உள்ளவர்களுடன் கலந்துறவாடுவது எப்படி என்பதையும் மேலும் பலவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

நிராகரிப்பது, கிண்டல் செய்வது,  நையாண்டி செய்வது அல்லது பழிப்பது ஆகியவைதான் மனநலப் பாதிப்பு உள்ளவர்களை அதிகம் பாதிக்கும் செய்கைகள். 

இந்த விவகாரம் தொடர்பில் ஒளிவுமறைவு இல்லாமல் நடந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துடன், உற்சாகமூட்டும் உணர்வுடன் திகழ்ந்து, இது பற்றி மேலும் பலவற்றையும் கற்றுக்கொள்ளும் அணுகுமுறையைக் கடைப்

பிடித்து அதன் மூலம் நாம் ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து நம் சமூகத்தில் மனநலனை மேம்படுத்தி மீட்சித்திறனையும் பலப்படுத்த முடியும்.