நடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...

புதுப்புது தொழில்நுட்பங்கள் தலையெடுக்கும்போது அவற்றுடன் சேர்ந்து பொருத்தமான சமூக நடைமுறைகளும் பரிணமித்து வர வேண்டும். தொழில்நுட்பங்களும் அவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகளும் வசதிகளும் முக்கியமானவை, தவிர்க்க இயலாதவை என்றாலும் சமூகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு என்பது இவற்றைவிட முக்கியமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

ஒரு நாட்டில் போக்குவரத்து, அதுவும் சிங்கப்பூர் போன்ற நிலப் பற்றாக்குறை உள்ள சிறிய நாடுகளில், விவேகமிக்க போக்குவரத்து முறைகள் உயிர்நாடியானவை. தொழில்நுட்பங்கள் காரணமாக தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் போன்ற புதிய போக்குவரத்து வாய்ப்புகளும் வசதிகளும் பெருகி உள்ளன. 

 

இத்தகைய சாதனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கின்றன. கார்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்கிற்கு இவை ஆதரவாகவும் உள்ளன. 

பயணிகள் தங்கள் விருப்பப்படி வசதியாக சென்றுவர இவை மிகவும் எளிதாக உள்ளன. 

மொத்தத்தில் இத்தகைய தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் சிங்கப்பூருக்குத் தவிர்க்க முடியாதவையாக ஆகி இருக்கின்றன. 

இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டதும் நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் போன்ற சாதனங்களைத் தாராளமாக அனுமதிக்கலாம் என்றுதான் முதலில் கருதப்பட்டது. அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவோர் பொறுப்பான முறையில் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. 

பாதசாரிகளும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரும் நடைபாதையைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தகைய ஒரு சூழல் உருவாகவில்லை. மின்ஸ்கூட்டர் போன்ற சாதனங்கள் தொடர்பான விபத்துகள் தாறுமாறாகக் கூடின.  இது தொடர்பான பொது போதனைத் திட்டங்களும் தோல்வியில்தான் முடிந்தன.

பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு நிலையும் அவர்களின் நலனையும் உரிமைகளையும் காக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டுவிட்டது. தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஈடாக சமூக நடைமுறைகள் பரிணமிக்காததே இதற்கான காரணம். 

இவற்றின் விளைவாக அத்தகைய சாதனங்களுக்கு நடைபாதையில் தடைவிதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் உருவாகி இருக்கிறது. 

அரசாங்கமும் தடைவிதிக்க முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. அடுத்த நாள் முதல் மின்ஸ்கூட்டர் போன்ற சாதனங்களை நடைபாதையில் ஓட்ட தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் நாடு முழுவதும் உள்ள 440 கி.மீ. சைக்கிள் பாதையை மின்ஸ்கூட்டர்கள் இப்போதும் பயன்படுத்த முடியும். முன்பு 5,500 கி.மீ. நடைபாதையைப் பயன்படுத்த அனுமதி இருந்தது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 100,000 பதிவு பெற்ற மின்ஸ்கூட்டர்கள் இருப்பதாகத் தெரிகிறது. சிலரைப் பொறுத்தவரையில் மின்ஸ்கூட்டர் போன்ற சாதனங்கள் பிழைப்புக்குத் தேவைப்படுகின்றன.

இங்கு செயல்படும் மூன்று பெரிய உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஏறக்குறைய 7,000 ஊழியர்கள் அன்றாடம் மின்ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். 

புதிய தடை காரணமாக கவலை அடைந்து இருக்கும் இவர்கள், அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தங்களுடைய நிலையை, கவலையை  எடுத்துக்கூறி தங்கள் கோரிக்கையை அக்கறையுடன் கவனிக்கும்படி எடுத்துச் சொல்லி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து, மின்ஸ்கூட்டரைப் பயன்படுத்தும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு அரசாங்கம் நேற்று முன்தினம் ஏழு மில்லியன் வெள்ளி மானியத் திட்டத்தை அறிவித்தது.

இது ஒருபுறம் இருக்க, நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று 49 விழுக்காட்டினரும் தடைவிதிக்கக் கூடாது என்று 51 விழுக்காட்டினரும் விரும்புவதாக அரசாங்க கருத்தறியும் பிரிவான ‘ரீச்’ மூலம் தெரியவருகிறது. 

சிங்கப்பூரில் பொதுச் சாலைகள், வழிகள், நடைபாதைகள் அனைவருக்கும் உரியவை. இவை எல்லாருக்கும் பாதுகாப்பானவையாக இருந்துவர வேண்டும்.

எல்லாரும் பொறுப்புடன் நடந்துகொண்டு, மக்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய, யாருக்கும் பாதிப்பு இல்லாத, அனைவருக்கும் அனுகூலமான நிலையில் பொது வழிகளை அனைவரும் கட்டிக்காத்து வரவில்லை என்றால், இதில் விரும்பிய, அவசியமான பலனை ஏற்படுத்த இப்போதைய சூழலில் சட்டமும் தடையும் முக்கியமானவையாகவே தெரிகின்றன.