இலங்கையிலும் ஒரு மோடியா

- ரவி வெல்லூர், இணை ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே, வல்லரசுகளுடன் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மட்டுமின்றி தன் நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்கள், முஸ்லிம்களுடன் அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தன்னுடைய சகோதரரான மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது 2006ல் தற்காப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோத்தபய, அப்போது தான் வாங்க விரும்புவதாகக் கூறி பெரும் ராணுவ தளவாட பட்டியல் ஒன்றை முன்வைத்தார். அதைக் கண்டு அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட பலரும் வியப்படைந்தனர்.

“இலங்கையில் அப்போது விடுதலைப் போரில் ஈடுபட்டு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்தும் நம்பிக்கையுடனே நீங்கள் இருக்கிறீர்கள். அது பலன் தராது என்பதை உணரும்போது என்னிடம் வருவீர்கள்.
“ஆனால் அதுவரை நான் காத்திருக்க முடியாது. பட்டியலில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் இப்போதே வேண்டும்,” என்று அப்போது நேரடியாகச் சொன்னவர் கோத்தபய.

கோத்தபய சொன்னதுதான் உண்மையாகியது. நாட்டில் கால்நூற்றாண்டு காலமாக நடந்து வந்த பயங்கரவாத வன்செயல்கள் ராணுவத் தலைவர் சரத் பொன்சேகா தலைமையில் நடந்த போரில் முடிவுக்கு வந்தன. இலங்கை அரசு வென்றது. அந்த வெற்றியைப் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் கண்ட முதல் வெற்றி என்று இலங்கை மக்களில் பலரும் கருதினர்.
உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இலங்கையின் சிங்கள பெரும்பான்மை மக்களிடையே இரண்டு தனிப்பட்ட தரப்பு தலைவர்கள் தலையெடுத்தனர்.

போருக்கு உத்தரவிட்ட அதிபர், அவருடைய தற்காப்புத் துறைச் செயலாளரான சகோதரர் இருவரும் ஒரு பக்கம். போரைத் தலைமை தாங்கி நடத்திய தளபதி பொன்சேகா மறுபக்கம்.

இப்படிப்பட்ட நிலையில், ராஜபக்சே குழுவினர் பொன்சேகாவை அரசியல் ரீதியில் ஒடுக்கத் தொடங்கினர். அவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு குடிமைப் பதவி கொடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த பொன்சேகா கைதானார்.
பொன்சேகா புரட்சிக்குத் திட்டமிட்டதாக, அதற்குப் பிறகு இரண்டு நாள் கழித்து என்னிடம் பேசிய கோத்தபய கூறினார். அதைத் தொடர்ந்து என்னிடம் பேசிய அவருடைய அண்ணனான அதிபர் மஹிந்த ராஜபக்சே, தளபதி பொன்சேகா சாதாரண நிலையிலான ஒரு தலைவர்தான் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்த இரண்டு ராஜபக்சேக்களும் ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற நாயகராக இருந்த மூன்றாவது ராஜபக்சே ஒருவர் இருக்கிறார். நான்காவது ராஜபக்சே மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்தவர். இப்படிப்பட்ட இந்த ராஜபக்சேக்கள், கொழும்பில் தங்களுக்கு முழுமையான அங்கீகாரம் ஒருபோதுமே இருந்தது இல்லை என்று கருதுகிறார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு தங்களுக்குச் செல்வாக்கு மிக்க நாட்டின் தென்பகுதியான ஹம்மந்தோட்டாவில் பிரம்மாண்டமான துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் கட்டுவதற்கு இவர்கள் திட்டமிட்டார்கள்.

இந்தத் திட்டத்திற்குப் புதுடெல்லி அவ்வளவாகச் செவிசாய்க்கவில்லை என்பதால் சீனா பக்கம் திரும்பினர். இலங்கையில் காலூன்ற நேரம் பார்த்திருந்த அந்த நாடு நிதி கொடுக்கத் தயாராக இருந்தது. இது இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இலங்கையில் அமைச்சரவைப் புரட்சிக்கு இந்தியா காய் நகர்த்தியது. அதன் விளைவாக ராஜபக்சேக்கள் அகற்றப்பட்டு தேசிய ஐக்கிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆனால் இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் அந்த ஆட்சி சிதைந்தது.

பல நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கி இருந்த கோத்தபய ராஜபக்சே மீண்டும் அதிபர் பதவி வரை தலையெடுக்க அது வழிகோலியது.

பொருளியல் வளர்ச்சி 10 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு படுமோசமாக இருந்ததும் வாழ்க்கைச் செலவு கிடுகிடுவென கூடியதும் ஐக்கிய அரசாங்கம் சிதைந்ததன் காரணமாக ஏற்பட்ட அரசமைப்புச் சட்ட நெருக்கடியும் கோத்தபய வெற்றியடைய காரணமாக இருந்தவையாகக் கருதப்படுகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, கொழும்பில் குண்டு வெடிக்கப்போகிறது என்று இந்தியா முன்னதாக எச்சரித்து இருந்தாலும் அதை கூட்டணி அரசாங்கத்தின் இரண்டு தரப்புகளும் கடுமையானதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் தேவாலயங்களிலும் ஆடம்பர ஹோட்டல்களிலும் தொடர்ச்சியாக பல குண்டுவெடிப்புகள் நடந்து 250 பேருக்கும் அதிகமான மக்கள் மாண்டனர்.

இந்தியாவில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானில் நடத்திய பதிலடி தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து நரேந்திர மோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைப்போல இலங்கையிலும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மோடியைப் போலவே கோத்தபயவும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து இளையர்களைக் கவர்ந்தார். இந்தியத் தலைவரைப் போலவே கோத்தபய ராஜபக்சேவும், வளர்ச்சி ஏறக்குறைய தேங்கிவிட்ட ஒரு நாட்டை முன்னேற்ற பொறுப்பு ஏற்கும் நிலையில் இருக்கிறார்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட கோத்தபய, தகுதிக்கு முன்னுரிமை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்று குரல் கொடுப்பதில் ஒன்றும் வியப்பில்லை.

இந்தியத் தலைவர் மோடி அரசியலில் இருந்து தன்னுடைய குடும்பத்தை ஒதுக்கியே வைத்து இருக்கிறார். ஆனால் ராஜபக்சேக்கள் அப்படி அல்ல. மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தடை செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சே இப்போது இடைக்கால பிரதமராக இருக்கிறார்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தன்னுடைய நிலையைப் பலப்படுத்திக்கொள்வார் என்ற நிலையும் இருக்கிறது.
கோத்தபய வெற்றிபெற ஆற்றல் மிகுந்த பிரசார உத்தியை அமல்படுத்திய அவருடைய தம்பியான பசில் ராஜபக்சே முன்பு அண்ணன் மகிந்தவின் அமைச்சரவையில் பொருளியல் மேம்பாட்டுக்குப் பொறுப்பு வகித்தார். அவருக்கு இப்போது நிச்சயம் வெகுமதி அளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ராஜபக்சேவின் மூத்த சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற நாயகருமான சாமலும் இருக்கிறார். இத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்த தலைமுறை ராஜபக்சேக்களும் தலையெடுக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேவின் புதல்வர்களில் ஒருவரான நாமல் ராஜபக்சே 2010 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

மகிந்த ராஜபக்சே சீனாவுடன் அணுக்கமான உறவைப் பலப்படுத்தியவர். இருந்தாலும் இப்போது கோத்தபய ராஜபக்சே பூகோள அரசியல் ரீதியாக வல்லரசு போராட்டம் எதிலும் கலந்துகெள்ளப் போவதாக தனக்கு எண்ணம் எதுவும் கிடையாது என்றும் எல்லா நாடுகளுடனும் நட்புறவை நிலைநாட்டி வரப்போவதாகவும் தெரிவித்து உள்ளார்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார் என்று கருதப்படும் கோத்தபய, தன்னுடைய இந்த நிலையில் அநேகமாக உறுதியாக இருந்து வரக்கூடும்.

இது ஒருபுறம் இருக்கையில், இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு பான்மையினரை கோத்தபய எப்படி கையாளப்போகிறார் என்பதை அணுக்கமாகக் கவனிக்க வேண்டிய தேவையும் அவசியமானதாக இருக்கக்கூடும்.

இந்தச் சிறுபான்மையினர் கோத்தபயவுக்கு ஆதரவாகத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த ஒரு சிங்கள மன்னருக்காக எழுப்பப்பட்ட அனுராதபுரத்தில் அமைந்துள்ள புத்த கோயிலில்தான் கோத்தபய பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். கொழும்பில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் மோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றதைப் போலவே கோத்தபய ராஜபக்சேவும் தனக்கு ஆதரவு அளிக்காத மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதிக்கும் அதிபராகத் திகழப்போவதாகத் தெரிவித்து பொறுப்பெடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த வாக்கை அவர் காப்பாற்ற வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!