ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் தன் மக்களுக்கு உடுத்த உடை, உண்ண உணவு, வசிக்க இருப்பிடம் ஆகியவற்றுக்கான அடிப்படைகளை ஏற்படுத்தித் தரவேண்டும். சிங்கப்பூர் தன் மக்களில் ஏறக்குறைய அனைவருக்கும் சொந்த வீட்டையும் பொருளியல் வளத்தையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலப் பற்றாக்குறை உள்ள நாடு என்பதால் தனக்குத் தேவைப்படும் உணவில் 90 விழுக்காட்டை இப்போது சிங்கப்பூர் இறக்குமதி செய்து வருகிறது. இந்த அளவைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை சுயசார்புடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அது ‘30ல் 30’ என்ற இலக்கை நிர்ணயித்து இருக்கிறது.
அதாவது, வருகின்ற 2030வது ஆண்டு வாக்கில் தனக்குத் தேவைப்படும் உணவில் குறைந்தபட்சம் 30 விழுக்காட்டைத் தானே உற்பத்தி செய்ய வேண்டும். அத்தகைய உணவு உடல்நலத்துக்கு ஏற்ற சத்துணவாக இருக்கவேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு முகவை, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் ‘சிங்கப்பூர் உணவு உயிரியல் தொழில்நுட்பப் புத்தாக்கக் கழகம்’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தப் போகிறது.
இப்போதைய உலகச் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், இந்தக் கழகம் சரியான நேரத்தில் இடம்பெறும் ஒரு பொருத்தமான முயற்சியாகத் தெரிகிறது.
உலகில் ஏறக்குறைய 800 மில்லியன் மக்கள் பட்டினி நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசியாவில் மட்டும் சுமார் 300 மில்லியன் ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள். இந்த விவசாயிகளுக்கு உதவி, விளைச்சலை பெருக்கி உற்பத்தித்திறனைக் கூட்டினால் இத்தகைய விவசாயிகளின் வாழ்க்கைச் செழிப்பதோடு மட்டுமின்றி பயனீட்டாளர்களுக் கும் அதிக உணவு கிடைக்க வழிபிறக்கும்.
பொருளியல் சரியில்லாத நேரத்திலும் உலகிற்குப் போதிய அளவுக்குச் சத்துணவு கிடைக்க வேண்டுமானால் பொருளியல் நன்றாக இருக்கக்கூடிய நேரத்தில் உணவு, வேளாண்மைத் துறையில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதை உணவு, வேளாண்மை நிறுவனம் நினைவூட்டியுள்ளது.
உலக உணவு வளத்தை உறுதிப்படுத்துவதில் பங்காளித்துவத்தின் முக்கியமும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதை எல்லாம் கருத்தில்கொண்டு ஆசியாவின் வேளாண், உணவு தொழில்துறை அடுத்த 10 ஆண்டு காலத்தில் தன்னுடைய உணவுச் செலவினத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இப்போது இந்தத் துறையின் செலவினம் US$4 டிரில்லியனாக இருக்கிறது. இது 2030ல் US$8 டிரில்லியனாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் இறக்குமதியையே அதிகம் சார்ந்து இருப்பதால் பருவநிலை போன்ற மாற்றங்கள் காரணமாக உலக உணவு உற்பத்தி பாதிக்கப்படும்போது சிங்கப்பூரும் அதன் தாக்கத்தை உணர்கிறது.
அத்தகைய நிலை ஏற்படும்போது உணவை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் அமைப்புகளும் சூழ்நிலைக்கு ஏற்ப விலைகளை உயர்த்தியும் இதர வழிகளிலும் தந்திரமாக நடந்துகொள்கின்றன. இறக்குமதியாகும் உணவுகளும் உயர்தர தரத்தோடும் உடல்நலத்துக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
சிங்கப்பூர், இதர பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல துறைகளிலும் சிறந்த அனுகூலங்களைக் கொண்ட நிலையில் இருக்கிறது. ஆய்வு, உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் தனக்கு உள்ள பலத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர் தனக்கு மட்டுமின்றி இதர நாடுகளுக்கும் உதவ முடியும் என்பது திண்ணம்.
சிங்கப்பூரிடம் வலுவான கல்வித் துறை அடிப்படை இருப்பதாலும் அரசாங்க ஆதரவு எப்போதும் கிடைப்பதாலும் ஆய்வு, உருவாக்கத்திற்கு சிங்கப்பூர் அளிக்கும் முக்கியத்துவம், முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய அதன் ஆற்றல், சமூக நிலைப்பாடு ஆகியவை காரணமாகவும் வேளாண், உணவு புத்தாக்க மையமாக சிங்கப்பூர் திகழ முடியும்.
இவற்றோடு தொழில்நுட்பமும் உணவு வளத்துக்கு உத்திரவாதம் தர முடியும். புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் நல்ல விளைச்சல் தருகின்ற, அதேநேரத்தில் தரமிக்க, தேவையான சத்துகளைக் கொண்ட உணவுப் பொருட்களை உடனுக்குடன் விளைவிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் மனித ஆற்றலும் அனுகூலங்களும் அதனிடம் உள்ள தளவாடப் போக்குவரத்து வசதிகளும் உணவு உத்தரவாதத்துக்கு மேலும் உதவக்கூடிய உறுதுணை அம்சங்களாக இருந்து உதவும்.
இத்தகைய ஒரு சூழலில் சிங்கப்பூர் அமைக்கவிருக்கின்ற சிங்கப்பூர் உணவு உயிரியல் தொழில்நுட்பப் புத்தாக்கக் கழகம் சிங்கப்பூருக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் உதவுவதில் பயனுள்ள பங்கை ஆற்ற முடியும், ஆற்றும் என்பது திண்ணம்.