வீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது

விக்ரம் கன்னா
இணை ஆசிரியர்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீடுகளின் குத்தகைக் காலம் காலவோட்டத்தில் குறைந்து வருகிறது. குத்தகைக் காலத்திற்கு ஏற்ப வீட்டின் மதிப்பும் இறங்குவதால் குடியிருப்பாளர்களுக்குக் கவலை கூடி வருகிறது. இதற்கு எளிதான தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. சிங்கப்பூர் பொது வீடமைப்புத் திட்டம் உலகமே பார்த்து பொறாமைப்படும் அளவுக்குச் சிறப்பானதாகும். மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு உயர்தர வீடுகள் அந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்துள்ளன.

ஆனால், வீவக முதல் வீடு சந்தைக்கு வந்து ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் ஓடிவிட்டது. பொது வீடமைப்புத் திட்டத்தில் பெரிய அளவில் சீர்திருத்தம் இடம்பெற வேண்டும் என்று அண்மைய இரண்டு ஆய்வுகள் முடிவு செய்து இருக்கின்றன.

ஓர் ஆய்வை பாட்டாளிக் கட்சி நடத்தியது. நவம்பர் 29ஆம் தேதி பூர்வாங்க ஆய்வு அறிக்கை ஒன்றை அது வெளியிட்டது. ‘ஃபியூச்சர் ஆஃப் சிங்கப்பூர்’ என்ற குடிமக்கள் அமைப்பு மற்றோர் ஆய்வை நடத்தியது. இந்த அமைப்பு நவம்பர் 30ஆம் தேதி பொது ஆய்வரங்கு ஒன்றில் தன் முடிவுகளை வெளியிட்டது.

வீவக பழைய வீடுகளின் குத்தகைக் காலம் குறைவதால் மதிப்பும் குறைகிறது. அதனால் உரிமையாளர்களின் ஓய்வுக்கால நிதி வளமும் பாதிக்கப்படுகிறது. இது தீர்வுகாணப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று. வீவக வீடுகள் 99 ஆண்டுகால குத்தகைக் காலத்தைக் கொண்டவை. அந்த ஆயுள் நெருங்க நெருங்க வீட்டு மதிப்பு குறைகிறது.

20 ஆண்டுகளுக்கு முன் இது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் அடுத்த ஆண்டில் 220,000 வீவக அடுக்கு மாடி வீடுகளுக்கு வயது 40ஐத் தாண்டிவிடும் என்று ‘ஃபியூச்சர் ஆஃப் சிங்கப்பூர்’ ஆய்வு நடத்தியவர்களில் ஒருவரான

‘இண்டர்நேஷனல் பிராப்பர்ட்டி அட்வைசர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான கூ ஸ்வீ யோங் தெரிவிக்கிறார்.

2030வது ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 500,000 ஆகிவிடும் என்று அவர் கணிக்கிறார். 500,000 என்பது இப்போது உள்ள வீவக வீடுகளில் ஏறக்குறைய பாதியாகும்.

சிங்கப்பூர் மக்கள் தொகை மூப்படைந்து வரும் வேளையில், வீடுகளுக்கும் வயதாகிறது. மறுவிற்பனைச் சந்தையும் சுருங்குகிறது. வயது மூப்படைவதால் பதவி ஓய்வு பெறுபவர்கள் அதிகம். அவர்கள் ஓய்வு வயதுக்கு நிதி வளத்தை ஒதுக்கிவைக்க முயல்வதும் இயல்பு. இத்தகைய ஒரு நேரத்தில் வீட்டு மதிப்பும் இறங்குகிறது.

பெரும்பாலான சிங்கப்பூரர்களின் நிகரச் சொத்தாக இருப்பவை வீவக வீடுகளே. ஆகையால் அந்த வீடுகளின் குத்தகைக் காலம் குறையும் பட்சத்தில் ஓய்வுகாலத்தில் தேவையான நிதி வளத்தைப் பெறு வதில் அவர்களுக்கு கடுமையான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

இதனை நெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்துள்ள அரசாங்கம், பல்வேறு திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வந்து இந்தக் கவலையைப் போக்க முயன்று இருக்கிறது. 66 வயது அதற்கும் அதிக வயதுள்ளவர்கள் தங்களுடைய வீட்டின் எஞ்சிய குத்தகைக் காலத்தில் ஒரு பகுதியை வீவகழகத்திடமே விற்று நிரந்தர வருவாயைப் பெற வழி செய்துகொள்ளும் திட்டம் இவற்றில் ஒன்று. இப்படி நிதி வளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் அதே காலகட்டத்தில் அவர்கள் தங்கள் வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கவும் முடியும்.

மற்றொரு திட்டம் ‘செர்ஸ்’ எனப்படும் ஒட்டுமொத்த மறுஉருவாக்கத் திட்டம். குறிப்பிட்ட பழைய குடியிருப்புப் பேட்டைகளில் வீடுகளைக் கொண்டிருப்பவர்கள் 99 ஆண்டு கால குத்தகையுடன் கூடிய புதிய வீடுகளுக்குக் குடியேற வகை செய்யும் இந்தத் திட்டம் அவர்களுக்கு மறு வீடமைப்பு நன்மைகள் உள்ளிட்ட இழப்பீடுகளையும் வழங்குகிறது.

இதில் ‘வெர்ஸ்’ எனப்படும் தன்னார்வ முன் மறுஉருவாக்கத் திட்டம் என்பது மற்றொரு திட்டமாகும். 70 ஆண்டுகள் மற்றும் அதற்கும் அதிக பழமையான வீவக வீடுகளின் உரிமையாளர்கள், வீடுகளின் குத்தகைக் காலம் முடிவதற்கு முன்னதாக தங்கள் வீடுகளை அரசாங்கமே வாங்கிக்கொள்ள முடிவு செய்யலாம்.

இந்தத் திட்டம் சுமார் 20 ஆண்டு காலத்தில் நடப்புக்கு வரும். இழப்பீட்டு விவரங்கள் இன்னமும் வகுக்கப்பட்டு வருகின்றன.

வீட்டு மேம்பாட்டுத் திட்டம் (HIP) II என்ற ஒரு திட்டம் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டு காலத்தில் தொடங்கும் இந்தத் திட்டம் குறிப்பிட்ட பழைய வீடுகளில் இரண்டாவது சுற்று மேம்பாட்டுப் பணிகள் இடம்பெற வழி செய்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு ஆய்வுகளுமே இந்தத் திட்டங்கள் எல்லாம் போது மானவை அல்ல என்று தெரிவிக்கின்றன.

குத்தகைக் காலம் குறைவதால் ஏற்படக்கூடிய பாதிப்பைச் சமாளிக்க பாட்டா

ளிக் கட்சி ‘பொதுவான விற்பனை மற்றும் குத்தகைக் கொள்முதல் திட்டம்’ (USB) என்ற ஒரு திட்டத்தை யோசனையாக முன்வைக்கிறது.

தகுதி பெறும் வீட்டு உரிமையாளர்கள் எல்லாரும் தங்கள் வீடுகளுக்கு வயது 30க்கு மேல் ஆகிவிட்டால் எந்த நேரத்திலும் எஞ்சிய குத்தகைக் காலத்தை அரசாங்கத்திடம் விற்றுவிடலாம் என்று

கூறும் இந்தத் திட்டம் இதற்கான இழப்பீட்டை பகிரங்கமாக வெளியிடப்படும்

ஒரு வழிமுறையின்படி தீர்மானிக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.

இந்த யோசனை வீவக மறுவிற்பனை விலைகளுக்கும் ஆதரவாக இருக்கும் என்று பாட்டாளிக் கட்சி கூறுகிறது.

ஆனால் இந்த யோசனையும் இந்தப் பிரச்சினைக்கு முழுத் தீர்வாக அமையாது என்றே தெரிகிறது. அதேவேளையில் அரசாங்கத்திற்கு ஆகும் செலவு கணிசமாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க, வீவக வீடுகளின் குத்தகைக் காலம் குறையும் பிரச்சினைக்கு எளிமையான நேரடியான ஒரு தீர்வை ‘ஃபியூச்சர் ஆஃப் சிங்கப்பூர்’ ஆய்வு முன்வைக்கிறது. ஒரு வீட்டைக் கட்டி 50 ஆண்டு காலம் ஆகிவிட்டால் அந்த வீட்டின் ஆயுளை 99 ஆண்டுகளாக நீட்டித்துவிடலாம். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும்.

அந்தத் தொகை $350,000 சராசரி விலையுள்ள மூவறை வீட்டிற்கு $10,500 அளவில் இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஏற்பாடு நடைமுறைக்கு உகந்ததுதான் என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்னதான் இருந்தாலும் வீவக வீடுகளின் குத்தகைக் காலம் குறைவு என்பது சிக்கலான பிரச்சினைதான். அதற்கு எளிதான தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

இருந்தாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஏராளமான யோசனைகள் இருக்கின்றன என்பதுதான் இதில் உள்ள நல்ல செய்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!