பருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்

உலகிற்கு எரிசக்தி என்பது உயிர்நாடியானது. தொழில்துறைகளுக்கும் வர்த்தகத்திற்கும் போக்குவரத்துக்கும் வீடுகளில் அன்றாட தேவைகளுக்கும் எல்லாவற்றுக்கும் எரிசக்தி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற மூலப் பொருட்களின் மூலம் எரிசக்தி கணிசமாக உருவாக்கப்படுகிறது. இப்படி கிடைக்கும் எரிசக்தியைப் பயன்படுத்துவதால் ஏராளமான கழிவுகள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன.

இத்தகைய கழிவுகளில் கரிம வாயு மிக முக்கியமானது. காற்று மண்டலத்தில் கலக்கும் பாதக வாயுக்களில் 95 விழுக்காடு கரிம வாயுவாக இருக்கிறது என்பது 2014வது ஆண்டின் நிலவரம். அதிக அளவு கரிம வாயு கலப்பதால் காற்று மண்டலம் வெப்பம் கூடுகிறது. இதனால் பருவநிலை மாறுகிறது.

இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் அலைகள் உயர்ந்து தாழ்வான நிலப் பகுதிகள் கடலுக்குள் போய்விடும் ஆபத்து அதிகரிக்கிறது.

இயற்கை வளத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய பேராபத்தும் அதிகமாகி எதிர்கால தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கூடி வருகின்றன.

இந்தப் பருவநிலை மாற்றப் பிரச்சினை உலகப் பிரச்சினையாக இப்போது உருவெடுத்துவிட்டது. இந்த நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் போக்கு மேலும் கவலை தருவதாக இருக்கிறது.

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரும் ஆண்டுகளில் பிரம்மாண்டமாகத் தலையெடுக்கும் என்ற சூழலில், இத்தகைய நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தித் துறையில் முதலீடுகள் 2018ல் குறைந்துவிட்டன.

அதேவேளையில், எரிசக்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்தும் போக்கும் சாதனை அளவுக்குக் கூடிவிட்டது. இதனால் பருவநிலை மாற்றம் முன்பைவிட இன்னும் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

இத்தகைய ஒரு சூழலில், இந்தப் பெரும் பிரச்சினையின் ஆபத்தை உணர்ந்திருக்கும் பல நாடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளைக் கடைப்பிடித்து கரிம வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொண்டு மறுபுழக்க எரிசக்திகளை- அதாவது சூரியசக்தி, காற்றாலை மின்சக்தி, நீர்மின் சக்தி போன்றவற்றை அதிகம் உருவாக்கி பயன்படுத்த முயன்று வருகின்றன.

பருவநிலை மாறுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்னதாகவே உணர்ந்து கொண்டு அதைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்து உதவும் நாடுகளில் சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க நாடாக இருக்கிறது.

தொழில் பெருக்கம் பாதிக்கப்படாமல், அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் சிங்கப்பூர் பல முயற்சிகளை முன்னதாகவே திட்டமிட்டு எடுத்து வருகிறது.

எரிசக்திக்காக எண்ணெய்யைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டு சிங்கப்பூர் இந்த 21வது நூற்றாண்டு தொடக்கத்திலேயே 95% அளவுக்கு இயற்கை எரிவாயுவுக்கு மாறிவிட்டது. எரிசக்தியைப் பயன்படுத்தத் தேவைப்படும் எண்ணெய் முதலானவற்றுள் இயற்கை வாயுதான் மிகவும் தூய்மையானது.

இந்த முயற்சியுடன் நின்றுவிடாமல் சூரிய மின்சக்தியை அதிகமாக உருவாக்கும் முயற்சியிலும் சிங்கப்பூர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இப்போது தயாரிக்கும் சூரிய மின்சக்தியைப் போல ஏழு மடங்கிற்கும் அதிக சூரிய மின்சக்தியை 2030ல் தயாரிக்கவேண்டும் என்று சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளது.

இந்த உறுதிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது.

இதற்காக மேலும் பல வீவக புளோக்குகளில் சூரிய மின்சக்தி தகடுகளைக் கழகம் பொருத்தும். வீவக புளோக்குகளின் கூரைகளில் கிடைக்கும் இடத்தைக்கொண்டே அதிக அளவு சூரிய மின்சக்தியைத் தயாரிக்க உதவும் நவீன தொழில்நுட்பங்கள் இதில் கழகத்துக்கு உதவும் என்பது திண்ணம்.

கழகத்தின் இந்த முயற்சி பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்க முடிந்த அளவுக்கு உதவும் என்பதும் உறுதி.

எரிசக்தியைத் தயாரிக்க வழிவழியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மூலப்பொருட்களை ஒரே நாளில் திடீரென கைவிட்டுவிட்டு முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறிக்கொள்வது என்பது இயற்கை வளம் அதிகம் உள்ள நாடுகளால் கூட முடியாத ஒன்று.

ஆனால் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தடுத்தாக வேண்டும் என்ற கொள்கையும் புரிந்துணர்வும் அதற்கான செயல்களும் முக்கியமானவை. இதை மனதில்கொண்டு சிங்கப்பூர் எடுத்து வரும் முயற்சிகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளைத் தடுக்க விரும்பும் உலகிற்கு உறுதுணையாக இருக்கும். சிங்கப்பூர் மேலும் பல முயற்சிகளை எடுத்து இன்னும் உதவ முடியும், உதவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!