நிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்

வென். ஸ்ரீநிவாசன்  
இணை ஆசிரியர்,  ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிச்சயமில்லாத பூகோள அரசியல் சூழலில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய பாதுகாப்பான இடத்தையே நாடுவார்கள் என்பது பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆகப் புதிய ஆண்டு அறிக்கையைப் பார்க்கையில் தெளிவாகப் புரிகிறது. 

நிலையில்லாத உலகப் பொருளியல், தன்னைப்பேணித்தனம், வர்த்தகப் போர் ஆகிய சூழலிலும் சிங்கப்பூருக்கு சாதனை அளவில் முதலீடுகள் குவிந்து இருப்பதால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றுகிறது. 

சிங்கப்பூருக்கு வந்த நிலைச்சொத்து முதலீட்டு உத்திரவாதங்கள் 2019ல் $15.2 பில்லியன். மொத்த தொழில் துறை செலவினம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமாக சென்ற ஆண்டு $9 பில்லியனாக இருந்தது. 

இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால் சிங்கப்பூர் பொருளியலின் மதிப்பு சாதனை அளவாக $29.4 பில்லியன் கூடியது. 

துல்லிய பொருளியல் துறை 25 விழுக்காட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் என்று தெரிகிறது. கணினிச் சில்லுகள், எரிசக்தி, தகவல் தொடர்பு, ஊடகம், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் ஆகிய துறைகளில் முதலீடுகள் குவிகின்றன. 

இந்தத் திட்டங்கள் எல்லாம் நடப்புக்கு வரும்போது 32,814 வேலைகள் உருவாகும் என்பது இதில் மிக முக்கியமான அம்சமாகும். 

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி ஏறக்குறைய 1 விழுக்காடாக உள்ள நிலையில், வேலை போய்விடுமோ என்ற கவலை நிலவும் சூழலில் இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

உலகப் பொருளியல் சூழ்நிலை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு  பார்த்தால் சிங்கப்பூருக்கு இந்த அளவுக்கு முதலீட்டு உத்திரவாதம் கிடைத்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் மறுபுறம் வியப்பாகவும் இருக்கிறது. 

சிங்கப்பூர் தொடர்ந்து தன்னுடைய வலுவான போட்டித்திறன் அனுகூலத்தை உலகளவிலும் வட்டார அளவிலும் கட்டிக்காக்கும் என்றுதான் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உறுதிபட எடுத்துக் கூறுகின்றன. 

முதலீடு செய்யப்போவதாக உறுதி கூறி உள்ள நிறுவனங்கள், பெரும் பணத்தை நீண்டகாலப் போக்கில் சிங்கப்பூரில் தொழில்களில் போடப் போவதாக அறிவித்து உள்ளன. சிங்கப்பூரின் நீண்ட எதிர்காலத்தின் மீது அவை வைத்துள்ள நம்பிக்கை இதன்மூலம் புலப்படுகிறது. 

தேர்ச்சிமிக்க, நல்ல ஊழியர்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கக்கூடிய நிலையான ஒரு பங்காளியாக சிங்கப்பூரை அந்த முதலீட்டு நிறுவனங்கள் நம்புகின்றன என்பதும் இதன்மூலம் அறியப்படுகிறது. 

கணினிச் சில்லு தொழில்துறை மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரியவந்து உள்ள காலகட்டத்தில் இந்தத் துறையில் பெரிய அளவில் முதலீடுகளுக்கு உத்திரவாதம் கிடைத்துள்ளது. இதைப் பொறுத்தவரையில் 5ஜி தொழில்நுட்பத்தை இங்கே நினைவு கூருவது பொருத்தமானது. 

நிறுவனங்களின் மின்னிலக்க உருமாற்ற முயற்சிகளுக்கு ஆதரவு தரப்போவதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ள உறுதி மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். 

தேசிய அளவிலான ஒரு பொருளியல் நடவடிக்கையின் வெற்றியை அதன்மூலம் ஏற்படக்கூடிய வேலைகளை வைத்தே கணக்கிட வேண்டியிருக்கும். 

புதிதாக இடம்பெறக்கூடிய முதலீடுகள் மூலம் ஏற்படக்கூடிய வேலைகள், புதிய தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றும் பாணியிலான வேலைகளாக இருக்கும் என்ற ஓர் எண்ணம் ஏற்படுகிறது.

உற்பத்தித் துறை மற்றும் புத்தாக்க வல்லுநர்களுக்கு அதிகத் தேவை இருக்கும். வட்டாரத் தலைமையக நடவடிக்கைகளை நிர்வகித்து நடத்த பலதரப்பட்ட தேர்ச்சிகளுடன் கூடிய நிபுணத்துவ நிர்வாகிகள் தேவைப்படுவார்கள். 

 இதில் தேவைப்படும் அளவிற்கு மனித வளத்தை சிங்கப்பூர் வேகமாக உருவாக்கித் தர முடியுமா என்பதே கேள்வி.

சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்கள் உருவாக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை நிறைவேற்றுமா?

அடுத்த சில ஆண்டுகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் வேலை

களின் எண்ணிக்கை, சிங்கப்பூரின் எல்லா உயர்கல்வி நிலையங்களும் சேர்ந்து உருவாக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையைவிட 10 மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. 

ஆகையால் தேவைப்படும் அளவுக்கு ஊழியர்களை எங்கிருந்து பெறுவது? ஏற்கெனவே ஊழியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இத்தகைய ஒரு சூழல் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பொருத்தமான ஊழியர்களை வேலையில் அமர்த்த முடியாமல் ஏற்கெனவே தடுமாறி வருகின்றன. பெரிய நிறுவனங்கள் அதிக நிதி வளத்துடன்  ஊழியர்களைத் தேடும்போது அவற்றுக்கு இத்தகைய சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஈடுகொடுக்க முடியுமா?

பக்கத்து நாடுகளில் இருந்து தேர்ச்சியாளர்களைப் பெறுவதே முன்பு பழக்கமாக இருந்து வந்தது. ஆனால் சிங்கப்பூரர்களுக்கே பெரும்பாலான வேலைகள் கொடுக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவது இப்போது முக்கிய நோக்கமாக ஆகி இருக்கிறது. 

ஆகையால் புதிய பொருளியல் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூர் இப்போதைய ஊழியர்களுக்கு அதிவேகமாகப் பயிற்சி அளித்து அவர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். 

வாய்ப்பு கதவை தட்டும்போது அதைக் கெட்டியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலகளவில் நிச்சயமில்லாத சூழல் நிலவிய போதிலும் ஆசியான் அமைதியாகத் திகழ்கிறது. ஆசியானுக்குள் சிங்கப்பூர் பாதுகாப்புமிக்க இடமாக விளங்குகிறது. முதலீட்டாளர்களுக்கும் தொழில் முனைவர்களுக்கும் பாதுகாப்பு, நிலைப்பாடுமிக்க,  அவர்கள் முன்னரே கணித்து முடிவெடுக்கத்தக்க ஒரு நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. 

பொருளியல் வளர்ச்சிக் கழகம் அருமையான சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அதை சிங்கப்பூர் நிறைவேற்றி முடிப்பதற்கு இப்போது காலம் கனிந்து இருக்கிறது.