கொரோனா எதிர்ப்புப் போர்: சிங்கப்பூரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

2019 கொரோனா கிருமி (கொவிட்-19) உலகம் முழுவதும் பயத்தையும் பதற்றத்தையும் கிளப்பி இருக்கிறது. சீனாவில் ஏறக்குறைய 1,500க்கும் மேற்பட்டோரைக் கொன்றுவிட்ட அந்தக் கிருமி, 66,000க்கும் மேற்பட்டோருக்குத் தொற்றியுள்ளது.

சிங்கப்பூரிலும் 67 பேர் கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொரோனா கிருமி சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் தலைநகரான வூஹானில், அநேகமாக வௌவால் மூலம் கிளம்பி மனிதர்களுக்குத் தொற்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கட்டுரையில் சிங்கப்பூரர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

நாம் முன்பு இதைவிட பெரிய நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து மீண்டு வந்திருக்கிறோம்.

சிங்கப்பூரர்கள் உறுதியானவர்கள், மீட்சித்திறன் உள்ளவர்கள் என்பதை உலகுக்கு நாம் காட்டி இருக்கிறோம். பாதகம் வரும்போது ஒற்றுமையாக, துணிச்சலுடன், கருணை மனப்பான்மையுடன் இருந்து வந்துள்ள நாம், தொடர்ந்து அவ்வாறே திகழ முடியும்.

உலகப் போரில் உயிர்பிழைத்த கதை

நான் சிறு பிள்ளையாக இருந்தபோது இரண்டாவது உலகப்போர் காலம். சிங்கப்பூரில் ஷங்காய் ரோடு என்ற பகுதியில் ஏழைகள், பணக்காரர்கள் எல்லாம் சேர்ந்து பன்மய சமூகம் வாழ்ந்து வந்த ஒரு வட்டாரத்தில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நானும் வாழ்ந்து வந்தேன். நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம். எங்களுக்கு இடையில் மிக அதிக நம்பிக்கை இருந்தது. வீட்டின் வாசல் கதவை நாங்கள் பூட்டியதே இல்லை. எப்போதுமே ஒருவர் மற்றவரை வரவேற்று வாழ்ந்து வந்தோம்.

உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியதால் கிடைக்கக்கூடிய காலி நிலத்தில் சக்கரைவள்ளிக் கிழங்கையும் மரவள்ளிக் கிழங்கையும் பயிர் செய்தோம். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் மருந்தைக் கொடுத்து உதவுவார்கள். ஒற்றுமை உணர்வு வலுவாக இருந்தது.

ஒருவர் மற்றொருவரின் மீது கருணை கொண்டு, ஐக்கியமாக இருந்ததன் மூலம் ஷங்காய் ரோடு மக்கள் உலகப்போரைச் சமாளித்து உயிர்பிழைத்தார்கள். அந்தக் கால மக்கள் சிலருடன் இன்னமும் நான் தொடர்பில் இருக்கிறேன்.

சுதந்திர அதிர்ச்சியில் இருந்து

மீண்ட கதை

மலேசியாவின் அங்கமாக இருந்தால்தான் சிங்கப்பூர் ஜீவித்து நீடித்து நிலைக்க முடியும் என்று சிங்கப்பூர் தலைவர்கள் நம்பினார்கள். அதனால் 1965 ஆகஸ்ட்டில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்ட பிறகு சிங்கப்பூர் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

என்றாலும் அவர்கள் துவண்டுவிடவில்லை. துணிச்சல், உறுதி, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடிவு செய்து ஒரு நாட்டை உருவாக்க அவர்கள் புறப்பட்டார்கள். அந்தத் தலைவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் பிரம்மாண்டமானவை.

ஏராளமான சாவல்களை எதிர்நோக்கிய போதிலும் அரசாங்கமும் சிங்கப்பூர் மக்களும் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. பணக்கார நாடுகளிடம் இருந்து பண உதவியையும் கேட்கவில்லை. கடும் உழைப்பு, சுய தியாகம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தும் உலகம் முழுவதற்கும் தன் கதவுகளைத் திறந்துவைத்து வாழவேண்டும் என்று அரசாங்கமும் மக்களும் முடிவுசெய்தனர்.

கடந்த 54 ஆண்டுகளில் சிங்கப்பூர் கண்டுவந்துள்ள முன்னேற்றம் ஓர் அதிசயம்தான். ஆனால் அந்த அதிசயத்தை நிகழ்த்தியது மனிதர்கள் தானே தவிர அது இயற்கை நிகழ்த்தியது அல்ல.

ஆற்றல்மிக்க, நேர்மைமிக்க அரசியல் தலைவர்கள், அருமையான அரசாங்கச் சேவை, கடுமையாகப் பாடுபடக்கூடிய, அதோடு தங்கள் வாழ்வில் பலவற்றையும் கற்றுக்கொண்டு மாற்றங்களைத் தழுவிக்கொள்ள தயாராக உள்ள மக்கள் எல்லாரும் சேர்ந்துதான் அந்த அதிசயத்தைச் சாதித்து இருக்கிறார்கள்.

ஒரு நாளும் தோல்வி இல்லை என்ற நம்முடைய முன்னோடி தலைமுறையினரின் மனஎழுச்சியை நாம் என்றுமே கைவிட்டுவிடக்கூடாது.

சார்ஸ் போரில் வென்ற விதம்

சிங்கப்பூர், 2003 மார்ச்சில் கண்ணுக்குத் தெரியாத பயங்கரமான ஓர் எதிரியின் தாக்குதலுக்கு ஆளானது. அந்த எதிரிதான் சார்ஸ் கிருமிகள். அவை சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் தலைநகரான குவாங்சூவில் வௌவால் அல்லது புனுகுப்பூனையில் இருந்து புறப்பட்டு கிளம்பியதாகக் கூறப்பட்டது.

2003 மார்ச் முதல் ஜூலை வரை சிங்கப்பூரில் சார்ஸ் கிருமிகள் தலைவிரித்தாடின. அனைத்து மக்களும் அரசாங்கமும் சேர்ந்து அந்தக் கிருமிகளை ஒழிக்கப் பாடுபட்டனர். போர் முடிந்தபோது 33 பேர் மாண்டு இருந்தனர்.

சார்ஸ் கிருமிகளை சிங்கப்பூர் போராடி சமாளித்த விதத்தை உலக சுகாதார நிறுவனம் தனிச்சிறப்பு வாய்ந்த முயற்சி என்று பாராட்டியது.

சார்ஸ் நோயை வெற்றி கண்டதற்குப் பல காரணங்கள் உண்டு.

கட்டுரையின் நோக்கம்

இந்தக் கட்டுரையில் இரண்டு காரணங்களை முக்கியமாகக் குறிப்பிட நான் விரும்புகிறேன். மக்களின் பங்கு; நம்முடைய மருத்துவர்கள், தாதியர்கள், இதர சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் கதாநாயகர்களாகத் திகழ்ந்து வெளிப்படுத்திய மிக உன்னத செயல்திறன் இரண்டும்தான் நான் குறிப்பிட விரும்பும் அம்சங்கள்.

சார்ஸ் தொற்றியபோது மக்கள் அச்சம் அடையாமல் அமைதியாக இருந்து அன்றாட காரியங்களைப் பார்த்து வந்தார்கள். தங்கள் உடல் வெப்பநிலையைக் கவனித்து கைகளை அடிக்கடி கழுவி வந்தார்கள்.

தனித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் கட்டுப்பாடுகளைக் கவனமாகக் கடைப்பிடித்து நடந்து கொண்டார்கள். அக்கம் பக்கத்தினர் உதவினார்கள். பலர் தொண்டூழியத்தில் ஈடுபட்டார்கள். மக்களிடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒற்றுமை நிலவியது.

சார்ஸ் கிருமி தலைவிரித்தாடியபோது நம்முடைய மருத்துவர்களும் தாதியர்களும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் ஆற்றிய தொண்டுகளைச் சிங்கப்பூர் மறக்கவே கூடாது.

மற்ற சில நாடுகளைப்போல் அல்லாது, சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மருத்துவர்கள், தாதியர்கள், தங்களுக்குக் கிருமி தொற்றி உயிரே போய்விடக்கூடிய ஆபத்து ஏற்படக்கூடும் என்றாலும் அச்சமடையாமல் தாங்களாகவே முன்வந்து உதவினார்கள்.

சார்ஸ் காலத்தின்போது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஐந்து பேர் மாண்டுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரர்களே, இதற்கு முன் இதர நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து நாம் மீண்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் நெருக்கடிகளைச் சமாளித்து சிங்கப்பூர் உயிர்ப்பித்து எழுந்து வந்துள்ளது.

இப்போதைய கொரோனா கிருமி காலத்திலும் முன்புபோலவே செயல்பட்டு இந்தக் கொடிய கிருமியை நாம் ஒழிக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!