முரசொலி: கிருமியில் இருந்து காக்கும் கேடயம்; வளர்ச்சியை மீட்கும் ஆயுதம்

முன்னேறிச் செல்லும் வழியில் ஆறு குறுக்கே வந்தால் அதைக் கடந்து செல்வதைப் பற்றி அப்போது யோசிக்கலாம் என்று இருந்துவிடாமல் அப்படிப்பட்ட சவால் வரலாம் என்று அனுமானித்து அதைச் சமாளிக்க இப்போதே திட்டம் போடுவதே, ஒப்பிட்டுப் பார்க்கையில் விவேகமானதாக இருக்கும். 

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 18ல் தாக்கல் செய்த 2020 வரவுசெலவுத் திட்டம் இத்தகைய தொலைநோக்குக் கண்ணோட்டத்தையே மையமாகக் கொண்டிருக்கிறது. 

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமி பாதிப்பை எதிர்நோக்கி உள்ள சிங்கப்பூரின் ஊழியர்கள், நிறுவனங்கள், முதல்நிலை அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக நிதி அமைச்சர் தனது வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கி இருக்கும் $6.4 பில்லியன் என்பது கணிசமான ஒன்று என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அதோடு மட்டுமின்றி, இப்போதைய சிரமங்களுக்கு அப்பாலும் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எல்லாம் கணித்து அவற்றையும் சமாளிக்க வேண்டும் என்று அரசாங்கம் திட்டவட்டமான உறுதியுடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் நிதி அமைச்சர் அடுத்த மூன்று ஆண்டுகளில் $8.3 தொகையை ஒதுக்கி இருக்கிறார். 

தொழில்துறை உருமாற்றங்கள், பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏதுவாக இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

இவற்றோடு, பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதிலும் வரவுசெலவுத் திட்டம் முக்கிய கவனத்தைச் செலுத்தி இருக்கிறது. 

இவை எல்லாம், இப்போதைய பொருளியல் நிலவரம், கொரோனா கிருமித் தாக்குதல் காரணமாக சிங்கப்பூரர்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல், அந்த நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் அளவுக்கு ஊக்கம் தருபவையாக இருக்கின்றன. 

கிருமித்தொற்று என்பது பொது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. அது பொருளியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வர்த்தக, தொழில் அமைச்சுகூட, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி -0.5 விழுக்காடு முதல் 1.5 விழுக்காடு வரைதான் இருக்கும் என்று குறைத்து கணித்துள்ளது. 

இதோடு மட்டுமின்றி, பொருளியல் மந்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசாங்கம் எச்சரித்து உள்ளது. 

கொரோனா கிருமி காரணமாக சுற்றுலா, போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், உணவுச் சேவை, வழிநில்லாப் போக்குவரத்துச் சேவை ஆகிய துறைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதர துறைகளிலும் கொரோனா பாதிப்பை உணர முடிகிறது.

முதலாளிகள் லாபம் குறைந்துவிடும் என்று கவலைப்படுகிறார்கள். வேறு சிலரோ தொழில் நடத்த முடியுமா என்ற சந்தேகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். ஊழியர்கள் வேலை நிலைக்க வேண்டுமே என்று கவலையடைந்து, அச்சப்படுகிறார்கள். 

தொழில்துறை உருமாற்றங்கள், அமெரிக்கா-சீன வர்த்தகப் போர் ஆகியவை காரணமாக ஏற்கெனவே பதற்றம் அடைந்துள்ள ஊழியர்களை, கொரோனா கிருமிகள் இன்னும் பயமுறுத்தி வருகின்றன.  

இந்த நிலையில், முதலில் இவர்களின் அச்சத்தைப் போக்கவேண்டிய அவசர அவசியத்தை உணர்ந்து அதற்கேற்ப வரவுசெலவுத் திட்டத்தை துணைப் பிரதமருமான திரு ஹெங் தாக்கல் செய்து இருக்கிறார் என்று கூறுவதற்குத் தாராளமாக இடம் இருக்கிறது. 

ஊழியர்களின் வேலைகளைக் காத்து அதே காலகட்டத்தில் அவர்களின் தேர்ச்சி, திறமைகளை அதிகப்படுத்தி அதன்மூலம் பொருளியலை நிலைப்படுத்தலாம். பொருளியலுக்கு ஆதரவு அளிக்கலாம். இதற்கான நடைமுறைகள், நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்திட்டங்கள் அவசியம் என்பதால் வரவுசெலவுத் திட்டத்தில் அத்தகைய பல அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

ஊழியர்கள் இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதோடு, எதிர்கால பொருளியலுக்கு ஏற்ப தேவையான ஆற்றல்களை அவர்கள் இந்தக் காலகட்டத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்து அவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய தகுதியுடன் எப்போதுமே திகழவேண்டும் என்பது மிக முக்கியமானது. 

இது ஒருபுறம் இருக்க, குடும்பத்தினர் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க பல உதவிகளையும் அமைச்சர் அறிவித்து உள்ளார்.

சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வீடமைப்பு ஆகியவை தொடர்பிலான மானியங்களை வரவுசெலவுத் திட்டம் கூட்டி இருக்கிறது.இவை குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.

கொரோனா கிருமியைச் சமாளித்து சிங்கப்பூர் தொடர்ந்து செழித்தோங்கி முன்னேறுவதற்கான பாதையை தங்குதடையின்றி அமைக்க வேண்டுமானால் மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமானது. அதுவும் நிலையில்லாத பொருளியல் நிலவும் உலகில், கொரோனா கிருமியும் சேர்ந்துகொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்தக் காலகட்டத்தில், சிங்கப்பூரர்கள் எதிர்காலத்தில் கொண்டுள்ள நம்பிக்கை தகர்க்க முடியாத இரும்புக் கோட்டையாகப் பலப்பட வேண்டும். 

அத்தகைய நம்பிக்கை அரணை ஏற்படுத்துவதில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள வரவுசெலவுத் திட்டம் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு  அந்த அரணுக்கு இன்னும் வலுசேர்க்க வேண்டும்.