கொரோனா கிருமி ஒழிய ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும்

உலகம் அப்போதைக்கு அப்போது கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ விரோதிகளின் மிரட்டலை எதிர்நோக்கி அவற்றைத் திறம்பட சமாளித்து வந்திருக்கிறது. 

ஆனால் இப்போது சீனாவில் கிளம்பி இருக்கும் ஒரு வகை கிருமியைக் கண்டு இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் பயப்படுகிறது. 

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமிகள், ஒரு பக்கம் ஒழித்தால் மறு பக்கம் உயிரோடு கிளம்பும் கொடூர உயிர்க்கொல்லி தொற்றுநோயாகத் தலை எடுப்பதைக் காட்டும் நிலவரங்களை உணர முடிகிறது.

கொரோனா கிருமிகள் சீனாவில் கொலைகார கிருமிகளாகப் பரிணமித்து ஆடிய கோரத்தாண்டவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து வருவதாகத் தெரியும் வேளையில், உலகின் இதர பல பகுதிகளில் எல்லைகளைக் கடந்து அந்தக் கிருமிகள் பேயாட்டம் போடத் தொடங்கி இருப்பது கவலை தருகிறது. 

உலகின் கிட்டத்தட்ட 60 நாடுகளில் கொரோனா கிருமிகள் தலைகாட்டி இருக்கின்றன. ஈரான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா கொலைகார கிருமி களாக மாறி இருக்கிறது.

பொருளியல் உலகமயமும் விமானப் பயணங்களும் அதிகரித்து இருக்கும் இந்த நவீன உலகில் எல்லையோ தொலைதூரமோ அந்தக் கிருமிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை எளிதாகச் சொல்லிவிடலாம். 

சளிக்காய்ச்சல் போன்ற கிருமிகளை ஒத்து இருந்தாலும் ரகசியமாக கைவரிசையைக் காட்டுவதில் இதர பல வகை கிருமிகளைவிட கொரோனா கிருமிகள் கைதேர்ந்தவையாக இருக்கின்றன. 

ஒருவரின் உடலில் அவை தொற்றி இருப்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிந்துகொள்ள முடியாத சூழல் இருக்கிறது. 

இப்படி எல்லை கடந்து வேகமாக பரவும் கொரோனாவைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயமும் எல்லைகளில் பயணிகளுக்கு முழுமையான உடல் பரிசோதனைகள் நடத்த வேண்டிய தேவையும் ஏறக்குறைய எல்லா நாட்டுக்குமே ஏற்பட்டு இருப்பது தவிர்க்க இயலாத ஒன்றுதான்.

இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்குப் பலன் தருபவை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். என்றாலும் மனிதர்கள் நடைமுறைப்படுத்துகின்ற கடுமையான பல நடவடிக்கைகளை எல்லாம் தோற்கடித்து கிருமிகள் எல்லை கடக்கும் திறமை கொண்டவை என்பதை மறுப்பதற்கில்லை. இதைத்தான் கொரோனா நமக்கு மெய்ப்பித்துக் காட்டி வருகிறது. 

கொரோனாவை வளரவிடாமல் தடுக்க தன்னால் ஆன அனைத்தையும் உரிய நேரத்தில் சிங்கப்பூர் எடுத்ததன் பலனாக அந்தக் கிருமியின் ஜம்பம் மற்ற நாடுகள் அளவுக்கு இங்கு அவ்வளவாகப் பலிக்கவில்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் கொரோனா கிருமிகளின் பாதிப்பு குறைவுதான்.

கொரோனா கிருமித்தொற்று உலக தொற்றுநோயாக மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த திங்கட்கிழமைகூட மீண்டும் அபாய சங்கு ஊதியது. 

உலகம் ஏற்கெனவே பொருளியல் நிலையில்லாத சூழலை அனுபவித்து வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா கிருமி சுகாதார பாதிப்புளை மட்டுமின்றி பொருளியல் பாதிப்புகளையும் அதிகமாக ஏற்படுத்திவிடும் என்பதால் அந்தக் கிருமியைத் துடைத்தொழிப்பதில் உலக நாடுகள் மும்முரமாக ஆயத்தமாக வேண்டும். 

இதற்கு இப்போதைய காலகட்டம் சரியான தருணம் என்பதை நிலவரங்கள் வலியுறுத்துகின்றன. 

கொரோனா கிருமி புதிதாக பல நாடுகளிலும் புகுந்து வருவதாகவும் அதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்றும் தொற்றுநோய்த் துறை வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள். 

 ஆனால் எல்லாவற்றையும் வைத்து பார்க்கையில், கொரோனாவைத் துடைத்தொழிக்கும் ஆற்றலுடன் உலகம் முழு ஆயத்தநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. 

அமெரிக்காவில்கூட கொரோனாவைத் தவிர்ப்பதற்கான முழு ஆயத்தநிலை இல்லை என்று அந்த நாட்டு அரசியல்வாதிகளில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். 

அதோடு மட்டுமின்றி, கொரோனா தொற்றுநோயாக மாறிவிட்டால்  அவசரமாகத் தேவைப்படும் முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவுக்கு இல்லாமல் போய்விடும் என்றுகூட அமெரிக்க அரசியல்வாதிகள் சங்கடப்படுகிறார்கள். 

அமெரிக்காவே இப்படி என்றால் சுகாதாரப் பராமரிப்பு முறைகள் சரியில்லாத நாடுகளைப் பொறுத்தவரையில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்களே கணித்து புரிந்து கொள்ளுங்கள்.

உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய பங்காக ஏராளமான நாடுகளுக்கு முகக் கவசங்கள், கையுறைகள், உடுப்புகளை அனுப்பி வருகிறது. ஆனால் உலகம் போதிய அளவுக்கு ஆயத்தமாக இருக்கிறதா என்பது தான் பிரச்சினை.  

கொரோனா ஒழிந்தால்தான் உலகம் நிம்மதிப் பெருமூச்சுவிடும். ஆகையால் உலக நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும். 

 இந்நிலையில், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் பரவி உலக நிதிச் சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்திய இந்தக் கிருமித்தொற்றை உலக சுகாதார நிறுவனம் இதனால் ஏற்படக்கூடிய அபாயத்தை உச்சநிலைக்கு உயர்த்தியுள்ளது.   

இந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அது பரவியுள்ள நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அது கூறுகிறது.