கொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது

கொரோனா கிருமியை ஒழிக்க சிங்கப்பூர் அரங்கேற்றி வரும் போராட்டத்தில் மக்களின் பாதுகாப்பும் அவர்களுக்கும் பொருளியலுக்கும் சமூகத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதும்தான் மிக முக்கிய இலக்கு களாக இருக்கின்றன.

இவற்றை எட்டுவதற்காகவே அரசாங்கமும் மக்களும் ஒற்றுமையுடன் பாடுபட்டு வருகிறார்கள். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் கடுமையான கட்டுப்பாடுகள், முடக்கம் எல்லாம் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் விளைவாக நாடும் வீடும் சமூகமும் அனுபவிக்கும் பொருளியல், சமூகப் பாதிப்பு கள் ஏராளம் என்றாலும் திடீரென கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது என்று அதிகாரிகள் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருவதை அலட்சியப்படுத்தவோ மீறவோ முடியாத சூழ்நிலை இருக்கிறது என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

எந்த ஒரு நாட்டிலும் தொற்றுநோய் ஒரு மிரட்டலாக நீடித்து வந்தால் அந்த நாடு தனது வழக்கமான பொருளியல் நடவடிக்கைகளை முழு மூச்சாகத் தொடர முடியாது என்பது தான் உண்மை.

அதுவும் சிங்கப்பூர் போன்ற வர்த்தகத்தையே பெரிதும் சார்ந்து இருக்கின்ற, இயற்கை வளம் இல்லாத, சிறிய நாடு, தன்னுடைய பொருளியலை மறுபடியும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமானால் இப்போதைய கிருமித்தொற்றைத் துடைத்து ஒழிப்பதோடு நின்றுவிடலாகாது.

அத்தகைய ஒரு தொற்று மறுபடியும் தலைதூக்காத அளவுக்கு அது போதிய அரணையும் ஏற்படுத்த வேண்டும். இதைச் சாதிக்க சிங்கப்பூர் பலவற்றையும் செய்தாக வேண்டிய அவசர அவசிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதாவது, ஜூன் 1 வாக்கில் கொரோனா கிருமித்தொற்று குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துவிட வேண்டும்.

அதுவும் சமூகத் தொற்று மிகவும் அல்லது மேலும் குறைய வேண்டும். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கிருமித்தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும்.

இவற்றோடு சிங்கப்பூரின் கொரோனா கிருமிப் பரிசோதனை ஆற்றலும் அதிகரிக்க வேண்டும். இப்போது நாள் ஒன்றுக்கு 8,000 பரிசோதனைகள் நடக்கின்றன.

இந்த எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 40,000 என்ற அளவுக்கு அதிகரிக்கத் திட்டம் உள்ளது.

இவை எல்லாவற்றையும் சாதித்தால்தான், கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு கொரோனா கிருமிகள் மறுபடியும் கிளம்பாமல் தடுக்க முடியும். பொருளியல் மறுபடியும் பழையபடி தலைதூக்கவும் முடியும்.

முறையான பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்படாமலேயே அவசரப்பட்டு கட்டுப்பாடுகளை அகற்றிவிட்டால் கொரோனாவுக்கு மறுபடியும் கதவைத் திறந்துவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்.

அதன் விளைவாக மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாடாளுமன்றத்தில் தாக்கலான அமைச்சர்நிலை அறிக்கைகள் வலியுறுத்தி உள்ளன.

இப்படி ஒரு சூழலுக்கு வழிவிட்டால் பொருளியலுக்கு அடிமேல் அடியாக மேலும் பாதிப்பு ஏற்படும்.

அரசாங்கமும் மக்களும் இப்போது இணைந்து எடுத்துவரும் முயற்சிகள் எல்லாம் பாழாகிவிடும். பல நாடுகளின் அனுபவங்கள் இதையே போதிக்கின்றன.

கொரோனா கிருமிப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் உலக நாடுகள், அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்திக் கூறி இருக்கிறது.

உலக நாடுகள் படிப்படியாகத்தான் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று அறிவுரை கூறி இருக்கும் அந்த அமைப்பு, மறுபடியும் கொரோனா கிருமி தலைதூக்கக்கூடும் என்பதால் அதைச் சமாளிக்க எல்லா நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

இதற்குச் செவிசாய்க்கும் வகையில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாகக் கொஞ்சம் கொஞ்சமாகவே அகற்றி வருகின்றன. அதேநேரத்தில் கொரோனா கிருமிக்கு எதிரான பாதுகாப்பு அரண்களையும் நாடுகள் பலப்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அம்சமாக உருவெடுத்துள்ளன. அதனால் தான் அங்கெல்லாம் அரசாங்கம் மும்முனை உத்தியைக் கடைப்பிடிக்கிறது.

அதாவது அதிகம் தொற்று உள்ள அத்தகைய விடுதிகளில் கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்துவது; இப்போது தொற்று இல்லாத விடுதிகளில் கிருமி தலைதூக்காமல் தடுப்பது; அத்தியாவசிய பணிகளுக்குத் தேவைப்படுகின்ற எல்லா ஊழியர்களையும் அத்தகைய விடுதிகளில் இருந்து வெளியேற்றி அவர் களுக்குப் பரிசோதனைகளை நடத்துவது என்பதே அந்த மூன்று அம்ச அணுகுமுறை.

இவற்றுடன் குணமடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளிலும் இப்போது ஒருமித்த கவனம் செலுத்தப்படுகிறது.

இதனை ஒட்டி தொற்றில் இருந்து மீண்டு வருவதற்குச் சமூக அளவிலான வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

குணம் அடைந்த ஊழியர்களுக்கு மறு படியும் தொற்று ஏற்படாமல் இருக்க பொருத்தமான இடங்களுக்கு அவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

சிங்கப்பூரின் மருத்துவ, பொருளியல், மனோவியல் வளங்களை எல்லாம் விஞ்சிவிடும் அளவுக்கு கிருமித்தொற்று கட்டுக்குள் அடங்காமல் போய்விட அனுமதிக்கக்கூடாது என்பதை சிங்கப்பூரர்கள் தாங்களாகவே நன்கு உணர்ந்துகொண்டு ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

திடீரென பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவற்றை எல்லாம் மீறாமல் சிங்கப்பூரர்கள் கடைப்பிடித்து வரும் விதம் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

கொரோனா கிருமி தொற்றில் இருந்து எப்படியும் மீண்டு வர வேண்டும் என்று ஒட்டு மொத்த சிங்கப்பூரர்கள் கொண்டிருக்கும் வைராக்கியம் திணிக்கப்பட்ட ஒன்று அல்ல. அவர்களாகவே இப்படிப்பட்ட ஒரு மன எழுச்சியை, உறுதியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரையில் சந்தித்திராத, எதிர்பார்க்கப்படாத கொரோனா கிருமிக்கு எதிராக மக்களிடம் காணப்படும் இந்த எழுச்சி உணர்வு தொடர்ந்து நிலவி வர வேண்டும்.

அப்படிப்பட்ட மன உறுதியுடன் கூடிய சிங்கப்பூரர்கள், கொரோனா கிருமிப் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து பொருளியல் சவால்களையும் திறம்பட சமாளித்து தொடர்ந்து முன்னேறுவார்கள்.

இதுவே நமக்கு அவசியம், இதுவே நம் நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!