முரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது

உலகத்தைவிட்டு ஒழியாமல் இன்னமும் சுற்றிக்கொண்டே இருக்கும் கொரோனா கிருமி பொருளியல், சமூக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் மக்களின் மனநலனிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கி இருக்கிறது.

கொவிட்-19 கிருமி எந்த அளவுக்குப் பாதிப்பை, உயிர் பலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எண்ணிக்கையை வைத்து தெரிந்துகொண்டுவிடலாம்.

ஆனால் உருவம் இல்லாத, கண்ணுக்குத் தெரியாத கிருமி எப்படி, எந்த அளவுக்கு, எவ்வளவு காலம் வரை பாதிக்கும் என்பதை அளவிடுவதற்கோ கணிப்பதற்கோ வழி இருப்பதாகத் தெரியவில்லை.

கொரோனா கிருமி யாரை எப்படி பாதிக்கும்; அதற்கு என்ன மருந்து என்பது எல்லாம் உலகத்துக்கு உறுதிபட இதுநாள் வரை தெரிந்தபாடில்லை. இதுநாள் வரை இப்படிப்பட்ட ஒரு நிலையை உலக மக்கள் சந்தித்ததே கிடையாது.

வழக்கமாக செயல்பட முடியாமல் எல்லா நாடுகளுமே ஏறக்குறைய முடங்கிப் போய் இருக்கின்றன. இதுவரை வாழ்ந்து வந்ததைப் போல வாழ முடியாத சூழ்நிலை உலகில் ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

நல்லது, கெட்டதில் கலந்துகொள்ள இயலா மல், வேலைக்கும் போக முடியாமல் பொழுதுபோக்கு இடங்களுக்கும் செல்ல முடியாமல் வெளியே சென்று சாப்பிடக்கூட முடியாமல் மக்கள் வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார்கள்.

இத்தகைய வேறுபட்ட ஒரு வாழ்க்கைச் சூழலை உலகமே கற்பனையில் கூட நினைத்து பார்த்தது இல்லை என்பதால் யார் யாரைத் தேற்றுவது என்பது கூட தெரியாமல் மானிய இனம் பரிதவிக்கும் ஒரு நிலையை இப்போது நாம் காண்கிறோம்.

ஒருவரின் வழக்கமான சமூக, தனிப்பட்ட சூழ்நிலைகள் மாறும்போது, எதையுமே கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் போது, அதனால் மனிதனுக்கு மனதளவில் ஏற்படக்கூடிய கவலை, பயம் என்பது சிங்கப்பூருக்கோ உலகிற்கோ புதியது அல்ல.

தங்களுக்குப் பழக்கமான ஓர் உலகம் திடீரென கை நழுவிவிட்டதாக மக்கள் உணரும்போது நிச்சயமாக அந்த உணர்ச்சி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இதன் காரணமாகத்தான் உலகளவில் முக்கியமாக வளர்ந்த நாடுகளில் மனநல அமைப்புகளைத் தொடர்புகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் செல்வச் செழிப்பிற்கும் ஆடம்பர வாழ்வுக்கும் உள்ளாகி இருக்கும் மக்கள், திடீரென வேறுபட்ட ஒரு நிலைக்குத் தள்ளப்படும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய வசதிக் குறைவுகள் முதன்முதலாக மனதைத்தான் பாதிக்கிறது என்பதை இந்த நிலவரம் காட்டுகிறது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமிப் பரவலை ஒடுக்க நடப்புக்கு வந்துள்ள கட்டுப்பாடுகள் மிக முக்கியமானவை என்பதை உணர்ந்துகொண்டு மக்கள் அதை பொதுவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இருந்தாலும் கிருமித்தொற்று காரணமாக நெடுநாட்களுக்கு கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தால் அது நிச்சயமாக மனநலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

சமூக அளவில் தனித்து இருப்பது, சலிப்பு, குடும்பத்தில் பிரச்சினைகள் எல்லாம் இத்தகைய மனநலப் பாதிப்புகளில் அடங்கும்.பொருளியல் பாதிப்புகள் நெடு நாட்களுக்குத் தொடர்ந்தால் மக்களிடம் மனச்சோர்வு கூடிவிடும் என்ற கவலையும் அதிகரிக்கிறது.

கட்டுப்பாடுகள் காரணமாக குடும்பத்தினர் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் சில குடும்பங்களில் வன்செயல் சம்பவங்களும் அதிகரித்து இருப்பது மேலும் கவலை தருகிறது.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் இத்தகைய வன்செயல் சம்பவங்கள் 22 விழுக்காடு கூடி இருப்பதாகத் தெரிகிறது.

பெற்றோருக்கு இடையில் பிரச்சினை உள்ள பிளவுபட்ட குடும்பங்களில் மாட்டிக்கொள்ளும் பிள்ளைகள் மனஉளைச்சலுக்கு அதிகம் ஆளாவதும் தவிர்க்க முடியாதது.

சிங்கப்பூரில் மக்களின் மனநலனைக் காப்பதற்காகவே பல அமைப்புகளும் சேவையாற்றி வருகின்றன. மனநலக் கழகம், ‘சில்வர் ரிப்பன்’ சிங்கப்பூர் முதலான அமைப்புகள் மக்களுக்குப் பல வழிகளிலும் அறிவுரை, ஆலோசனைகளைக் கூறி அவர்களின் அச்சத்தைப் போக்கி மனநலனை நல்லபடி காப்பதற்கான உதவிகளைச் செய்து வருகின்றன.

ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இத்தகைய தேவை முடிந்து மறுபடியும் வேலை இடத்திற்குப் படிப்படியாகத் திரும்பி பழையபடி வேலை செய்யத் தொடங்கும்போது பல நாட்களாக தனித்து இருந்ததன் தாக்கம் மனதளவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளின்போது தனித்திருந்து பழகிவிட்டதால் ஒருவரின் தன்னம்பிக்கை குறையக்கூடும் என்று அனைத்துலக அளவில் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் பழையபடி வேலையிடங்களில் வேலை பார்ப்பதில் நிச்சயம் சிரமத்தை எதிர்நோக்குவார்கள் என்பதால் அத்தகையோர் மீண்டும் வேலையிடச் சூழலுக்கு மாற மனதளவில் தயாராக வேண்டும்.

பொருளியல் பாதிப்புகள் தெளிவாக இல்லாத நிலையில் அது ஏற்படுத்தக்கூடிய சமூக பாதிப்புகள், மனநலப் பிரச்சினைகளால் மேலும் அதிகரிக்கவே செய்யும். ஆகையால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மனநலம் கெடாமல் அதை உறுதியாக பாதுகாத்து வரவேண்டும். இதில் அலட்சியம் கூடாது.

இதற்கு நமக்கு நம்பிக்கை பெரிதும் கைகொடுக்கும். தனித்து இருந்தாலும் அந்தத் தனிமையை இனிமையான வழிகளில், பயனுள்ள வழிகளில் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன.

நல்லுறவைப் பேணுவது, புதுப்புது தொழில்நுட்பங்களைக் கற்பது, நட்பு வட்டாரத்துடன் இணையம் போன்ற வழிகள் மூலம் தொடர்புகொண்டு இருப்பது, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது போன்ற பல வழிகளில் ஈடுபட்டு வாழ்க்கை வழிகளை மாற்றிக்கொண்டால் மனநலம் பாதிக்கப்படாது என்பது உறுதி.

உலகம், கொரோனா கிருமியின் பிடியில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்குத் திரும்பும்போது அதற்கேற்ற நிலையில் மக்கள் வாழ்வதற்கும் இந்த உறுதி உறுதுணையாக இருக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!