முரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்

பொருளியலைப் பொறுத்தவரையில், உலகில் வல்லரசுகள் முதல் வளரும் நாடுகள் வரை எல்லா நாடுகளுமே கண்ணாடித் துண்டுகள் உடைந்து கிடக்கும் தரையில் மிகக் கவனமாக பார்த்து பார்த்து அடி எடுத்து வைத்து நிதானமாக நடக்க வேண்டிய ஒரு நிலையில்தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சவாலை கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தி இருக்கிறது.

அதுவும் சிங்கப்பூர் போன்ற, உலகப் பொருளியலுடன் ஒன்றிணைந்த, ஏற்றுமதி சார்ந்த சிறு நாடுகள் இன்னும் இக்கட்டான நிலையை எதிர்நோக்குகின்றன.

அவசரப்படவேண்டிய, அதிலும் நிதானமாக அவசரப்பட வேண்டிய தேவை ஒரு பக்கம்; மிகக் கவனமாக, வியூகம் அமைத்து அடி எடுத்துவைக்க வேண்டிய கட்டாயம் மறுபக்கம் என இதுநாள்வரையில் நினைத்துப் பார்த்திராத ஒரு காலகட்டத்தில், கரணம் தப்பினால் மரணம் என்ற ஒரு சவாலை சமாளிக்க வேண்டிய தேவையை நாடு எதிர்நோக்கி இருக்கிறது.

இத்தகைய நிலையில், கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகளை, பொதுமக்கள் நலனுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற இலக்குடன், ஜூன் 2 முதல் கட்டம் கட்டமாகத் தளர்த்த சிங்கப்பூர் திட்டம் போட்டுள்ளது.

தயாரிப்புத் துறை, உற்பத்தித் துறை, மொத்த வர்த்தகம், நிதிச் சேவைகள் ஆகியவை முதல் கட்டத்தில் செயல்பட இருக்கின்றன.

என்றாலும் கூட இவை எல்லாம் செயல்பட தொடங்கிய உடனேயே திடீரென சூடுபிடித்துவிடும் என்று கூற முடியாது.

பொருளியல் பல நாட்களாக முடங்கியே இருந்து வந்த நிலையில், பொருட்கள், சேவை களுக்கான தேவைகள் உடனடியாக அதிகரிக்காது. பகுதிப் பொருட்கள் கிடைப்பது, தளவாடப் போக்குவரத்து உள்ளிட்ட எல்லாமே எடுத்த எடுப்பிலேயே சரளமாக நடக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

உணவகங்கள், இதர சில்லறை வர்த்தகங்கள், உடலுறுதி நிலையங்கள் போன்ற பொருளியலின் இதர அங்கங்கள் எல்லாம் அநேகமாக ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. திரையரங்குகள், நிகழ்ச்சி அரங்குகள் முதலான கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்கள் எவ்வளவு காலத்திற்குத்தான் இன்னமும் முடங்கி இருக்கும் என்பதும் தெரியவில்லை.

கொரோனா கிருமியை ஒழிக்க தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டப் பிறகுதான் இத்தகைய கூட்டம் கூடும் இடங்கள் எல்லாம் முழுமையாகச் செயல்பட முடியும் என்பதுதான் இப்போதைய நம்பிக்கை.

ஆனால் கொரோனா தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது யாருக்கு வெளிச்சம் என்பதும் புரியவில்லை.

இவை எல்லாவற்றையும் வைத்து கணக்கிட்டுப் பார்க்கையில், சிங்கப்பூரின் பொருளியல் மீட்சி என்பது மெதுவாக, நீண்டகாலம் தொடரக்கூடிய ஒரு கசப்பான நடைமுறையாக இருக்கும் என்பதுதான் உண்மை.

நாட்டிற்கும் வீட்டிற்கும் சமூகத்திற்கும் இது ஒரு பாதகமான சூழல்தான்.

உலகப் பொருளியலும் சரியில்லாமல் சீனா, அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகப் போர் காரணமாக உலக வர்த்தகமும் சரியில்லாமல் இருந்த ஒரு நிலையில், கொவிட்-19 உலகில் தலைதூக்கியது. சிங்கப்பூரையும் அது விட்டு வைக்கவில்லை.

இவை காரணமாக சிங்கப்பூர் மொத்த உள்நாட்டு வளர்ச்சி பூஜ்ஜியத்திற்குக் கீழே 4 விழுக்காடு வரை இறங்கிவிடும் என்று அதிகாரபூர்வமான கணிப்பு கூறி இருக்கிறது.

பொருளியல் வீழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்று தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் ஆட்குறைப்பு சுமார் 12 விழுக்காடாகக் கூடி இருக்கிறது.

ஆட்குறைப்பு, வரும் மாதங்களில் இன்னும் கூடவே செய்யும். விரைவில் செயல்பட முடியாமல் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு முடங்கியே இருக்க வேண்டிய நிறுவனங்களுக்கு ஆட்குறைப்பை விட்டால் வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

2020ல் 200,000 பேருக்கு வேலை போகக்கூடும் என்று பொருளியல் மதிப்பீடுகள் கூறுகின்றன. பாதிப்பு அதிகமாக உள்ள இப்படிப்பட்ட ஒரு சூழலில், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் வரும் செவ்வாய்க்கிழமை நான்காவது பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிக்கப் போகிறார்.

வேலைகளைக் காப்பது, நிறுவனங்களுக்கு கடன் வசதியையும் மானியங்களையும் வழங்குவது முதலானவற்றில் முந்தைய ஊக்குவிப்புத் திட்டங்கள் கவனம் செலுத்தின.

இங்கு கட்டம் கட்டமாக தொழில்துறைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், 2வது 3வது கட்டங்களில் திறக்கப்படும்வரை தொடர்ந்து முடங்கியே இருக்கக்கூடிய தொழில்துறைகளுக்கு மானியங்களையும் கடன் உதவிகளையும் நீட்டிப்பதோடு அவற்றை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

வேலை ஆதரவுத் திட்டம் மேம்படுத்தப்பட்டு சம்பள மானியம் அதிகரிக்க வேண்டும்; மே மாதத்திற்கு அப்பாலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை ரத்து செய்யப்பட வேண்டும்; அலுவலக வாடகைத் தள்ளுபடிகளும் கூட வேண்டும்;

அதோடு ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கும் சுயமாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் வருமானம் கிடைக்க ஆதரவுக்கரம் இன்னமும் நீள வேண்டும்.

இவை எல்லாம் இப்போதைய சூழலில் எதிர்பார்க்கப்படுகின்ற, பரிசீலிக்கத்தக்க, சாத்தியமான நடவடிக்கைகள்.

ஒட்டுமொத்தத்தில் நாடு இப்போது எதிர்நோக்கும் படுமோசமான பொருளியல் மந்தத்தில் இருந்து மக்களைக் காப்பதற்கான கேடயமாக அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் அமையும், அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு, அதுவே நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!