முரசொலி 31-05-2020

வெளிநாட்டு ஊழியர்: பொருளியல் தேவைகளே தீர்மானிக்கட்டும்

சிங்கப்பூரில் இன்று நேற்று அல்ல; பல ஆண்டுகளாகவே ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நாட்டின் பொருளியல் வளர்ச்சி வேகத்துக்கு ஏற்ப வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

நிலப்பரப்பில் மிகவும் சிறிய நாடாக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள பெரிய நிலப்பரப்புகளைக் கொண்ட எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

ஊழியர் பற்றாக்குறை உள்ள நாட்டில், சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் செய்யத் தயங்குகின்ற, பார்க்க முன்வராத பல வேலை களை வெளிநாட்டு ஊழியர்கள் பார்க்கிறார்கள். அந்த ஊழியர்களின் உறுதுணையுடன் நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சாதித்து வந்துள்ளது. சிங்கப்பூர் தலைகீழாக உருமாறவெளிநாட்டு ஊழியர்கள் உடலுழைத்து உதவி இருக்கிறார்கள்.

கட்டுமானம், உற்பத்தித்துறை, கடல்துறை, கடலோரத் தொழில்துறை, பராமரிப்பு போன்ற சேவைத்துறை பலவற்றிலும் அந்த ஊழியர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

இருந்தாலும் எந்த ஒரு நாடும் அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு ஊழியர்களையே வெகுகாலம் சார்ந்து இருப்பது என்பது விவேகமானதாக இருக்காது. அவை, காலத்துக்கு ஏற்ப, புதுப்புது தொழில்நுட்பங்களைக் கைகொண்டு தொடர்ந்து நவீனமடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

சிங்கப்பூர் இதை மனதில் வைத்து வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையைப் படிப்

படியாகக் குறைத்துக்கொள்ள, அதே வேளையில் பொருளியலுக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள தோதான கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. முதலில் உள்ளூர் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதன் பிறகே தேவைக்கு ஏற்ப வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்தகைய ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்கள், மாதாமாதம் வெளி நாட்டு ஊழியருக்கான தீர்வையைச் செலுத்த வேண்டும் என்ற ஏற்பாட்டைக் கட்டாயமாக்கி அதன்மூலம் வெளிநாட்டினரைச் சார்ந்து இருப்பதை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ள அரசு ஊக்கமூட்டுகிறது.

இதைச் செய்யும்போதே நிறுவனங்கள் மின்னிலக்கமயத்துக்கு, தானியக்கமயத்துக்கு மாறிக்கொள்ள பல ஊக்குவிப்புகளையும் அரசாங்கம் அளித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தன்னை நாடி வரும் வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த சட்டரீதியான கொள்கைகளையும் ஏற்பாடுகளையும் செய்ய அரசு தவறு

வதில்லை. ஊழியர் நலனுக்கு நிறுவனங்களும் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றன.

வெளிநாட்டு ஊழியர் நிலையம் போன்ற அரசு சாரா அமைப்புகளும் இருக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தாலும் ஊழியர் அணியில் அவர்களின் அளவு மென்மேலும் குறைய வேண்டும் என்று அப்போதைக்கு அப்போது கோரிக்கைகள் எழுப்பப் படுவது உண்டு.

இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகமாக இருக்கும் சூழலில் அத்தகைய ஊழியர்களைச் சார்ந்திருப்பதை சிங்கப்பூர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கல்வித் துறையைச் சார்ந்த சிலரும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சிலரும் இப்போது குரல் எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, சீன, மலாய், இந்திய வர்த்தகச் சபைகளும் வர்த்தக தொழில் சங்கங்களும் மிக அரிதாக ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர் கொள்கைகளைப் பொறுத்த வரை, அரசாங்கம் மிகவும் சீர்தூக்கிப் பார்த்து பலவற்றையும் கருத்தில்கொண்டு சரியான அணுகுமுறையைக் கைகொள்ள வேண்டும் என்று இந்த அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களி டையேதான் கிருமித்தொற்று அதிகம் என்பதால் அவர்களைக் குறைத்தால் கிருமிப் பரவல் குறைந்துவிடும் என்றும் இதை வைத்து ஊழியர் அணியில் வெளிநாட்டினர் அளவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறுவது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கும்.

அத்தகைய ஊழியர்களின் வசிப்பிடத் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற ஒரு நிலவரத்தையே கிருமித்தொற்று காட்டுவதாகத் தெரிகிறது.

அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர் வசிப்பிடத் தரத்தை மேம்படுத்தி வருகிறது. இது தனிப்பட்ட ஒரு விவகாரம். இதற்கும் வெளிநாட்டு ஊழியர் தொடர்பான கொள்கைகளுக்கும் தொடர்பு இருக்க முடியாது. பொருளியல் தேவைகளும் சிங்கப்பூர் ஊழியர் அணியும்தான் அந்தக் கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள் முக்கியமான துறைகளில் உயிர்நாடியாக பணியாற்றுகிறார்கள் என்பதால் திடீரென அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட முடியாது.

அப்படி குறைத்துவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய தொடர்பு விளைவுகள் கடுமையானதாக இருக்கும். செலவுகள் கூடிவிடும். கட்டணங்கள் உயரும். பல முக்கியமான துறைகளில் சிங்கப்பூரின் போட்டித்திறனுக்கு பாதிப்பு ஏற்படும். பல திட்டங்களைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றிட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இவற்றோடு, சிங்கப்பூரின் ஊழியர் அணி மூப்படைந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சுட்டிக்காட்டி இருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களைக் குறைத்துக்கொண்டு அதே வேளையில், போட்டித்திறன் அனுகூலம் கெடாமல் சிங்கப்பூர் நிறுவனங்கள் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கு மின்னிலக்கமயமும் தானியக்கமயமும் மிகவும் கைகொடுக்கும்.

கட்டுமானத் துறை போன்ற துறைகளில் 3:1 என்ற விகிதத்தில் வெளிநாட்டு ஊழியர்களும் உள்ளூர் ஊழியர்களும் இருக்கிறார்கள். உற்பத்தித் துறைகளில் சில பிரிவுகளும் இப்படியே இருக்கின்றன.

இவை எல்லாம் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படாத தொழில் பாணிகளுக்கு மாறிக்கொள்ளலாம். கொவிட்-19க்குப் பிறகு நிறுவனங்கள் புதிய செயல்பாட்டு முறைக்கு ஆயத்தமாக வேண்டி இருக்கும். அப்போது அவை இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு துணிச்சலான முதலீடுகள் அதிகம் தேவை.

வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்த செலவில் கிடைப்பதால் நிறுவனங்கள் பொதுவாக அத்தகைய ஊழியர் வளத்தை நாடுகின்றன. நிறுவனங்களின் இந்தப் போக்கை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தி அவற்றைத் தானியக்கமயத்தின் பக்கம் திருப்புவதற்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை போன்ற ஏற்பாடுகள் உதவுகின்றன.

எனவே இந்த ஏற்பாடு தொடர்ந்து இருந்து வரவேண்டும். தீர்வையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டவும் செய்யலாம்.

நிறுவனங்களும் அரசாங்கம் அளிக்கும் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டு மின்னிலக்கமயமாக வேண்டும்; தானியக்கமயமாக வேண்டும். காலப்போக்கில் நவீனமயமாகி இத்தகைய ஊழியரைக் குறைத்துக்கொள்ளத் தாங்கள் நாட்டமாக, ஆயத்தமாக இருப்பதை நிறுவனங்கள் தொடர்ந்து மெய்ப்பித்து வரவேண்டும்.

இதற்குக் காலம் பிடிக்கும். அதுவரையில் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் தேவை இருந்துவரும்.