நம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்

கொவிட்-19 கிருமியை இதற்கு முன் உலகம் கண்டதில்லை. அதேபோல அந்தக் கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்டு வரும் மோசமான விளைவுகளும் உலகிற்குப் புதியவையாகவே இருக்கின்றன. வர்த்தகப் போட்டாபோட்டிகள், தன்னைப்பேணித்தன சிந்தனை, நிச்சயமில்லாத பொருளியல் எல்லாம் தலையெடுத்து வந்த ஒரு சூழலில் கொரோனா கிருமித்தொற்று தலைதூக்கியது.

இதனால் உலக நிலவரங்கள் இன்னும் மோசமாக மாறிவிட்டன. சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகள் இதற்கு முன் எத்தனையோ சவால்களை, பிரச்சினைகளைச் சந்தித்து அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன.

எண்ணெய் நெருக்கடி, பொருளியல் மந்தம், பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற சிரமமான காலகட்டங்களை எல்லாம் சமாளித்து வந்துள்ள உலகம், கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமிப் பிடியில் அகப்பட்டு வெளியே வரமுடியாமல் திண்டாடி வருகிறது.

1973ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி, அதனையடுத்து 1985, 1998 ஆகிய ஆண்டு களிலும் 2001 முதல் 2003 வரையிலான காலகட்டத்திலும், பிறகு 2009ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட நிதி, பொருளியல் பின்னடைவு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட பல துறைகளிலும் மிக அதிக பாதிப்புகளை கொவிட்-19 ஏற்படுத்தி வருகிறது.

எண்ணெய் நெருக்கடி முதல் நிதி, பொருளியல் பின்னடைவு வரையிலான பாதிப்புகள் எல்லாம் உலகின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக அல்லது சில துறைகளை மட்டும் உள்ளடக்கிய அளவுக்குத்தான் இருந்தன.

இதனால் உலகம் அந்தப் பாதிப்புகளை எல்லாம் பின்தள்ளிவிட்டு முன்னேறிவிட்டது. அதைபோலவே பயங்கரவாதத்தைத் துடைத்தொழிக்க உலகமே செயலில் இறங்கியதால் அந்த மிரட்டலும் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டது.

ஆனால் கொவிட்-19 ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் பொருளியலையும் கடந்து மானிட இனத்தின் மனநிலையையும் பாதிக்கும் அளவுக்கு இருக்கிறது.

பல நாடுகளுக்கு இடையில் வெறுப்பு ஏற்படவும் கொரோனா கிருமி வழிவகுத்து இருக்கிறது. உலகளவில் மனிதர்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்திவிட்டது. சுற்றுலாத்துறை, விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தைச் சந்தேகத்துக்கு உரியதாக ஆக்கிவிட்டது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் நல்வாழ்வில் பங்கெடுத்துக்கொள்ளும் போக்கையும் இந்தக் கிருமித்தொற்று மங்கச் செய்து இருக்கிறது. நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நிலவரமும் முன்பு போல் இராது போல் தெரிகிறது.

குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பொறுத்தவரையில் நாடுகள் சுயசார்புப் போக்கையே விரும்பும் அளவிற்கு நிலைமை காணப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலை காரணமாக உலகில் தன்னைப்பேணித்தனம்தான் மேலும் அதிகரிக்கும். கொரோனா கிருமி ஏற்படுத்தி வரும் இத்தகைய நிலவரங்கள் எதுவுமே சிங்கப்பூருக்குச் சாதகமானவையாகத் தெரியவில்லை. உலக வர்த்தகத்தையே பெரிதும் சார்ந்திருக்கும் நாடு சிங்கப்பூர் என்பதால்தான் இந்தப் பிரச்சினை.

பிரதமர் லீ சியன் லூங் சில நாட்களுக்கு முன் இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரைத்தார். கொரோனா தொற்று காரணமாக, உலக வர்த்தகம் சுத்தமாக மறைந்துவிடாது என்றாலும் அது குறையக்கூடும் என்றார் அவர்.

அதேவேளையில், உலக வர்த்தக முறையில் சிங்கப்பூர் தன்னை இணைத்துக்கொண்டு இருந்தால் பொருளியல் தலைதூக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் நமக்கு நன்கு உதவும் என்பதை அவர் சுட்டினார்.

சாதகமான காலங்களில்கூட எதிர்காலங்களில் ஏற்படக்கூடியவற்றை முன்னதாகவே கணித்து அதற்குத் தோதாக திட்டமிடும் போக்கும், எதிர்காலத்திற்கான பல திட்டங்களையும் கொள்கைகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தீட்டி அவற்றை முன்னதாகவே செயல்படுத்தத் தொடங்கும் பாணியும், மக்கள் தொடர்ந்து பலவற்றையும் கற்று பல தேர்ச்சிகளையும் பெற்றுவந்தால்தான் எதிர்கால உலகிற்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.

அதேபோல நிறுவனங்களும் உருமாறினால்தான் தாக்குப்பிடித்து நிலைத்திருக்க முடியும் என்பதால், கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள, இடைவிடாது முயலும் உறுதியும் சிங்கப்பூருக்கே உரியவை.

இந்த முயற்சிகளை எல்லாம் கொவிட்-19க்குப் பிறகு மிக அதிகமாகக் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை. இதோடு கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்புகளில் இருந்து மீண்டு வர சிங்கப்பூர் துணிச்சலான பொருளியல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தன் குடிமக்களைப் பாதுகாத்து வருகிறது.

கொவிட்-19 ஆதரவு உதவியாக இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மொத்தம் $93 பில்லியன் மதிப்புள்ள நான்கு வரவுசெலவுத் திட்டங்களை சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தி உள்ளது. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 20 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை எல்லாம் உறுதுணையாகக் கொண்டு, கொவிட்-19 கிருமி மிரட்டலை எப்படியும் சமாளித்து சிங்கப்பூர் மீண்டுவிடும் என்பதில் சிங்கப்பூர் தலைவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த நடவடிக்கைகள் எல்லாம் விளங்குகின்றன.

இருந்தாலும் இதில் மிக முக்கியமாக தேவைப்படுவது குடிமக்களின் மன உறுதி. எவ்வளவு பாதகம் வந்தாலும் அதைச் சாதகமாக மாற்றிவிட வேண்டும் என்ற மக்களின் உறுதி, கொவிட்-19 காலகட்டத்தில் மிக முக்கியமானதாகத் தெரிகிறது.

இப்போதைய சூழலில் சிங்கப்பூரர்கள் மனஉறுதியை, நம்பிக்கையை இழந்துவிடவே கூடாது. அந்த நம்பிக்கையும் மனஉறுதியும்தான் இது நாள்வரை சிங்கப்பூரை உலகின் முன்னணி நாடாக உயர்த்தி இருக்கின்றன. மக்களின் கனவுகள் நனவாக அவைதான் உதவி இருக்கின்றன.

கொவிட்-19 காரணமாக எவ்வளவோ நிலவரங்கள் மாறினாலும் சிங்கப்பூரர்களின் நம்பிக்கையும் உறுதியும் மாறாது. அவை காரணமாக ஏற்படக்கூடிய வெற்றிகளும் தொடரும் என்பதே விருப்பம், எதிர்பார்ப்பு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!