தளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி, வேகமாக இல்லாவிட்டாலும் மெதுவாக ஒடுங்கி வருகிறது. அரசாங்கமும் பொதுமக்களும் நிறுவனங்களும் சமூகமும் எல்லாரும் பொறுப்பை உணர்ந்து ஒத்துழைத்து செயல்பட்டு வருவதே இந்த நிலைக்கான காரணம்.

கொவிட்-19 கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்கும் வகையில் சிங்கப்பூரில் பொருளியல் முற்றிலும் முடக்கப்பட்டது.

எந்தவொரு நாடும் தன் பொருளியலை மூடியே வைத்திருக்க முடியாது. ஆனால் அவசரப்பட்டு அதைத் திறந்துவிட்டால் ஆபத்து அதிகம் என்பதையும் தவிர்த்துவிட முடியாது.

இத்தகைய ஒரு நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதைவிட்டால் வேறு வழியில்லை என்பதால் அரசாங்கம் பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நெறிமுறைகள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தியது.

பொதுமக்களுக்கு அவை எல்லாம் புதிதாக இருந்ததால் வாழ்க்கைப் பாணிகளை மாற்றிக்கொண்டு நிபந்தனைகளை எல்லாம் மீறாமல் நடப்பது என்பது அவர்களுக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

இருந்தாலும் நிலவரத்தை உணர்ந்து செயல்பட்டதால் சமூக அளவிலான கிருமித்தொற்று மங்கத் தொடங்கியது. அதன் விளைவாக பொருளியல் கொஞ்சம் திறந்துவிடப்பட்டது.

குறிப்பிட்ட சில துறைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டன. சமூகத் தொற்றும் நிலையான கட்டத்தை எட்டியது. வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கிருமி கட்டுப்படுத்தப்பட்டது. இப்படி ஓரளவு வெற்றி கிடைத்ததை அடுத்து சிங்கப்பூர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது.

இரண்டாவது கட்டமாக பொருளியலின் மேலும் பல பகுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதன்படி பெரும்பாலான காரியங்களுக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது.

பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. மேலும் பல நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. சமூக நடவடிக்கைகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டு இருக்கிறது. மக்கள் ஐந்து பேர் வரை ஒன்றுகூடலாம். குடும்பங்கள் விருந்தினரை வரவேற்கலாம். ஒரு நேரத்தில் ஐந்து பேர் வரை ஒரு வீட்டிற்குச் செல்ல முடியும் என்று 2ஆம் கட்ட நெறிமுறைகள் கூறுகின்றன.

பொருளியல் ரீதியில், சமூக ரீதியில், மன ரீதியில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என்ற நிலையை முதல்கட்டத்திலேயே சிங்கப்பூரர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

அதனால்தான் இரண்டாம் கட்ட பொருளியல் தளர்வு சாத்தியமாகி இருக்கிறது.

ஆனால் இதுவே பெரும் வெற்றி என்று கருதி கொவிட்-19க்கு முந்தைய நிலைக்கு சிங்கப்பூரர்கள் அவசரப்பட்டு திரும்பிவிடக் கூடாது என்பதுதான் உண்மை.

மக்கள் அவசரப்பட்டுவிட்டால், மீண்டும் கிருமி தலைதூக்க வழி ஏற்பட்டுவிடக்கூடிய ஆபத்து இராது என்பதற்கு உத்திரவாதம் இல்லாமல் போய்விடும். இதுவரை பட்ட பாடுகள் எல்லாம் வீணாகிவிடும்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கிளம்பிய கிருமிதான் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இதுவரை காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதில் உலகமே வியக்கும் அளவில் சீனா சாதனையை நிகழ்த்தியது. இருந்தாலும் அந்த நாட்டில் இப்போது மீண்டும் கிருமி தலைதூக்கி இருப்பதால் மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக விதித்து இருக்கிறார்கள்.

வூஹான் கிருமிக்கு எதிரான போராட்டமே முடியாத நிலையில், சீன தலைநகரம் பெய்ஜிங்கில் கிருமி கிளம்பி இருப்பதன் காரணமாக மறுபடியும் ஒரு கிருமி பிரளையம் ஏற்பட்டுவிடக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளை இப்போது பீடித்து இருக்கிறது.

இந்த நிலையை எப்பாடுபட்டாவது நாம் தவிர்த்துவிட வேண்டும்.

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் மிக முக்கியமான கட்டத்தை இப்போது எட்டி இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சுகாதாரப் பழக்கவழக்கங்களை மக்கள் நிலையானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் விதித்துள்ள நெறிமுறைகளை மீறாமல் நடக்கவேண்டும் என்பது இப்போது இன்னும் முக்கியம் என்பதையே சீன நிலவரம் காட்டுகிறது.

உலகில் எங்கு பார்த்தாலும் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி அவற்றை திறம்பட அரசாங்கங்கள் அமல்படுத்தி வருவதைக் காண முடியும்.

ஆனாலும் அத்தகைய திட்டங்களும் நடவடிக்கைகளும் முழு வெற்றி பெற வேண்டுமானால், கொவிட்-19 முற்றிலும் ஒடுங்க வேண்டுமானால், கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டும்.

சிங்கப்பூரில் பொருளியல் மேலும் திறந்துவிடப்பட்டு இருக்கும் நிலையில், இனி கிருமி தலைதூக்காது என்ற அனுமானத்தில், அவசரப்பட்டு, பொறுப்பு இல்லாமல் நடந்துகொண்டு வழிகாட்டி நெறிமுறைகளை மீறினால் நாம் மீண்டும் கொரோனா பிடியில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும். அதனால் மறுபடியும் விரும்பத்தகாத பொருளியல் முடக்கம் அவசியமாகலாம்.

ஒவ்வொருவரும் இதை உணர்ந்துகொண்டு கிருமி மீண்டும் தலையெடுப்பதை அறவே தடுத்துவிட வேண்டும்.

இப்படி எல்லாரும் பொறுப்புடன் நடந்துகொண்டால் நாம் அடுத்த சுற்று தளர்வுக்கு முன்னேற முடியும்.

அதில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையை நெருங்க நமக்கு வாய்ப்புக் கிட்டும். கொவிட்-19 போரில் முழு வெற்றிக்கு வழிவகுக்கும் உறுதியான முன்னேற்றமாக அதைக் கருதலாம்.

இத்தகைய ஒரு நிலை விரைவில் திரும்ப வேண்டும்; பழையபடி சுதந்திர நடமாட்டமும் பொருளியல் சுறுசுறுப்பும் திரும்பவேண்டும் என்று விரும்பும் மக்கள், அலட்சியப் போக்கைத் தவிர்த்து, பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!