சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் பெற்றுத் தனி நாடான பிறகு 14வது நாடாளுமன்றத்தை வரும் 10ஆம் தேதி தேர்ந்தெடுக்க இருக்கிறது. மொத்தம் 2.65 மில்லியன் வாக்காளர்கள் 93 பேரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் 17 குழுத்தொகுதிகளும் 14 தனித்தொகுதிகளும் இடம்பெற்று இருக்கின்றன. சிங்கப்பூர் இதுவரையில் பல பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது என்றாலும் இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் பல புதுமைகளையும் வியப்புகளையும் இதுவரை காணாத நிலவரங்களையும் எதிர்நோக்கி இருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சி புரிந்து வரும் மக்கள் செயல் கட்சி வேட்பு மனுத் தாக்கல் நாளன்றே பெரும்பான்மையைப் பெற்றுவிடும் காலம் முன்பு இருந்தது.
அத்தகைய காலம் இப்போது இல்லை என்றாலும் அந்தக் கட்சி மட்டும்தான் 93 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடிய ஒரே கட்சியாக இந்தத் தேர்தலிலும் தொடர்ந்து இருக்கிறது.
2015ல் நடந்த பொதுத் தேர்தலில்தான் முதன்முதலாக எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இருந்தது. இந்த நிலை இப்போதும் தொடர்கிறது. இருந்தாலும் சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில்தான் ஆக அதிக அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கின்றன.
இதனால் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வாக்குக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தாங்கள் விரும்புகின்ற கட்சியையும் தாங்கள் விரும்புகின்ற தலைவர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு சென்ற 2015 தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் எல்லா வாக்காளா்களுக்கும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கட்சி களும் அனைத்து வாக்காளர்களும் தேர்தலைச் சந்திக்கிறார்கள்.
ஆனால், இவை அனைத்துக்கும் மேலாக கொவிட்-19 கிருமிச் சூழலையும் அவர்கள் சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உள்ளது. 2020 தேர்தல், பொதுக் கூட்டங்கள் இல்லாத பொதுத் தேர்தலாக மாறி இருக்கிறது.
தேர்தல் என்று வந்தால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் திட்டங்களையும் செயல்முறைகளையும் வாக்காளர்கள் முன் வைப்பது வழமைதான்.
ஆனால் இந்தத் தேர்தலில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது முதல் பொருளியல் பாதிப்புகளைச் சரிப்படுத்துவது வரை எல்லாப் பிரச்சினைகளிலும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றை எல்லாம் தாங்கள் மனதில் கொண்டு இருப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆளும் மக்கள் செயல் கட்சியும் எதிர்க்கட்சிகளும் சிங்கப்பூரர்களின் எதிர்காலத்திற்கு உகந்தவை என்று தாங்கள் நம்பும் யோசனைகளை, திட்டங்களை எல்லாம் முன் வைத்து தங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்படி வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
நாடு இதுவரை காணாத ஒரு நிலையை இப்போது எதிர்நோக்கி இருக்கிறது. தங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு வாக்காளர்கள் அனைவருக்குமே கிடைத்து இருப்பதால் அரிய இந்த வாய்ப்பை அவர்கள் மிக விவேகமாக, அறிவுபூர்வமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாக்களிக்க இன்னும் ஏறக்குறைய ஒரு வார காலம்தான் இருக்கிறது. வாக்களிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் உறுதிமொழிகளையும் வாக்காளர்கள் ஆராய்ந்தறிய வேண்டும். அரசியல்வாதிகள் வழங்கும் உறுதிமொழிகளை எல்லாம் அவர்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
வாக்காளர்கள் தங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தலைவர்கள் யார் என்பதை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சிரமமான இந்தக் காலகட்டத்தைச் சமாளித்து சிங்கப்பூர் இன்னும் வலுவாக மீண்டு வர எந்தக் கட்சி உறுதியாகக் கைகொடுக்கும் என்பதை அவர்கள் திட்டவட்டமாக, திண்ணமாக பலவற்றையும் கருத்தில்கொண்டு முடிவுசெய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதிக்கும் பேராளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அவரின் குணநலன்களையும் சாதனைகளையும் வாக்காளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எந்தத் தேர்தலையும்விட இந்தத் தேர்தல் மிக முக்கியமானதொரு தேர்தல் என்பதை வாக்காளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.
தேர்தல் முடிந்து அமையும் அரசாங்கம் நாட்டின் எதிர்கால மேம்பாட்டில், பொருளியல் வளர்ச்சியில், மக்களின் சுகாதாரத்தில் சிந்தாமல் சிதறாமல் தனது முழு கவனத்தை யும் செலுத்துவதற்கு ஏற்புடைய வகையில் வாக்காளர்களின் தீர்ப்பு அமையவேண்டும்.
கொவிட்-19 காலம் என்பதால் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இல்லை. இது கட்சித் தொண்டர்கள் பலருக்கும் வருத்தம் அளிக்கும் என்பது திண்ணம்.
இருந்தாலும் இணையம், வானொலி, தொலைக்காட்சி ஆகியவையும் தொகுதிச் சுற்றுலாக்களும் அரசியல் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் மேலும் உறுதுணையாக இருந்து வருகின்றன.
தேர்தல் பொதுக் கூட்டம்தான் இல்லை. ஆனாலும், தேர்தல் உற்சாகமும் தேர்தலில் நாட்டமும் குறைந்ததாகத் தெரியவில்லை.
பொதுவாக, தேர்தல் என்பது அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் ஒன்றுதான். ஆனால் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் 14வது நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் இருக்கிறது.
அதை இப்போதைய வாக்காளர்கள் மனதில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! சிங்கப்பூர் வாக்காளர்கள் பொறுப்புமிக்கவர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சரியான முடிவை எடுத்துவந்துள்ள வாக்காளர்கள் இப்போதும் தெளிவான முடிவையே எடுப்பார்கள் என்பதே நம்பிக்கை.