முரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்

உலகையே முடக்கிவிட்ட கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக படுமோசமாக வீழ்ச்சி அடைந்த துறைகளில் சுற்றுப்பயணத் தொழில்துறை முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதுமே இந்தத் தொழில்துறை ஏறக்குறைய மூச்சுமுட்டி முடங்கிப்போய் கிடக்கிறது.

இந்தச் சூழ்நிலை உடனடியாக மாறும், சுற்றுலா துறைக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவது இப்போதைக்கு நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும் என்று தெரியவில்லை.

எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில், சுற்றுலாத் துறை படுமோசமான காலகட்டத்தில் சிக்கி இருக்கிறது என்றுதான் கூற தோன்றுகிறது. சிங்கப்பூரை பொறுத்தவரையில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா தொழில்துறையின் பங்கு ஏறக்குறைய 4 விழுக்காடுதான்.

ஆனாலும் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்ற இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த பல துறைகளிலும் சென்ற ஆண்டு வேலை பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 65,000 என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 சூழ்நிலையில் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 30 விழுக்காடு வரை குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சிங்கப்பூர் பயணத் துறை கழகம் முன்பு கணித்திருந்தது.

இருந்தாலும் உண்மையில் கொவிட்-19 ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

சிங்கப்பூருக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வந்த பயணிகள் எண்ணிக்கை 99.9% குறைந்தது. கொரோனா கிருமி இன்னும் ஒடுங்கவில்லை என்பதால் இந்த ஆண்டு முழுவதுமே இத்தகைய நிலைதான் இருக்கும் என்றும் அனுமானிக்க முடிகிறது.

சுற்றுலாத் துறை சிங்கப்பூருக்கு மிக முக்கியமான ஒன்று. கடந்த 2018ல் இங்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூரில் செலவழித்த தொகை ஏறக்குறைய $27 பில்லியன் என்பதும் சிங்கப்பூரின் பல கவர்ச்சி இடங்கள் வெளிநாட்டுப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு தொழில்துறை திடீரென முடங்கிவிட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஏராளமான நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

உலகில் கொவிட்-19 கிருமி ஒடுங்குவதாகத் தெரியவில்லை. உலக சுற்றுலாத் துறை இப்போதைக்குத் தலையெடுக்கும் என்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

ஆனாலும் சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை ஓரளவுக்கு எழுந்து நிற்க வழி இருப்பதாகத் தெரிகிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்க்கையில் இந்த நம்பிக்கை ஏற்படுகிறது.

சுற்றுலாவைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் கணிசமான உள்நாட்டுச் சந்தையைக் கொண்டிருக்கிறது. 2018ல் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப் பயணிகள் இங்கு செலவிட்ட தொகையைவிட வெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள் பல நாடுகளிலும் செலவிட்ட தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பயணங்களின் பேரில் சிங்கப்பூரர்கள் 2018ல் $34 பில்லியன் செலவிட்டு இருக்கிறார்கள். கொவிட்-19 சூழலில் சுற்றுப் பயணிகளின் வருகை மட்டுமின்றி சிங்கப்பூரர்கள் வெளிநாடு செல்வதும் தடைப்பட்டு இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிங்கப்பூரர்கள் உள்நாட்டிலேயே பல இடங்களுக்கும் மகிழ்உலா செல்வார்கள் என்று எதிர்பார்க்க இடம் இருக்கிறது.

சிங்கப்பூர் மக்கள் வெளிநாடுகளில் செலவிடும் அளவுக்கு இங்கு செலவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு ஒரு மாற்று ஏற்பாடாக உள்நாட்டுச் சுற்றுலா திகழ முடியும் என்பது உண்மை.

அதுவும் எல்லைகள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூர் மக்கள் ஓய்வு நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்க உள்ளூரையே தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதனால் உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு உறுதியான உதவி கிடைக்கும்.

அவர்கள் வெளிநாடுகளில் செலவிடும் தொகையில் ஓரளவு தொகையை இங்கு செலவு செய்தால்கூட போதுமானதாக இருக்கும். சிங்கப்பூரின் கவர்ச்சி இடங்கள் பலவும் புதுப்பொலிவுடன் புது உற்சாகத்துடன் தலையெடுக்கும்.

கொரோனா காரணமாக உலக சுற்றுலா சந்தை மூடிக் கிடக்கும் காலத்தில் உள்ளூர் சுற்றுலா சந்தையை உசுப்பிவிட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் $45 மில்லியன் தொகையைச் செலவிட முடிவு செய்து களத்தில் இறங்கி இருக்கிறது.

இந்தத் தொழில்துறைக்கு எப்படிஎல்லாம் புத்துயிர் அளிப்பது என்பதை ஆராய வேண்டிய ஒரு கட்டாயத்தையும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தி இருக்கிறது.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டே சிங்கப்பூரில் புத்தாக்க முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதுப்புது பாணிகளில் ஒருமித்த கவனம் இடம்பெறுகிறது.

இந்த முயற்சிகள் வெற்றி அடைந்தால் இதைப் பொறுத்தவரையில் உலகளவில் சிங்கப்பூருக்கு ஓர் அனுகூலம் கிடைக்கும்.

உலகப் பயணத் துறை படிப்படியாகத் தலையெடுக்கையில் தொழில்துறை பயணிகளே முதல்முதலாக நன்மை அடைபவர்களாக இருப்பார்கள். ஆகையால் தொழில் நிமித்தம் பயணம் செய்வோருக்கு வழிநில்லாச் சேவையை வழங்குவது மற்றொரு புத்தாக்கமாகத் தெரிகிறது.

இதில் ஒருவர் வெளிநாட்டுக்குப் புறப்பட்டு மறுபடியும் தாயகம் வரும் வரையில் அவருக்கு வழங்கப்படும் தலைசிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியமானவையாக இருக்க வேண்டும். சிங்கப்பூரின் சுற்றுலாத் தொழில்துறை மீண்டும் தலை எடுக்கும் பட்சத்தில் மிக முக்கியமாக அது இரண்டு சவால்களைச் சமாளித்தே ஆக வேண்டும்.

கடுமையான சுகாதார மற்றும் இதர விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து அதேவேளையில் பயணிகளுக்கு நினைவைவிட்டு அகலாத ஓர் அனுபவத்தைஏற்படுத்தித் தர வேண்டியது கட்டாயம்.

மொத்தத்தில் மகிழ்உலா மேற்கொண்டு நாளையும் பொழுதையும் மகிழ்ச்சிகரமாக கழிக்க உள்ளூரிலேயே வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கின்றன என்பதை உணர்ந்து சிங்கப்பூரர்கள் தங்கள் கண்ணோட்டத்தை உள்நாட்டில் திருப்பி உதவினால் சிங்கப்பூரின் உள்நாட்டு சுற்றுலாத் துறை செழிக்கத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!