முரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை

இப்போது உலகைச் சூழ்ந்துள்ள நிச்சயமில்லாத நிலை எப்போது அகலும் என்பது கொவிட்-19 கிருமி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்தே இருக்கும்.

கொரோனா கிருமியைத் துடைத்து ஒழித்துவிட்டதாக தலைநிமிர்ந்து குரல் கொடுத்த நாடுகளில் எல்லாம் அந்தக் கிருமி மீண்டும் படையெடுத்து இருக்கிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிருமியின் கோரத்தாண்டவம் உச்சநிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடுகளில் கிருமி பிறகு ஒடுங்கியது.

இருந்தாலும் இப்போது அங்கு முன்பைவிட வலுவாக மீண்டும் கொரோனா தலை எடுத்து மக்களைத் தொற்றி வருவதை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது.

கொவிட்-19 ஒழிய வேண்டுமானால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கிருமியே உலகைவிட்டு ஒழிந்தால்தான் வழி பிறக்கும். இந்த இரண்டை விட்டால் இப்போது வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

எல்லைகளைக் கடந்து கிருமி பரவுவதைத் தடுத்து சமூகங்களைக் காப்பாற்றுவதற்கான வழிகளும் தெரியவில்லை. இந்தச் சூழலில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன. மீண்டும் அவற்றை நடப்புக்கு கொண்டு வருகின்றன. இப்படி மாறி மாறி செயல்பட வேண்டிய ஓர் அவல நிலையை கொவிட்-19 ஏற்படுத்தி இருக்கிறது.

நிறுவனங்கள் தொடர்ந்து முழு அளவில் செயல்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பொருள்கள், சேவைகளுக்கான தேவைகளும் பலவீனமாக இருக்கின்றன. இவற்றின் விளைவாக ஆட்குறைப்புதான் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த உலக நிலவரம் சிங்கப்பூரில் இதுவரை நாடு காணாத அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் வேலையின்மை விகிதம் 2.9% ஆக உயர்ந்தது என்று பூர்வாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சம்பளம் தொடர்பான பரிந்துரைகளைப் புதுப்பிப்பதற்காக தேசிய சம்பள மன்றம் இந்த ஆண்டு மீண்டும் கூடுகிறது. இந்த மன்றம் ஏற்கெனவே பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு பல முதலாளிகளும் செலவைக் குறைத்தனர். அரசாங்க ஆதரவைப் பெற்றனர்.

அதன் பிறகே அவர்கள் ஊழியர்களின் சம்பளங்களைக் குறைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் பொருளியல் சிரமங்களும் நிச்சயமில்லாத நிலையும் தொய்வின்றி நீடிப்பதால் மேலும் ஆட்குறைப்புகளும் சம்பள வெட்டும் இருக்கத்தான் செய்யும் என்று தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங் எச்சரித்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட படுமோசமான பொருளியல் பாதிப்புகளில் இருந்து ஒவ்வொருவருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக அரசாங்கம் எத்தனையோ நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

என்றாலும் அவற்றை எல்லாம் மிஞ்சும் அளவில் பாதிப்புகள் கூடி வருகின்றன. இத்தகைய ஒரு சூழலில் முன்பு நெருக்கடி காலத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இப்போது நடப்புக்குக் கொண்டு வருவது ஓரளவு உதவியாக இருக்கக்கூடும்.

மத்திய சேம நிதிக்கு முதலாளிகள் செலுத்தும் சந்தாவைக் குறைப்பது, அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்துள்ளது. இப்போது தேசிய சம்பள மன்றம் கணிசமான சம்பளக் குறைப்புக்குப் பரிந்துரைக்கும் என்று நினைக்கவும் இடம் இருக்கிறது. 1998ல் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது இந்த மன்றம் சம்பளக் குறைப்பை பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படுமோசமாக பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதால் அரசாங்கத்தின் சம்பள மானியம் கிடைக்க வகை செய்யும் வேலை ஆதரவு திட்டத்தை அத்தகைய தொழில்துறைகளுக்கு நீட்டிக்கலாம் என்பது ஒரு யோசனை.

தங்களிடம் இருக்கும் உபரி ஊழியர்களை முதலாளிகள் தேவைப்படும் துறைகளுக்கு அனுப்பி வைக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் ஆட்குறைப்பைத் தவிர்த்து தங்கள்ஊழியர்களை முதலாளிகள் தக்கவைத்துக்கொள்ள வழி பிறக்கும் என்று நம்ப முடியும்.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, அத்தியாவசிய சேவைகளில் உள்ள குறைந்த சம்பள ஊழியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தலாம்.

பகுதிநேர ஊழியர்களைக் கவனித்துக்கொள்ள முத்தரப்பு அலுவலகம் ஒன்றைத் திறக்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஒலித்துள்ளன.

இருந்தாலும் இவற்றால் ஏற்படக்கூடிய நிதிச் சுமைகளை எல்லாம் மிகக் கவனமாக ஆராய வேண்டி இருக்கிறது. பொருளியல் சரியில்லாத நேரத்தில் கடன் வாங்கலாம், நல்ல நிலையை எட்டியதும் கடனை அடைக்க லாம் என்ற ஒரு சமநிலையையே பொதுவாக அரசாங்கங்கள் விரும்புவதுண்டு.

கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து பொருளியல் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்ததால், ஊழியர்களின் வருமானம் கூடிய போதிலும், இத்தகைய கடன்களை எளிதாக அடைக்க முடிந்தது.

இன்று நிலவரங்கள் வேறுபட்டு இருக்கின்றன. மக்கள் தொகை மூப்படைகிறது. உற்பத்தித்திறன் வளர்ச்சியும் குறைந்துள்ளது. இந்த நிலையில், வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும் கூட அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய கடன் சுமை எதிர்கால தலைமுறையினரைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்களுக்குச் சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கி அவற்றின் மூலம் அரசாங்கங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அவசியம்.

அதேவேளையில், ஒவ்வொரு வேலையையும் பாதுகாப்பது என்பது அரசாங்கங்களுக்கு இயலாத ஒன்றாகவே இருக்கும்.

கொவிட்-19 காரணமாக சில நிறுவனங்களின் வேலைகள் முற்றிலும் காணாமல் போய்விட்ட நிலையில், நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கால அளவின்றி அவற்றுக்கு நிதி உதவி அளிப்பதற்குப் பதிலாக அரசாங்கங்கள் தாங்கள் ஆதரவு அளிக்க விரும்பும் நிறுவனங்களை அதற்கேற்றவாறு சீர்தூக்கி பார்த்து நடந்துகொள்ள வேண்டி இருக்கும் என்பதே உண்மை நிலவரம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!