முரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்

கண்ணுக்குத் தெரியாத கொவிட்-19 கிருமி எது, எப்போது, எப்படி நடக்கும்; எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறவே தெரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையை உலகம் முழுவதும் ஏற்படுத்திவிட்டது.

வர்த்தகமாக இருந்தாலும் சரி, சுற்றுலாவாக இருந்தாலும் சரி, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எல்லாமே இனிமேல் முன்போல் இருக்காது என்றுதான் தெரிகிறது. இதுவரை உலகம் கண்டு வந்துள்ள பலவும் உருமாறி புதிய ஒரு வழமை உருவெடுப்பதைத் தவிர்க்க இயலாத வகையில் நிலவரங்கள் தலை எடுத்து வருகின்றன.

உலகளாவிய நிலையில் அரசியலில் புதிய விரிசல்களும் நிச்சயமில்லாத நிலையும் தோன்றுகின்றன.

பொருட்களின் விநியோகச் சங்கிலி மாறுகிறது. வேலைகள் உருமாறுகின்றன. வீட்டிலிருந்து அல்லது தொலைதூரத்தில் இருந்து வேலை பார்க்கும் நிலை ஏறுமுகமாகி வருகிறது. இது பழைய நிலைக்கு முற்றிலும் திரும்புமா என்பதும் விளங்கவில்லை.

பொருளியல் வளங்கள் குறைவதால் சமூக அளவில் பிரச்சினைகள் தலைதூக்கும்போல் தெரிகிறது. இந்த நிலவரங்கள் எல்லாம் உலகின் ஓர் அங்கமாக இருக்கும் சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லை.

வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், அண்மையில் 2020 இரண்டாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்களை வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவித்த உண்மை நிலவரங்கள் கவலை தருபவையாகத்தான் இருக்கின்றன. கொவிட்-19க்கு முந்தைய நிலை மறுபடியும் திரும்பாது. பொருளியல் மீட்சிக்குக் காலம் பிடிக்கும். அந்த மீட்சியும் சரளமாக இருக்காது.

கொவிட்-19 கிருமித்தொற்று உலகை விட்டும் சிங்கப்பூரை விட்டும் ஒழியும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாம் காத்து இருக்கவும் முடியாது. மிகவும் வேறுபட்ட, நிச்சயமில்லாத ஓர் எதிர்காலம்தான் நமக்குத் தெரிகிறது.

அதைச் சமாளிக்க இப்போதே சிங்கப்பூர் புதிய இலக்கை வகுக்க வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்டு இருக்கும் பெரும் மாற்றங்கள் நிறுவனங்கள், ஊழியர்கள் மட்டுமல்லாது பொதுக் கொள்கைகளிலும் பிரம்மாண்டமான விளைவுகைள ஏற்படுத்தும் என்பது உண்மை நிலவரம்.

அந்த விளைவுகள் நமக்குச் சவால்களாக இருக்கும் என்பது திண்ணம். ஆனாலும் பல வாய்ப்புகளையும் அவை உருவாக்குகின்றன.

பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரைவருங்கால வளர்ச்சி இரண்டாவது காலாண்டு அளவுக்குக் குறைவாக இருக்காது என்றாலும் மட்டுப்பட்டுதான் இருக்கும்.

உலகமே மந்தத்தில் வீழ்ந்து கிடப்பதால் வெளியிலிருந்து தேவை அவ்வளவாக இருக்காது. உள்ளூரில் வேலைகளும் பிரச்சினையாக இருப்பதால் உள்நாட்டிலும் பொருட்கள், சேவைகளுக்கான தேவை வலுவடையாது.

நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தான் நடந்துகொள்ளும்.

விமானப் போக்குவரத்து, சுற்றுலா, விருந்தோம்பல் முதலான துறைகள் மிகவும் பாதிப்படையும். எல்லைகள் அடைபட்டு கிடப்பதால், இவை அவற்றைச் சார்ந்து இருப்பதால் இந்த நிலை. இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களுடைய தொழில் பாணியை மாற்றிக்கொண்டு புதுமையான வழிகளைக் காண வேண்டி இருக்கும்.

விநியோகச் சங்கிலியைப் பொறுத்தவரை, ஆற்றலைவிட மீள்திறனே முக்கியமாக இருக்கும் என்பதால் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி ஆலைகளை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடும். செலவு பிடிக்கும் உற்பத்தி முறைகளைக் கைவிடக்கூடும்.

இவை எல்லாம் இப்படி இருந்தாலும், பொருளியல் சேவை விநியோகச் சங்கிலிகள் பல இடங்களுக்கும் விரிவடைவதன் காரணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியானில் புதிய முதலீடுகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது.

ஊழியர்கள் வீட்டிலிருந்து, தொலைதூரத்தில் இருந்து வேலை செய்யும் நிலை தொடருமானால் உலகளவில் போட்டி கடுமையாகும்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வெளியே வாய்ப்புகளைத் தேட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதேவேளையில், சிங்கப்பூரில் உள்ள வேலைகளை வெளிநாட்டினர் பெறுவதற்கும் போட்டி அதிகரிக்கும்.

பட்டத்தொழிலர்கள் அல்லாத மற்ற ஊழியர்களைப் பார்க்கையில், அவர்கள் நிலை இன்னும் மோசமாகவே இருக்கும் என்று கருதுவதற்கு அதிக இடம் இருக்கிறது.

இத்தகைய ஊழியர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பலரும் சுயவேலை வாய்ப்பை அல்லது தற்காலிக வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம். இவை எல்லாமே அரசாங்கம் உருவாக்கும், நடைமுறைப்படுத்தும் பொதுக் கொள்கைகளில் விளைவுகளை ஏற்படுத்தும்.

எளிதில் பாதிக்கக்கூடிய ஊழியர்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்புகளை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதால் அதற்கேற்ப கொள்கைகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும்.

குறிப்பாக வேலையில்லாத மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம். கொவிட்-19 காரணமாக நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பார்க்கையில், இத்தகைய பாதுகாப்பு சரியில்லாத நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தகைய நாடுகள் பொருளியல் மீள்திறனும் இல்லாமல் சமூக நிலைப்பாடும் இல்லாமல் சிரமப்படுவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் சிங்கப்பூர் தாராள வர்த்தக முறையைக் கொண்ட நாடு. வெளிப்படையான ஒரு நாடு. சட்டம், ஒழுங்கு நூற்றுக்குநூறு கடைப்பிடிக்கப்படும் நாடு.

உலகளவில் நற்பெயரைக் குவித்து இருக்கும் நாடு. இத்தகைய அனுகூலங்களுடன் பாதுகாப்புடன் கூடிய, வலுவான சமூகக் கட்டமைப்பும் சேர்ந்து சிங்கப்பூருக்கு மேலும் பலம் சேர்க்கும்.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது ஒன்றுமே இல்லாமல்தான் ஒரு நாடாக தலை எடுக்கத் தொடங்கியது. மக்களின் உறுதியாலும் அரசாங்கம், மக்கள், சேர்ந்து செயல்பட்டதாலும் வாய்ப்புகளை உடனுக்குடன் பயன்படுத்திக் கொண்டதாலும் நிலைமைக்கு ஏற்ப மாறிக் கொண்டதாலும் உலகமே போற்றும் வகையில் பல சாதனைகளை சிங்கப்பூர் நிகழ்த்தி வந்து உள்ளது.

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூர் ஏறக் குறைய அதே சூழ்நிலையைத்தான் எதிர் நோக்குகிறது. நிச்சயமில்லாத, மிகவும் வேறுபட்ட ஓர் எதிர்காலத்தை, தனக்கே உரிய அனுகூலங்களுடன் வெற்றிகரமாக சமாளித்து மீண்டுவந்து தொடர்ந்து சிங்கப்பூர் செழித்தோங்கும் என்பதே நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!