முரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு

இந்த உலகம் நமக்கு தெரிந்தவரையில் கடந்த எட்டு மாத காலத்தைப் போன்ற படுமோசமான ஒரு சூழ்நிலையை முன்பு ஒருபோதும் பார்த்து இருக்காது என்று திட்டவட்டமாகக் கூறிவிட முடியும்.

கொவிட்-19 கிருமி பரவி உலகையே முடக்கி மக்களை வெளியில் நடமாட முடியாமல், உணவகங்களில் சேர்ந்து சாப்பிட முடியாமல் உள்ளூரிலும் எல்லை கடந்தும் பயணம் செய்ய முடியாமல் வீட்டிலேயே ஒடுக்கிவிட்டது.

இவற்றின் காரணமாக உலக நாடுகளின் பொருளியல் வளம் பாதிக்கப்பட்டுவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துபோய்விட்டது. ஏராளமான மக்கள் வேலையிழந்துவிட்டார்கள். அவர்கள் பார்த்து வந்த வேலைகளுக்கு எதிர்காலத்தில் தேவை இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.

மாணவர்கள் கல்வி ஆண்டை முழுமையாக இழந்து தவிக்கிறார்கள். வேலைகளில் சேர முயல்வோருக்கும் நேரம் சரியில்லை. அவர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்க வேண்டும் என்பதும் புரியவில்லை.

கையிருப்பு எவ்வளவு நாளைக்குக் கைகொடுக்கும் என்பது தெரியாமல் பல நாடுகளும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.

வேறு பல காரியங்களுக்காக ஒதுக்கிவைத்திருந்த தொகையை எடுத்து சில நாடுகள் அவசர காரியங்களுக்காகச் செலவழித்து வருகின்றன.

மக்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நீண்டகால பாதிப்புகள் இருக்கும் என்று தெரிகிறது. நிறுவனங்களும் முழுமூச்சாக எப்போது செயல்படத் தொடங்கும் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை.

இவற்றுக்கெல்லாம் காரணமான கொவிட்-19 மிரட்டலும் ஒடுங்குவதற்கான அறிகுறியும் இல்லை. கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏறக்குறைய எல்லா தொழில்துறைகளுமே பாதிக்கப்பட்டுவிட்டன என்றாலும் விமானப் போக்குவரத்து, சுற்றுலா ஆகிய தொழில் துறைகள் படுபாதாளத்தில் விழுந்துவிட்டன. பொருளியலுக்கு முக்கியமான இந்தத் துறைகள் எப்போது தலையெடுக்கும் என்பதைக் கணிக்கவும் முடியவில்லை.

இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பல நாடுகளில் முதலும் முடிவுமாக தங்கள் கதவுகளை மூடிவிட்டன. இத்துறை ஊழியர்களோ, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் கண்களை மூடி காட்டில்விட்ட கதையாக தவிக்கிறார்கள்.

உலகின் பல பகுதிகளிலும் விமானங்களும் விமான நிறுவனங்களும் முற்றிலும் செயல்படாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றன.

இப்படி இருக்கையில், சில நாடுகள் கிருமியைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. இத்தகைய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மிகவும் விவேகமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டத்தில் அங்குலம் அங்குலமாக வெற்றி பெற்று வரும் நாடுகள், விமானப் போக்குவரத்து, பயணத்துறைக்கு உயிர்கொடுக்க காய்களை விவேகமாக நகர்த்தி வருகின்றன.

சிங்கப்பூர் கொவிட்-19 கிருமியைச் சீராக, பதற்றமில்லாமல், நிலையாக, தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. ஆகையால் கொரோனா வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி நம்பிக்கை கூடி வருகிறது.

இந்தச் சூழலில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பயணிகளுக்குக் கொஞ்சம் கட்டுப்பாடுகளை அகற்றுவது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களைச் சேர்ந்த பயணிகள் சாங்கி விமான நிலையத்தை இடைவழியாகப் பயன்படுத்த அனுமதிப்பது, புருணை, நியூசிலாந்து நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குவது முதலான காரியங்களில் சிங்கப்பூர் கவனம் செலுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா, மக்காவ், சீனா, தைவான், வியட்னாம், மலேசியாவில் இருந்து வருவோர், 14 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்கள் தனிமையில் இருந்தால் போதும் என்ற ஏற்பாடும் இடம்பெறும்.

மலேசியா-சிங்கப்பூருக்கு இடையில் கொவிட்-19க்கு முன்னர் நாள்தோறும் சுமார் 300,000 பேர் சென்று வந்தார்கள். இந்த இரு தரப்பு எல்லை கடந்த பயணங்களை கொரோனா கிருமி அறவே நிறுத்திவிட்டது.

இருந்தாலும் இப்போது இரண்டு வகை ஏற்பாடுகளின் கீழ் சிங்கப்பூர்-மலேசியா இரு தரப்புப் பயணத்தை அனுமதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறுகிய கால பயணிகளுக்கு பரஸ்பர அனுமதி வழங்குவது அத்தகைய ஏற்பாடுகளில் ஒன்று. தொழில், வேலை நிமித்தம் நீண்டகால குடிநுழைவு அனுமதி பெற்றவர்களை அனுமதிப்பது மற்றோர் ஏற்பாடு.

இத்தகைய பரஸ்பர ஏற்பாடுகளின்கீழ் சென்று வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளும் இருக்கும்.

இவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பலன் கொவிட்-19க்கு முன் இருந்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு பெருமூச்சுவிட இந்த ஏற்பாடுகள் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

சிங்கப்பூரை போல இதே போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்த தென் கொரியா போன்ற நாடுகளும் முயல்கின்றன.

கொரோனா காரணமாக விமானப் போக்குவரத்து, பயணத்துறை படுமோசமாக முடங்கிவிட்டது உண்மைதான். என்றாலும் இவற்றை மீண்டும் திறந்துவிடுவதில் அளவுக்கு அதிக அவசரம் காட்டினால் தொடர் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்.

அவசரம் காட்டிய பிரிட்டன் மீண்டும் பாதிப்பில் சிக்கிவிட்டது. கட்டுப்பாடுகளை அகற்றிய பிரிட்டனில் மீண்டும் கிருமித்தொற்று அதிகரித்ததால் ஸ்பெயின், பிரான்ஸ், மால்டா, நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு மறுபடியும் தனிமை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.

ஃபின்லாந்தும் இதர பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளைத் தனது பயண அனுமதி பட்டியலில் இருந்து அகற்றிவிட்டது.

ஆஸ்திரேலியாவைப் பார்க்கையில் அங்கு மிகக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் இப்போது விதிக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம், வெளியில் இருந்து வந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தவறியதுதான் என்பது தெரியவந்துள்ளது.

திரும்பியவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் கிருமி மீண்டும் தொற்றி அங்கு பிரச்சினை பெரியதாகிவிட்டது.

ஒட்டுமொத்தமாக உலக நிலவரங்களைப் பார்க்கையில் விமானப் போக்குவரத்து, பயணத்துறை முழுமையாக சிறகடித்துப் பறக்க இன்னமும் காலம் கனியவில்லை என்பது தெரிய வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உற்சாக நிலையை எட்டுவது என்பது கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைக்கும் வெற்றியையும் பயணிகள் நடந்து கொள்ளும் முறையையுமே பெரிதும் சார்ந்திருக்கும் என்பதுதான் உண்மை.

ஆகையால் பயணங்கள் மறுபடியும் அனுமதிக்கப்பட வேண்டுமானால் பயணிகளும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமானதாக இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!