கோலாலம்பூர்: இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களான இருவர் மலேசியா வந்துள்ளனர். மற்றொருவர் இம்மாதம் நடுப்பகுதியில் மலேசியா வருகிறார்.
அஜித் குமார், விஜய், சிலம்பரசன் டிஆர் ஆகிய மூவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர் என்று பெர்னாவின் செய்தியை ‘த ஸ்டார்’ மேற்கோள் காட்டியிருந்தது.
முதலில் கோலாலம்பூருக்கு வந்துள்ள அஜித் குமார், இன்றும் நாளையும் (டிசம்பர் 7,8) செப்பாங்கில் நடைபெறும் கார்ப்பந்தயப் போட்டியில் பங்கேற்கிறார்.
அவர், அஜித் ரெடாண்ட் என்ற குழுவை வழிநடத்துகிறார்.
மலேசிய அஜித் ரசிகர் சங்கத்தின் நிறுவனரான தேவந்திரன் பன்னீர்சிலம்பம், அஜித் குமாரை நேரடியாகச் சந்தித்து வரவேற்றுள்ளார்.
அஜித் கடைசியாக 2015ல் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்புக்காக மலேசியா வந்ததாக அவர் கூறினார்.
தற்போது கார்ப் பந்தயத்தில் அவர் பங்கேற்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்றார் அவர்.
அடுத்ததாக சிலம்பரசன் என்று அழைக்கப்படும் சிம்புவும் கோலாலம்பூர் வந்துள்ளார். எம்எஸ் கோல்ட்சின் 5வது பிரம்மாண்டமான கடையை சனிக்கிழமை (டிசம்பர் 5) அவர் திறந்து வைத்தார். ஜாலன் மஸ்ஜித் இந்தியாவில் இந்தக் கடை செயல்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மலேசியாவில் தங்கியிருந்த நடிகர் சிம்பு, அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இருவரும் உற்சாகமாக சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் காணொளி, புகைப்படங்கள் சமூக ஊடகங்களை கலக்கி வருகின்றன.
சிம்பு, சனிக்கிழமை திறப்பு விழாவுக்குப் பிறகு அஜித் பங்கேற்கும் கார்ப் பந்தய இடத்திற்குச் சென்று அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளார்.
உச்சக்கட்டமாக, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மலேசியா வருகிறார். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாபெரும் நிகழ்ச்சியில் 85,000க்கும் மேற்பட்ட விஜய்யின் ரசிகர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, இந்தியாவுக்கு வெளியே நடக்கும் விஜய்யின் ஆகப்பெரிய நிகழ்ச்சியாகவும் இருக்கும்.
பத்து மணி நேர தளபதி திருவிழாவில் 30 பாடகர்கள் கலக்கவிருக்கின்றனர். இசை அமைப்பாளர் அனிருத் நேரடியாகப் பங்கேற்று ஜனநாயகன் உட்பட விஜய்யின் படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பாடல்களை இசை மழையாகப் பொழியவிருக்கிறார்.

