அண்மையில் கோவாவில் நடைபெற்ற அனைத்துல திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட அடையாள விருதை (Best
ஃபிலிம் Award) வென்றிருக்கிறது ‘ஆக்காட்டி’ திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கியுள்ளார்.
அதென்ன ‘ஆக்காட்டி’?
“கொவிட் முடக்கக் காலத்தில் எழுதிய கதை இது. ஆக்காட்டி என்பது ஒரு பறவை. மனிதர்களையோ விலங்குகளையோ பார்த்தால் எதிரிகள் என நினைத்து வித்தியாசமாக சத்தம் எழுப்பி மற்ற பறவைகளை எச்சரிக்கும். மேலும், தன்னுடைய குஞ்சுகளைப் பாதுகாக்கவும் அவ்வாறு செய்யும்,” என்கிறார் ஜெயலட்சுமி.
ஆக்காட்டிப் பறவைகள் தரையில்தான் முட்டையிடுமாம். அந்த முட்டையை கரிசல் காட்டில் வைத்தால் முட்டை கரிசல் நிலத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும். செம்மண் காடு, பாறைகள் என எங்கும் முட்டை வைத்தாலும் அந்த இடத்தின் நிறத்திற்கு ஏற்ப முட்டை நிறமும் மாறிவிடுமாம்.
“தன் குஞ்சுகள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள தாய்ப் பறவை, நிறைமாதக் கர்ப்பிணியான கனகுதான் ஆக்காட்டி. அந்தப் பறவையின் குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டவள்தான் எனது கதையின் நாயகி கனகு.
“கணவன், குழந்தை, குடும்பம் என மொத்தத்தையும் தன் தோளில் சுமக்கிறவள். அதனால்தான் இப்படியொரு தலைப்பை வைத்தோம்,” என்கிறார் ஜெயலட்சுமி.
தென் மாவட்டங்களில் தாய் மாமன் சீர்வரிசை செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தத் தாய் மாமனின் சீர்வரிசை முறையை அடிப்படையாகக் கொண்ட கதை என்று இதைக் குறிப்பிடலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற கலாசாரத்தால் எளிய மனிதர்களின் வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்று இப்படத்தில் விரிவாக அலசி இருக்கிறாராம்.
“சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும் அதனால் மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்ய விரும்பினேன். அதுதான் இந்த ‘ஆக்காட்டி’. இப்படத்துக்கு முன் வேறொரு கதை உருவாக்கத்திற்காக சில ஊர்களுக்குப் போயிருந்தேன்.
“அப்போது அங்கே நடந்த சில சம்பவங்கள் என் மனத்தை மிகவும் பாதித்தன. அதை வைத்து புதுக் கதையை உருவாக்கினேன்,” என்று ஆக்காட்டி கதை உருவான விதத்தை விவரிக்கிறார் ஜெயலட்சுமி.
முழுக் கதையையும் வேகமாக எழுதி முடித்தும், சரியான தயாரிப்பாளர்கள் அமையவில்லையாம். நீண்ட முயற்சிக்குப் பிறகும் கதையைப் படமாக்க யாரும் முன்வராத நிலையில், இவரது மனைவியே உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
“நான் தயாரிப்பாளர்களை தேடி அலைவதைக் கண்டு ஒரு கட்டத்தில் என் மனைவி சுகந்திதான் எனக்கு நம்பிக்கை ஊட்டினார். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரால்தான் நான் இயக்குநர் ஆகியிருக்கிறேன்.
“அதேபோல் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், நிதிப்பற்றாக்குறையால் படம் நிற்கும் சூழலுக்கு வந்துவிட்டது. அப்போது இணை தயாரிப்பாளராக வந்து இணைந்த சுனில்குமார் செய்த உதவியால்தான் படத்தை முடிக்க இயன்றது.
“அதனால்தான் கோவா பட விழாவில் அளிக்கப்பட்ட விருதை நாங்கள் அனைவரும் சேர்ந்து பெற்றோம்,” என்கிறார் இயக்குநர் ஜெயலட்சுமி.
இவரது தாயாரின் பெயர்தான் ஜெயலட்சுமி. தாயின் பெயராலேயே அடையாளம் காணப்பட விரும்பும் இவர், ஜெயலட்சுமி என்ற பெயரிலேயே திரையுலகில் வலம் வருகிறார்.

