அதிக சம்பளம் வாங்குவதாக தன்னைப் பற்றி பரவும் செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இமான் அண்ணாச்சி. "சினிமாவில் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் நானும் திணறியிருக்கிறேன். வாய்ப்புத் தேடியபோது நண்பர்கள் சிலர் ஒரு தேநீர்க் கடையில் கூடிப் பேசுவோம். இப்போது அவர்களில் பலர் உயரமான இடங்களுக்குப் போய்விட்டனர். ஆனாலும் இன்னமும் சிலர் அங்கே அன்றாடம் வருவதைப் பார்க்கிறேன். அப்போது வருத்தமாக இருக்கும்.
"வாய்ப்புத் தேடுவோருக்கு ஓர் அறிவுரை. எல்லோரும் வருமானத்துக்கு ஒரு தொழிலை வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்புத் தேடிய காலங்களில் நான் காலையில் காய்கறி வியாபாரம் செய்வேன். இங்கு எல்லோருமே வலிகளைச் சுமந்து, கடந்து வந்தவர்கள்தான். "ஒருசிலர் நான் அதிக சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்க மட்டுமே அதிகச் சம்பளம் கேட்கிறேன். நல்ல கதை இருந்தால் எனக்குச் சம்பளம் இரண்டாம் பட்சம்தான். இதற்கு முன்பு ஒரு மேலாளர் இருந்தார். அவரை இப்போது மாற்றிவிட்டேன். இனி என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். என் சம்பளம் சம்பந்தமாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்," என்கிறார் அண்ணாச்சி.