விஷாலுக்குப் பாராட்டு

நடிகர் விஷால் ஒரு செயல்வீரர் என நடிகர் கமல்ஹாசன்  பாராட்டி உள்ளார். நடிகர் சங்க விவகாரத்தில் தாம் தவறு செய்துவிட்டதாகவும் பகிரங்கமாக அவர் தெரிவித்துள்ளார். உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) சார்பில் சிறப்பு மே தின விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில் இந்நிகழ்வு நடந்தது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத் ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். 

“இங்கே குழுமியிருக்கும் பெப்ஸி குடும்பத்தினரே, இங்கே மத்திய அமைச்சர் வந்திருக்கிறார். அவரிடம் இக்கட் டான நேரத்தில் கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள். “இது இக்கட்டான நேரமாக இருக்கலாம். ஆனால் வைக்கப்பட்டவை நியாயமான கோரிக்கைகள்தான். இப்போது வைக்கப் பட்டது, சாதகமான அரசியல் சூழல் என்பதால் அல்ல. இவை பல நாள் காத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். “இந்த நேரத்தில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிறப்புக் காரணம் ஏதுமில்லை. அமைச்சர் இங்கு வந்திருப்பதால் மட்டுமே இது சாத்தியமானது. அவர்களே இந்தக் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும். எனவே தயவு செய்து நிறைவேற்றுங்கள்.