அங்கனா: தனித்துவம் தரும் என் உயரம்

‘கபடம்’, ‘மேகா’, ‘மகாபலிபுரம்’ உள்பட சில படங்களில் நடித்தவர் அங்கனா ராய். முன்னணிக்கு வர அத்தனை தகுதிகள் இருந்தும் ஏனோ அவருக்கான இடம் கைநழுவிப் போய்க்கொண்டே இருக்கிறது. “தெலுங்கில் நான் எதிர்பார்க்கும் பாத்திரங்கள் அமைகின்றன. அதனால் அங்கு நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறேன். “கன்னடத்தில் சில படங்களில் நடிக்கிறேன். அண்மையில் தமிழில் ‘மனிதன்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தேன். அடுத்து சக்திவேல் வாசுவுடன் சேர்ந்து ‘7 நாட்கள்’ படத்தில் நடிக்கிறேன். இதில் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார்.

“என்னைப் பொறுத்தவரை சினிமாவில் உடனே முன்னுக்கு வரமுடியாது. கடின உழைப்பு, திறமை, அதிர்ஷ்டம் மூன்றும் நேர்க்கோட்டில் அமைந்தால் மட்டுமே ஜெயிக்கமுடியும். “என் உயரத்தைப் பார்த்து சில இயக்குநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், இது எனக்கு தனித்துவம் கொடுத்துள்ளது. நாகரிக பெண்ணாக மட்டுமின்றி கிராமத்துப் பெண் வேடத்திலும் என்னால் நடிக்கமுடியும். இரண்டு நாயகிகள் கொண்ட கதைகளிலும் நடிப்பேன்,” என்கிறார் அங்கனா.