மீண்டும் அதிரடி வேடத்தில் அனுஷ்கா

பல படங்களில் அதிரடி வேடத்தில் நடித்து அசத்திய அனுஷ்கா, மீண்டும் புதிய படத்தில் அத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளாராம். ‘அருந்ததி’ படத்தில் அதிரடி நாயகியாக நடித்து தமிழ், தெலுங்கில் பிரபலமானவர் அனுஷ்கா. இதையடுத்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ‘ருத்ரமாதேவி’ படத்தில் வாள்சண்டை, யானை சவாரி என்று அதிரடி காட்சிகளில் அசத்தினார். பின்னர் ‘பாகுபலி’யில் நடித்தார். இப்போது ‘பாகுபலி 2’ படத்தில் நடித்து வருபவருக்கு, இதிலும் வாள் சண்டைக் காட்சிகள் உள்ளனவாம். அடுத்து ‘பாஹ்மதி’ படத்தில் நடிக்கிறார்.

இதில் இதுவரை நடிக்காத அதிரடி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகத் தகவல். அதுமட்டுமல்ல, இப்படத்தில் அவரது தோற்றமும் ரசிகர்களை அசர வைக்குமாம். அஞ்சலி நடித்து வரும் ‘யார் நீ’ படத்தை இயக்கி வரும் அசோக் என்பவர் அனுஷ்காவின் இந்த புதிய படத்தை இயக்குகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. தொடர்ந்து நல்ல படங்கள், கதாபாத்திரங்கள் அமைவது கூடுதல் உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது என்று சொல்லும் அனுஷ்கா, தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தி இருப்பதாகவும் தகவல்.