வாக்களிக்க வலியுறுத்தும் சிம்பு பாடலுக்கு பலத்த வரவேற்பு

‘பீப்’ பாடலுக்கு முன்பே பல ஆல்பங்களைத் தயார் செய்து வெளியிட்டு வந்தார் சிம்பு. ஆனால் அவற்றுக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததில்லை. அதையடுத்து அவர் எழுதி பாடிய ‘பீப் சாங்’ வெளியாகி அவருக்கு பெரிய அளவில் பிரச்சினைகளைத் தந்தது. ஆனால் அதுவே இப்போது சிம்பு வெளியிட்டுள்ள வாக்களிக்க வலியுறுத்தும் பாடலுக்கு உலகம் முழுதும் பெரிய அளவில் வரவேற்பும் பாராட்டும் கிட்டியுள்ளது.

இந்த மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தவறாதீர்கள் என்று மக்களை வலியுறுத்தும் பாடலை அவரே புனைந்து அவரே இசை யமைத்துப் பாடியுள்ளார். “போடு மாமா” என்று தொடங்கும் அந்தப் பாடல் இப்போது லட்சக் கணக்கானோரால் கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளார்களாம். அதேபோல் 4,000 பேருக்கு மேலானோர் லைக் கொடுத்துள்ளார்களாம். இது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதாம். அதனால் பீப் பாடல் சர்ச்சையில் மனமுடைந்து போயிருந்த சிம்பு, வாக்குப் பாடல் வரவேற்பால் உற்சாகத்துடன் காணப்படுகிறாராம். சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு படம்’ கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அத்துடன் கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியீடு காணவிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தின் பாடல்கள் ஜனவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ‘தள்ளிப் போகாதே’ என்ற ஒரு பாடல் இப்போது இளையர்களிடம் முணுமுணுக்கப் படுகிறது.