‘தப்பான விஷயமல்ல அரசியல்; அதுவும் ஒரு தொழில்தான்’

இன்றைய தேதியில் இளம் நடிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர் விஷால். நடிகர் சங்கத்தை நாடறியச் செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் விஷால், “அரசியல் தப்பான விஷயமல்ல; அதுவும் ஒரு வகையான தொழில்தான். எம்எல்ஏ, - எம்பி வாங்கும் சம்பளத்தை விடவும் நடிகனாக நான் அதிகம் சம்பாதிக்கிறேன். அவர்களைக் காட்டிலும் முடிந்த அளவு மக்களுக்குச் சேவை செய்கிறேன்.

“எந்தக் கட்சியையும் சாராதவனாக சமூகத்துக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை,” என்று தெரிவித்துள்ளார். விஷால், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘மருது’ படம் நேற்று தமிழ்நாடு முழுதும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் விஷால்.

‘மருது’ கதை எப்படிச் செல்கிறது?

“மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியின் கதை. அந்தத் தொழிலாளிக்கும் அவன் பாட்டிக்கும் இடையே இருக்கும் பாசம், குடும்ப உறவுகளை விளக்குவதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம். “மூட்டை தூக்கும் இந்தப் பாத்திரம் எனக்கு மிகவும் புதியது. டிராயர் தெரிவது போல் கைலி கட்டி, மூட்டை தூக்கும் கொக்கியைச் சொருகிக்கொண்டு அலட்சியமாக நடந்து போவதெல்லாம் ரொம்பப் புதியது. லயோலா கல்லூரியில் படித்த என்னை ஒரு அசல் கிராமத்து இளைஞனாக மாற்றிக்காட்டியுள்ளார் இயக்குநர் முத்தையா. “எனக்கும் சூரிக்கும் 50 கிலோ மூட்டையை எப்படி லாவகமாகத் தூக்குவது என இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். எனக்கு கழுத்து வலியே வந்துவிட்டது.”

என்னதான் சரத்குமாருடன் மல்லு கட்டினாலும் அவருக்கு மருமகனாகப் போறீங்கன்னு ஒரு செய்தி இருக்கே?

“வரலட்சுமியை சின்ன வயதில் இருந்தே தெரியும். எங்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக நட்புள்ளது. இப்போது எனக்கு திருமண ஆசையில்லை. நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதுதான் என் இப்போதைய குறிக்கோள். 2018 ஜனவரி 14ல் நடிகர் சங்கக் கட்டடத் திறப்பு விழா. அதற்கு அடுத்த நாளே என்னுடைய திருமணத் தேதியைப் பகிரங்கமாக அறிவிப்பேன். “தொடர்ந்து, இப்போது வேறு சில கதைக்களம் உள்ள படங்களில் நடிக்கிறேன். ‘கத்திச் சண்டை’, ‘துப்பறிவாளன்’ என வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களில் நடிக்கிறேன். வில்லத்தனமான பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படு கிறேன், விரைவில் நடிப்பேன்,” என்று உறுதியுடன் கூறுகிறார் விஷால்.

 

“மருது’ படத்துக்காக ஸ்ரீ திவ்யா என்னை அடிச்சிருக்காங்க; மிரட்டியிருக்காங்க. ஸ்ரீதிவ்யா பாத்திரத்துக்கு இந்தப் படத்தில் ரொம்ப முக்கியத்துவம்
உள்ளது,” என்று கூறியுள்ளார் விஷால். “படத்தில் வில்லன்களை மட்டுமல்ல; திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பவர்களையும் விஷால் அடித்து துவம்சம் செய்துவிடுவார்” என ‘மருது’ படம் குறித்து நேற்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

 

Loading...
Load next