‘இது நம்ம ஆளு’ நமக்கேத்த ஆளு

சிம்பு, நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என்று வெகு நாட்களாக காத்திருந்த ‘இது நம்ம ஆளு’ படம் உலகெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ஐடி கம்பெனி’யில் மேலாளராக வரும் சிம்பு, தன்னை வருத்திக்கொள்ளாமல் இயல்பாக வசனம் பேசி, நடித்து ரசிகர்களை அசத்தியிருக்கிறார். காதல் பற்றி ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் ‘பஞ்ச்’ வசனங்கள் இன்றைய காதலர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். வழக்கமான சண்டைக் காட்சிகள் என்று இல்லாமல், ஒரு பெண்ணிடம் அடங்கிப் போகும் வாலிபராக இந்தப் படத்தில் நடித்துக் கைத்தட்டல் பெறுகிறார்.

நயன்தாரா ஓர் அழகான குடும்பப் பெண்ணாக அனைவர் மனத்திலும் எளிதாக பதிகிறார். ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்தை ஆக்ரோஷமாக காட்டினாலும் பின்னர் காதலுக்குள் சிக்கியவுடன் உருகி உருகி காதலிக்கிற சாதாரணப் பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்கிறார். சிம்புவும், நயன்தாராவும் பேசும் காட்சிகள் திரையில் நீண்ட நேரமாக வந்தாலும் படத்தை கலகலப்பாக கொண்டுபோவது சூரியின் நகைச்சுவைதான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிடையில் சூரி கொடுக்கும் வசனங்கள் எல்லாமே கலகலப்பு. படம் முழுவதும் சிம்புகூடவே பயணமாகியிருக்கும் சூரிக்கு இந்தப் படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். ‘சிஐடி’யாக வரும் சந்தானம் ஒரு சில காட்சிகளே வந்தாலும் ரசிகர்களைக் கலகலப் பாக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா சில காட்சிகளிலே வந்தாலும் அழகாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சிம்பு = ஆண்ட்ரியா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும் ஜெயப்பிரகாஷ், மதுசூதனன், உதய் மகேஷ், அர்ஜுனன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து ரசிகர்களைக் கவர்ந்திருக் கிறார்கள்.

சின்னப் பசங்களை வைத்துப் படம் எடுத்து வந்த பாண்டிராஜ் ஒரு புதுமுயற்சியாக முழுவதும் இளைஞர்களைக் கவரும் விதத்தில் ஒரு காதல் படத்தை எடுக்க முன் வந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய பலமே வசனங்கள் தான். சிம்புவும்=நயன்தாராவும் பேசிக்கொள்ளும் வசனங்கள் உண்மையான காதலர்கள் இயல்பாக எப்படி பேசிக்கொள்வார்களோ அதுபோல் அமைத்திருப்பது சிறப்பு அம்சம். இதற்காக பாண்டிராஜை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம். குறளரசன் படத்தின் மற்றொரு நாயகன் என்றுகூடச் சொல்லலாம். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பதை இந்தப் படத்தில் அவர் அமைத்திருக்கும் பின்னணி இசையின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

பாடல்கள் ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்தாலும் அதைக் காட்சிப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தோன்றுகிறது. சிம்பு- அதா சர்மா இணைந்து ஆடும் பாடல் திரையரங்கத்தில் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறது. மொத்தத்தில் ‘இது நம்ம ஆளு’ நமக்கேத்த ஆளுதான்.