விவசாயி ஆகிறார் விஷால்

நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின், நெல் திருவிழாவில் கலந்து கொண்டார். “விவசாயிகளின் சிரமங்கள் பற்றி செய்தித்தாளில் படிப்பதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது. நாமும் அவர்கள் போல் விவசாயம் செய்தால்தான் அவர்களின் சிரமங்கள் புரியும். அதனால் நான் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன்,” என்று விஷால் அறிவித்திருக்கிறார்.

விழாவில் விஷால் பேசும்போது “எந்த நிலையிலும் விவசாயிகள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கக்கூடாது. பிரச்சினைகளுக்குத் தற்கொலையைத் தேர்ந்தெடுத்தால் தமிழ்த் திரையுலகில் பாதிப்பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள். அதனால் தற்கொலை முடிவைக் கைவிட்டு வாழ்ந்து போராடி வெற்றி பெறுங்கள். “விவசாயியாக வாழ்வதே எனது வாழ்வின் நோக்கம். டெல்டா பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய இருக்கிறேன். அப்போதுதான் விவசாயிகளின் உணர்வு களைப் புரிந்து கொள்ளமுடியும். எனக்கு விதை விதைக்கும் பணி மிகவும் பிடிக்கும்.

“இந்திய பொருளியலின் முதுகெலும்பு என விவசாயத்தை வருணிக்கிறார்கள். பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். “விவசாயிகளுக்குத் தன்னம்பிக்கை வரவேண்டும். தஞ்சாவூர் விவசாயி பாலன் பிரச்சினைக் குறித்துக் கேள்விபட்டதும் வேதனை அடைந்தேன். சில நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவி செய்தேன். “வருங்காலங்களிலும் தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்பேன்,” என்றார் விஷால்.