சந்தானம் நடிப்பில் வெளிவந்துள்ள 'தில்லுக்கு துட்டு' படத்தின் சிறப்புக் காட்சி பள்ளிக் குழந்தைகளுக் காக திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்படத்தில் நடித்த ஆனந்த்ராஜ் செய்திருந்தார். தமிழ்ச் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்த ஆனந்த்ராஜ், தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார். 'நானும் ரவுடிதான்' படத்தில் இவர் முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நகைச்சுவையில் அசத்தி வருகிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இவருடைய நகைச்சுவை குழந்தைகளை பெரிதும் ஈர்த்தது. இதையடுத்து பள்ளிக் குழந்தைகளுக்காக 'தில்லுக்கு துட்டு' படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்தார் ஆனந்த்ராஜ். சென்னை ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படத்தை ஏராளமான குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். இப்படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். சந்தானம், சனாயா, கருணாஸ், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் நகைச்சுவையும் திகிலும் கலந்த படமாக வெளிவந்துள்ளது.