விமர்சித்த தயாரிப்பாளர் சிவா மீது ஜெய் கடும் அதிருப்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் பட விழாவில் நடிகர் ஜெய்யைப் பிரபல தயாரிப்பாளர் சிவா நேரடியாக விமர்சித்தார். நடிகர் ஜெய் தம்மை முன்னணி நடிகர் அஜித்துக்கு இணையாக நினைத்துவிடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். ‘சென்னை 28’ பட விழாவுக்கு நடிகர் ஜெய் வரவில்லை. இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நடித்த நிதின் சத்யா தவிர்த்து மற்ற கலைஞர்கள் அனைவரும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தனர். இப்படத்தில் தயாரிப்பாளர் சிவாவும் நடித்துள்ளார். படத்தை விளம்பரப் படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வை ஜெய் புறக்கணித்தது சிவா உட்பட படக்குழுவின ருக்குக் கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

இதை மேடை யில் பேசும்போது பகிரங்கமாக வெளிப் படுத்தினார் சிவா. “அஜித் சார் தான் நடிக்கும் படம் தொடர்பான எந்த நிகழ்ச்சி களில் கலந்துகொள்ளமாட்டார். ஆனாலும் கூட, அஜித் அவருடைய எல்லாப் பட நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதால் அவருடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரிக்கிறது. “அஜித்தைப் பட நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது. திரையில் மட்டுமே பார்க்க முடியும். எனவே ரசிகர்களுக்கு அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுகிறது. அந்த ஆர்வமே அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. “அவரும் கூட திரையுலகில் குறிப்பிட்ட நிலையை எட்டிப் பிடித்த பிறகே சில முடிவுகளை எடுத்தார். ஆனால் சில நடிகர்கள் நடிக்க வந்த தொடக்க காலத்திலேயே அஜித்தைப் போன்று முடிவெடுத்தால் காணாமல் போய்விடுவார்கள். எனவே சில நடிகர்கள் இதை உணர வேண்டும்.

“அஜித் கடும் உழைப்பால் நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது உயரத்தை எட்டிப் பிடிக்க வேண்டுமானால் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் யாரையும் திட்டுவதற்காக இவ்வாறு சொல்லவில்லை,” என்றார் தயாரிப்பாளர் சிவா. இதனால் அரங்கில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே செய்தியாளர்கள், ஜெய்யைத்தான் மறைமுகமாக இப்படி விமர்சிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்குச் சிறிதும் தயக்கமின்றி, “ஆமாம். ஜெய்யைத்தான் இப்போது குறிப்பிட்டேன். அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்றார் சிவா. இதற்கிடையே தயாரிப்பாளர் சிவாவின் பேச்சு குறித்துக் கேள்விப்பட்ட ஜெய், அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம். தன்னால் பட நிகழ்வில் பங்கேற்க இயலாது என அவர் முன்கூட்டியே வெங்கட் பிரபுவிடம் தகவல் தெரிவித்துவிட்டாராம்.

Loading...
Load next