ரஜினி மகள் சௌந்தர்யா விவாகரத்துக் கேட்டு வழக்குப் பதிவு?

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தொழிலதிபரான தனது கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்துக் கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படு கிறது. இதற்கிடையே, அஸ்வின்- சௌந்தர்யா தம்பதியிடையே சின்ன சண்டை தான் என்றும் அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கண்டிப்பாக இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் எனவும் நம்பப்படுகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு அண்மையில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய இந்த இணை, ஒரே ஒருமுறை மட்டுமே சர்ச்சையில் சிக்கியது.

திருமணத்துக்குப் பிறகு, ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினி காந்த் என்பதிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் என்று மாற்றிக்கொண்டார். ஆனால், சௌந்தர்யா தனது பெயரை சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே தொடர்ந்தபோது எழுந்த சர்ச்சைக்கு ‘என்றுமே நான் ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். இதனால், சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினை என்று வந்தவையெல்லாம் வதந்திகளாக இருந்ததே தவிர, அவற்றின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப் படவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக, இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த விவாகரத்துப் பற்றிய தகவலின் உண்மைத் தன்மை அறிய அஸ்வினைத் தொடர்புகொண்டபோதுகூட அவர் பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading...
Load next