‘ரெமோ’ படத் தயாரிப்பாளரின் துணிச்சலான முடிவு

திருட்டு டிவிடியைத் தடுக்க ‘ரெமோ’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஒரு துணிச்சலான முடிவை எடுத் துள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘ரெமோ’. இப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாகிறது. வழக்கமாகத் தமிழகத்தில் வெளியாவதற்கு முந்தைய நாளே வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்குக் கணிசமான தொகை கிடைக்கும். ஆனால் இந்தக் காட்சியின் போதுதான் புதிய படம் திருட்டுத்தனமாகப் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் படம் வெளியாகும் நாளில் இணையதளங்களில் வெளியாகிறது. திருட்டு டிவிடியும் இதன் மூலம் தான் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, வருமானம் போனாலும் பரவாயில்லை. வெளிநாடுகளில் ‘ரெமோ’ சிறப்புக் காட்சிகளை நடத்துவது இல்லை என்று இதன் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். எனவே வருகிற 7ஆம் தேதி தமிழகத்தில் தான் ‘ரெமோ’வின் முதல் காட்சி திரையிடப்படும். இதன் மூலம் படம் முன்னதாக இணையதளத்தில் வெளியாகாது. திருட்டு டிவிடியும் தயாராகாது என்று நம்பி தயாரிப்பாளர் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளாராம்.