வில்லியாக அவதாரம் எடுக்கும் திரிஷா

அண்மையில் திரிஷா ‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. அதனால் அதுபோன்ற வேடங்களை விரும்பி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தற்பொழுது அவர் நடித்து முடித்திருக்கும் படம் ‘மோகினி’. நாயகன் இல்லாத இந்தப் படத்தில் திரிஷாவுக்கு திரிஷாவே வில்லியாக நடித்திருக்கிறார். திரையில் 10 ஆண்டுகளைத் தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தமிழ்த் திரைகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்தால் நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர் தற்பொழுது அதுபோன்ற படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்தெடுத்து நடிக்கிறார்.

அல்லது முன்னணி இல்லாத நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அப்போதுதான் அவருக்குத் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் அவர். தற்பொழுது மாதேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘மோகினி’ படம் அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறது கோலிவுட். காரணம், எத்தனையோ பேய்ப் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்தப் படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறதாம்.