‘மதுர வீர’னாக களமிறங்கும் வாரிசு

அறிமுகப் படம் தோல்வி கண்டாலும் பலமான பின்புலம் உள்ளது எனில் இளம் நடிகர்கள் பழைய பலத்துடன் களம் காணலாம். அத்தகைய அதிர்ஷ்டம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுக்கு உள்ளது. அவர் அறிமுகமான ‘சகாப்தம்’ தோல்வியடைந்த போதிலும், ‘மதுர வீரன்’ படத்தின் மூலம் மீண்டும் களம் கண்டுள்ளார். இப்படத்தை பி.ஜி.முத்தையா இயக்குகிறார். முன்னதாக அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் ஒப்பந்தமானார் சண்முகபாண்டியன். இதில் அவரது தந்தை விஜயகாந்தும் நடித்தார். ஆனால் தொடங்கிய வேகத்திலேயே இப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அடுத்த படத்துக்கு பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் சண்முகபாண்டியன். இறுதியாக ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கூறிய கதை பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தமானார். ‘மதுர வீரன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் சுவரொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.