இணைய முறைகேடுகள்: ஆர்ஜே பாலாஜியின் யோசனை

இப்போதெல்லாம் பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக ஆர்.ஜே. பாலாஜி பேசுவதையும் செய்வதையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ’இவன் தந்திரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வில் இவர் பேசியது திரையுகத்தினர் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அப்படியென்ன பேசினார்? “நம்மால் தொழில்நுட்பத்தை அழிக்க முடியாது; மாறாக நாமும் தொழில்நுட்பத்தோடு வளர வேண்டும். கமல் சார் இதைத்தான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார். “இணையத்தில் திரைப்படங்கள் வெளியாவது தொடர்பாக வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்து பேசினால் தீர்வு கிடைக்காது.

மாறாக, தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் நிபுணர்களுடன் கலந்து பேசி முறைகேடுகளைத் தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும். “தொலைக்காட்சி, இணையம் வழி எப்படிச் சம்பாதிக்க முடியும் என்பதை யோசித்து, அதை நோக்கிச் செல்ல வேண்டும். “இணையத்தில் புதிய படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகளைக் கண்டு பிடித்து விடலாம். ஆனால், அதுவே தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வாகி விடாது” என்று இந்த நிகழ்வில் ஒரே போடாகப் போட்டார் ஆர்.ஜே. பாலாஜி.